ராணுவ மருத்துவப் பரிசோதனையை அடுத்து அபிநந்தனிடம் விதிமுறைப்படி உளவுத்துறை விசாரணை

By ஆர்.ஷபிமுன்னா

பாகிஸ்தானில் இருந்து மீட்கப்பட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு ராணுவ மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதுதவிர, ராணுவ விதிமுறைப்படி உளவுத்துறை விசாரணைக்கும் அவர்  உட்படுத்தப்பட உள்ளார்.

கடந்த 27-ம் தேதி இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் போர் விமானங்களை, மிக் 21 ரக போர் விமானத்தின் மூலம் விரட்டிச் சென்ற அபிநந்தனை அந்நாட்டு ராணுவம் சிறைபிடித்தது. அங்கு அவர் சற்றும் அஞ்சாமல் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் காட்டிய தைரியம் இந்தியர்களை பெருமையடையச் செய்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பஞ்சாபின் வாகா எல்லையில் அபிநந்தன் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டார்.

இதையடுத்து நேற்று டெல்லி அழைத்து வரப்பட்ட அவருக்கு ராணுவ விதிமுறைகளின்படி சில கட்டாய மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ராணுவ மருத்துவமனையில் இந்த சோதனை நடைபெற்றது.

பின்னர் விமானப்படைக்குச் சொந்தமாக  டெல்லியில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த தனது குடும்பத்தினரைச் சந்திக்க அவர் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ராணுவ உளவுத்துறை மற்றும் மத்திய உளவுத்துறை உள்ளிட்ட பல அதிகாரிகள் அபிநந்தனிடம் விசாரணை நடத்துவார்கள் எனத் தெரிகிறது.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் வட்டாரம் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது,  ''பாகிஸ்தானில் காட்டிய தைரியத்தால்அபிநந்தன் இந்தியர்களால் மிகவும் மதிக்கப்படுபவராக உள்ளார். எனினும், நம் எதிரி நாட்டின் போர் கைதியாக இருந்தமையால், ராணுவ விதிமுறைகளின்படி சில தர்மசங்கடமான பரிசோதனை மற்றும் விசாரணைகளுக்கு அவர் உட்படுத்தப்படுவதை தவிர்க்க முடியாது. ஏனெனில், அபிநந்தனுக்கே தெரியாமல் அவரது உடலில் பாகிஸ்தான் ராணுவம் ஏதேனும் உளவுக்கருவிகளைப் பொருத்தியிருக்க வாய்ப்பு உள்ளது'' என்றனர்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் பி.எஸ்.பனாங் கூறும்போது,  ''பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தன், மொத்தம் சுமார் 48 மணி நேரம் மட்டுமே போர் கைதியாக இருந்திருக்கிறார். இந்த நேரங்களில் அபிநந்தனிடம் பாகிஸ்தானியர்கள் கேட்ட கேள்விகள், நடந்துகொண்ட விதம் என அனைத்தும் அவரிடம் விசாரிக்கப்படும். இதன் மீது மனரீதியான உளவியல் விசாரணையும் நடத்த வாய்ப்புள்ளது'' என்றார்.

இதற்கு முன்பு 1999-ம் ஆண்டுநடந்த கார்கில் போரின்போது அபிநந்தனைப் போல, போர் விமானியான கம்பம்பட்டி நாச்சிகேடா பாகிஸ்தானால்  சிறைபிடிக்கப்பட்டார். எம்ஐஜி-27 ரக போர் விமானத்தில் சென்றபோது சிக்கி போர் கைதியானவரை பாகிஸ்தான் அரசு சுமார் ஒரு வாரம்கழித்து விடுதலை செய்தது. அப்போது அவரிடமும் இதுபோல ராணுவ மருத்துவப் பரிசோதனையும், உளவுத்துறைஅதிகாரிகளின் விசாரணையும் நடைபெற்றது. இவற்றை முடித்து நாச்சிகேடா 2003-ல் மீண்டும் தனது வழக்கமான பணியில் ஈடுபட்டார். அவருக்கு ‘வாயு சேனா’ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்