300 இடங்களில் வெல்ல எத்தனை வீரர்களை உயிர்த் தியாகம் செய்ய வைக்கப் போகிறீர்கள்?: எடியூரப்பா பேச்சுக்கு அர்விந்த் கேஜ்ரிவால் காட்டம்

By பிடிஐ

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களில் இந்திய விமானப் படையினர் நடத்திய தாக்குதலால் பிரதமர் மோடிக்கு ஆதரவான நிலை உருவாகி இருக்கிறது என்று கூறிய பாஜக தலைவர் எடியூரப்பா பேச்சுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ தீவிரவாத முகாம்கள் மீது குண்டு வீசி இந்திய விமானப்படை அழித்தது. இது குறித்துக் கடந்த இரு நாட்களுக்கு முன் கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். அதில், ''இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்குப் பின் பிரதமர் மோடிக்கு ஆதரவான அலை அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் 22 இடங்களைக் கைப்பற்றுவது உறுதி'' என்று பேசினார்.

எடியூரப்பா பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. வீரர்களின் உயிர்த்தியாகத்தை அரசியல் ஆக்குகிறது பாஜக என்று பேசி வருகின்றன. எடியூரப்பா பேச்சுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கட்சியான தெஹ்ரிக் இன்சாப் கட்சியும் கண்டித்துள்ளது.

இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவையில் நேற்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் எடியூரப்பா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் பேசுகையில், "இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை பாஜக அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்த நினைக்கிறது.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான எடியூரப்பா சர்ச்சைக்குரியவாறு பேசியுள்ளார். 40 வீரர்களைப் பலிகொடுத்து இருக்கிறோம். அதனால், 22 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி என்று பேசியுள்ளார். நான் கேட்கிறேன், மக்களவைத் தேர்தலில் 300 இடங்களில் பாஜக வெற்றி பெற இன்னும் எத்தனை வீரர்களை உயிர்த்தியாகம் செய்ய வைக்கப் போகிறது? எத்தனை பெண்கள் விதவையாகப் போகிறார்கள், எத்தனை வீரர்களின் குடும்பங்களை நீங்கள் அழிக்கப்போகிறீர்கள். பாஜக போன்ற கட்சியையும், அரசையும் நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது.

பாகிஸ்தானுடன் பதற்றமான சூழல் இருந்துவரும்போது, நம்முடைய பிரதமர் மோடி, பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசுவதைத் தேசம் பொறுத்துக்கொள்ள முடியாது. பாஜக தேர்தல் தொகுதிகளைக் கணக்கிட்டு வருகிறது" எனக் கண்டித்தார்.

ஆனால், பாஜக தலைவர் எடியூரப்பா, தன்னுடைய பேச்சு திரித்து கூறப்பட்டுள்ளதாகவும், தான் அவ்வாறு பேசவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

''கர்நாடகாவில் சூழல் பாஜகவுக்குச் சாதகமாக இருக்கிறது என்று பலமுறை கூறியிருக்கிறேன். அதைத்தான் இப்போதும் கூறினேன். அது தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டுள்ளது'' என்று எடியூரப்பா விளக்கம் அளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

20 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 mins ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

மேலும்