ஜல்லிக்கட்டு மீதான நிரந்தர சட்டம் அமலாவதில் தாமதம்: குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் சட்டத் திருத்த மசோதா

ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டத் திருத்த மசோதா குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் இருப் பதால் அதன் மீதான தடை நிரந்தர மாக நீங்க சற்று தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘மிருக வதை தடுப்புச் சட்டம் 1960’ மத்திய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியல் எண் 3-ல் இடம் பெற்றுள்ளது. இதில் திருத்தம் செய்து ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க இயற்றப்படும் அவசர சட்டம் குடியரசுத் தலைவரின் நேரடி பரிசீலனைக்கு சென்று வர வேண்டும் எனக் கருதப்பட்டது.

ஆனால், மாநில அரசின் அவசர சட்டத்தை குடியரசுத் தலைவர் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலிக்கலாம் என கடைசி நேரத்தில் தெரிய வந்தது. எனவே, சட்டம், சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரம் ஆகிய மூன்று மத்திய அமைச்சகங்களின் கருத்துக்களைப் பெற்ற பின் மத்திய உள்துறை அமைச்சகமே குடியரசுத் தலைவர் சார்பில் பரிசீலனையை முடித்தது.

பிறகு கடந்த 21-ம் தேதி அதை, நேரடியாக தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது. இதனால், அவசர சட்ட முன்வடிவு தமிழக அரசால் அனுப்பப்பட்ட 3 தினங்களில் பரிசீலனை முடித்து இயற்றப்பட்டது. இதே முறையை சட்டத் திருத்த மசோதாவிலும் பின்பற்ற வேண்டும் எனக் கருதப்பட்டது.

இந்த மசோதாவை குடியரசுத் தலைவர் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகமே பரிசீலனை செய்யும் என நேற்று முன்தினம் ‘தி இந்து’வில் செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு மீதான அவசர சட்டம் போல் அதன் சட்டத் திருத்த மசோதாவிலும் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்ச அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “அவசர சட்டம் மற்றும் சட்டத் திருத்த மசோதா ஆகிய இரண்டுக்கும் ஒரே வரைமுறை என தொடக்கத்தில் கருதினோம். ஆனால் சட்டத் திருத்த மசோதாவாக இருந்தால் குடியரசுத் தலைவரின் நேரடி பரிசீலனைக்கு சென்று வர வேண்டும் என்று கடைசி நேரத்தில் தெரிய வந்தது.

எனவே, மூன்று மத்திய அமைச்சகங்களின் கருத்துக்குப் பிறகு நேற்று முன்தினம் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. குடியரசுத் தலைவரின் பரிசீலனை முடிந்ததும் அதை தமிழக அரசுக்கு உடனடியாக அனுப்பி வைப்போம். இதன் காரணமாக ஜல்லிக்கட்டுக்கான தடையை நிரந்தரமாக நீக்குவதில் கூடுதலாக சில நாட்கள் ஆகலாம்” என்றனர்.

மிருக வதை தடுப்பு சட்டம் 1960-ல் சில திருத்தங்களை செய்ய வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த திங்கள்கிழமை நிறை வேற்றப்பட்டது. இதை அமல் படுத்தும் முகவரான மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு அனுப்பி இருந்தது.

அவசர சட்டத்தின் முன்வடிவு போல் இந்த மசோதாவை பரிசீலிப்பதில் மத்திய உள்துறை அமைச்சகம் விரைந்து செயல்பட்டது. இப்பணி முடிந்து இன்று முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதில் தற்போது சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் பரிசீலித்து ஒப்புதல் வழங்கிய பிறகே ஜல்லிக்கட்டு மீதான தடை நிரந்தரமாக நீங்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்