மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து மீண்டும் சர்ச்சை: மாணவர் பேரவைத் தேர்தலில் பாஜக முறைகேடு புகார்; கேஜ்ரிவால் சரமாரி கேள்வி

By செய்திப்பிரிவு

டெல்லி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில், பாஜக ஆதரவு ஏபிவிபிக்கு அதிக வாக்குகள் பதிவாகும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. தனியார் நிறுவனம் வாக்குப்பதிவு இயந்திரத்தை தயாரித்துள்ளது பற்றி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவைத் தேர்தல் நேற்று நடைபெற்றது. தலைவர், துணை தலைவர், செயலாளர், இணை செயலாளர் ஆகிய நான்கு பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பலத்த போட்டி காணப்பட்டது.

இந்த தேர்தலில், பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான ஏபிவிபி எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், மற்றும் காங்கிரஸ் ஆதரவு மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ எனப்படும் இந்திய தேசிய மாணவர் சங்கம் இடையே முக்கிய போட்டி நிலவியது.

பொதுத்தேர்தல்களில் நடத்தப்படுவது போலவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்டன. வாக்குப்பதிவு முடிந்து நேற்று மாலை எண்ணிக்கை நடைபெற்றது.

தலைவர் பதவிக்கு ஏபிவிபி சார்பில் போட்டியிட்ட அங்கிவ் பசோயா வெற்றி பெற்றார். மேலும் ஏபிவிபியின் சார்பில், துணை தலைவராக சக்திசிங், இணை செயலாளராக ஜோதி சவுத்ரி ஆகியோரும் வெற்றி பெற்றனர். செயலாளர் பதவியை, என்எஸ்யுஐயை சேர்ந்த ஆகாஷ் சவுத்ரி கைப்பற்றினார்.

ஆம் ஆத்மி மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிட்டபோதிலும் வெற்றி பெறவில்லை.

இந்தநிலையில் இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், அதில் மோசடி நடந்துள்ளதாக என்எஸ்யுஐ குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த ஆகாஷ் சவுத்ரி கூறுகையில் ‘‘டெல்லி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், தனியார் நிறுவனங்களில் இருந்து வாங்கப்பட்டுள்ளன. இதில் மோசடி நடைபெற்றுள்ளது. பாஜக ஆதரவு ஏபிவிபிக்கு அதிக வாக்குகள் பதிவாகும் வகையில் இயந்திரம் திட்டமிட்டே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது’’ எனக் கூறினார்.

வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடு நடந்ததாக கூறி என்எஸ்யுஐ அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் சற்று நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே புகார் குறித்து தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் விளக்கம் அளித்துள்ளார். அதில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனியாரிடம் இருந்து வாங்கப்பட்டது தான் என்றாலும், அதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அரவிந்த்த கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தனியார் யாரும் தயாரிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ முடியாது என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே கூறியுள்ளது. டெல்லி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் தனியார் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது உண்மை என்றால்? அது எப்படி நடந்தது? தேர்தல் ஆணையத்தின் அனுமதி இன்றி தனியார் நிறுவனம் வாக்குப்பதிவு இயந்திரம் தயாரிப்பது குற்றம் ஆகாதா?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்