வேலை நிறுத்தம் தேவையில்லாதது; எரிபொருள் விலை உயர்வை எதிர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை: மம்தா பானர்ஜி

By செய்திப்பிரிவு

நரேந்திர மோடி அரசின் நடவடிக்கைகளை காங்கிரஸ் எதிர்ப்பதை திரிணாமூல் காங்கிரஸ் ஆதரிக்கிறது. அதேநேரத்தில் வேலை நிறுத்தம் என்ற பெயரில் பொருளாதாரம் மற்றும் மனித சக்திகள் விரயம் ஆவதை வரவேற்க முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாடு தழுவிய பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்) பிரிவும் மற்ற இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து இதே பிரச்சினைகளுக்காக நேற்று காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டன.

எதிர்க்கட்சிகள் நடத்திய இப்போராட்டம் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற நிலையில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. இவ்வகையில் மேற்கு வங்க மாநிலமும் பந்த்தில் கலந்துகொள்ளாமல் எப்பொழுதும்போல அரசுப் பணிகளும், கல்வி நிறுவனங்களும் தனியார் மற்றும் வியாபார தொழில் நிறுவனங்களும் இயங்கின.

இதுகுறித்து மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:

''பாஜக தலைமையிலான மத்திய அரசின் கீழ் 'ஒரு பொருளாதாரப் பேரழிவு மற்றும் தவறான நிர்வாகம்' நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்காக மேற்கு வங்கத்தில் வேலை நிறுத்தத்தை அனுமதிக்க முடியாது என டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமைக்கு தகவல் அனுப்பிவிட்டேன்.

மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை ஒருநாள் வேலை நிறுத்தம் என்பது 80 லட்சம் மனித சக்தி விரயமாகக் கூடிய ஒரு விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன். மேற்கு வங்கம் இப்போதுதான் மேலே வரப் பார்க்கிறது.

எனவே, எந்தவகையான கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தம் என்றாலும் அதை ஆதரிக்கமுடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம். யார் அழைத்தது என்பதைப் பார்க்காமல் தார்மீக ரீதியாக நாங்கள் இந்த பந்த்தை ஆதரிக்கிறோம். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

காங்கிரஸ் தலைவர் அகமது படேல், எங்களையும் வெள்ளி அன்றே போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். பெட்ரோல் உயர்வுப் பிரச்சினையை எதிர்ப்பது என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் நாங்கள் பந்த்தில் பங்கேற்க மாட்டோம் என்று அவரிடம் நான் சொல்லிவிட்டேன். அதனால்தான் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தத்திற்கு எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை நாங்கள் எடுத்தோம்.

இப்பிரச்சினைக்கு சரியான தீர்வு வேலை நிறுத்தம் என்று நாங்கள் கருதவில்லை. இந்த வேலை நிறுத்தத்தில் ஏராளமான பொருளாதாரம் விரயமாகிறது. அது மக்கள் பணம். ஒரு பந்த் என்பது ஒரு தலையாய, உச்சபட்ச தேவைக்காக மட்டுமே நடத்தப்பட வேண்டுமென்று நான் தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன்''.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

53 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்