பெங்களூர் ரயிலில் தீ: 26 பேர் பலி

By செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், புட்டபர்த்தி அருகே சென்றுகொண்டிருந்த பெங்களூர்-நண்டெட் எக்ஸ்பிரஸ் ரயிலில் சனிக்கிழமை அதிகாலை நேரிட்ட தீ விபத்தில் 26 பயணிகள் உயிரிழந்தனர். 13 பேர் பலத்த தீக்காயமடைந்தனர்.

பெங்களூரில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் நண்டெட் நகருக்கு வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணிக்கு பெங்களூர்-நண்டெட் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. 16 பெட்டிகள் கொண்ட அந்த ரயில் சனிக்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு புட்டபர்த்தி  சத்ய சாய் பிரசாந்தி நிலையம் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது பி-1 ஏசி 3 டயர் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. அந்தப் பெட்டியில் மொத்தம் 65 பயணிகள் இருந்தனர். அதிகாலை நேரம் என்பதால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அவர்கள் தீயின் வெப்பத்தால் அலறியடித்து எழுந்தனர்.

அந்தப் பெட்டியில் இருந்த இளைஞர்கள் கழிவறை ஜன்னல்களை உடைத்து வெளியே தப்பினர். ஆனால் முதியவர்கள், பெண்களால் முண்டியடித்து தப்ப முடியவில்லை. துரதிர்ஷ்டவசமாக ரயிலின் கதவுகளையும் உடனடியாக திறக்க முடியவில்லை. இதனால் பெட்டிக்கு உள்ளேயே சிக்கிக் கொண்ட 26 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 2 மாத பெண் குழந்தை, 12 பெண்களும் அடங்குவர்.

13 பேர் பலத்த தீக்காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

டிரைவரின் சாமர்த்தியம்

கொத்தசேவூர் ரயில் நிலையத்தை எக்ஸ்பிரஸ் நெருங்கியபோது ஏசி 3 டயர் பெட்டியில் தீப்பிடித்திருப்பது இன்ஜின் டிரைவருக்கு தெரியவந்தது. உடனடியாக சமயோசிதமாக செயல்பட்ட டிரைவர், மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் இருக்க தீப்பிடித்த பெட்டியை மட்டும் தனியாக கழற்றிவிட்டார். இதனால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

தமிழக பயணிகள் உயிர் தப்பினர்

விபத்துக்குள்ளான ரயிலில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த தனலட்சுமி, வங்கி ஊழியர் நடேஷ் (36), அவரது மனைவி விஜிதா (33), அவர்களது குழந்தை தனு (5) ஆகியோரும் சென்றனர். அவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். தீக்காயமடைந்துள்ள அவர்கள் தற்போது அனந்தபூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

20 பேரைக் காப்பாற்றியவர் மனைவியைப் பறிகொடுத்தார்

பெங்களூரைச் சேர்ந்த சரண், விபத்துக்குள்ளான பெட்டியில் பயணம் செய்தார். தீப் பிடித்தவுடன் ஜன்னலை உடைத்து வெளியே தப்பிய அவர் 20 பயணிகளை வெளியே இழுத்து காப்பாற்றினார். ஆனால், அவரது மனைவியும் மாமனாரும் தீயில் சிக்கி உயிரிழந்து விட்டனர்.

உயிர் பிழைத்தவர்களில் ஒருவரான ராமமூர்த்தி கூறியபோது, தீப்பிடித்தவுடன் கதவுகளை நோக்கி பயணிகள் ஓடினர். ஆனால் எல்லோராலும் வெளியேற முடியவில்லை. சிலர் தீயில் சிக்கிக் கொண்டனர் என்று கண்ணீர் மல்க கூறினார்.

15 நிமிடங்களுக்குள் அனைத்தும் நாசம்

மற்றொரு பயணி பாட்டீல் என்பவர் கூறியதாவது:

தீ ஜூவாலைகள் என் மீது பட்டு அலறியடித்து எழுந்தேன். நான் அக்னி குண்டத்துக்கு நடுவில் இருப்பதுபோல் இருந்தது. நானும் எனது தந்தையும் ரயிலில் இருந்து குதித்து உயிர் தப்பினோம். ஆனால் அடுத்த 15 நிமிடங்களுக்குள் எல்லாமே முடிந்துவிட்டது. ரயில் பெட்டி முழுமையாக எரிந்து பயணிகள் பலியாகி விட்டனர். என் வாழ்நாளில் இதுபோன்ற கோரத்தை பார்த்தது இல்லை என்றார்.

ரயில்வே அமைச்சர் ஆய்வு

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தச் சம்பவம் மிகவும் துயரமானது, துரதிர்ஷ்டவசமானது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பெங்களூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 9 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பலரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு இருப்பதால் டி.என்.ஏ. சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணைக்கு உத்தரவு

முதல்கட்ட விசாரணையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த விபத்து தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்துவார்.

தீ விபத்து எதனால், எப்படி நேரிட்டது, போதிய பராமரிப்பின்மை காரணமா, ஊழியர்களின் கவனக்குறைவு காரணமா அல்லது மின் கசிவு காரணமாக விபத்து நேரிட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். ஊழியர்கள் கவனக்குறைவாக இருந்தது விசாரணையில் தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரயில்வே வாரியம் சார்பில் விசாரணை நடந்தாலும் விமான போக்குவரத்து துறை சார்பிலும் தனியாக விசாரணை நடத்தப்படும்.

ரயில் பயணத்தின்போது சிலர் வெடிமருந்துகளை எடுத்துச் செல்கின்றனர். சிலர் மதுபான பாட்டில்களை மறைத்து எடுத்துச் செல்கின்றனர். சிலர் ரயிலுக்குள்ளேயே சிகரெட் புகைக்கின்றனர். இதுவும் விபத்துக்கு முக்கிய காரணங்கள். இப்போது நேரிட்டுள்ள விபத்தில் இவை குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

19 mins ago

ஜோதிடம்

29 mins ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்