இந்தியாவில் 24 மணி நேரம்: ‘திகில்’ அனுபவத்தினால் வெளியேறிய பெல்ஜியம் பெண்

By ஹேமானி பந்தாரி

விருந்தினர் கடவுளுக்கு நிகர் எனக் கொண்டாடும் நம் தேசத்தில்தான் இப்படியும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பணம் வந்த பெல்ஜியம் நாட்டுப் பெண் ஒருவர் 24 மணி நேரத்திலேயே அவசர அவசரமாக மீண்டும் தன் நாட்டுக்கு திரும்பிய அவலம் நேர்ந்துள்ளது.

அது தொடர்பாக அந்தப் பெண் இந்தியாவில் உள்ள பெல்ஜிய தூதரகத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். வெளியுறவு அமைச்சகத்துக்கும் ஒரு புகார் அனுப்பியிருக்கிறார். அந்தப் புகார் மீது டெல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருப்பதாவது:

நான் கடந்த டிசம்பர் 6-ம் தேதி மாலை 4 மணியளவில் டெல்லி விமானநிலையத்துக்கு வந்திறங்கினேன். டெல்லியில் புதிதாக ஒரு சிம் கார்டு வாங்கிக்கொண்டு டெல்லி ரயில் நிலையத்தை அடைந்தேன். அங்கிருந்து ஓர் ஆட்டோவில் ஏறினேன். மிண்டோ சாலை செல்லுமாறு சொன்னேன். சிறிது தூரம் கடந்த நிலையில் போலீஸ் உடையணிந்த இருவர் ஆட்டோவை நிறுத்தினர். நான் செல்லவேண்டிய பாதையில் கலவரம் நடப்பதாகக் கூறினர். அந்தப் பகுதியை போலீஸார் சுற்றி வளைத்துள்ளதால் மேலும் முன்னேற முடியாது என்றனர்.

மேலும், சுற்றுலா காவல்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று கூறினர். அத்துடன் போலீஸ் உதவி மையம் என ஒரு முகவரியையும் தந்தனர். அந்த ஆட்டோ வேறொரு இடத்துக்குச் சென்றது. அங்கு போலீஸ் உடையில் 6 பேர் இருந்தனர். அவர்களும் அதையே சொன்னார்கள். மேலும் கலவரப் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ என்று ஒரு வன்முறை வீடியோவையும் காட்டினார்கள்.

நான் உடனே புதுடெல்லியை விட்டுச் செல்வதே நல்லது என்றும் கூறினார்கள். எனது கையைக் காட்டி விரலில் அணிந்திருப்பது தங்க மோதிரம் என்றால் அதை அகற்றிவிடுமாறும் கூறினார்கள். பின்னர் நான் எந்த ஓட்டலில் அறை பதிவு செய்திருக்கிறேன் என்று வினவினர். தொலைபேசியில் ஏதோ பேசிவிட்டு எனது அறை முன்பதிவை கலவரம் காரணமாக ஓட்டல் ரத்து செய்துவிட்டதாகக் கூறினார்கள்.

புது டெல்லியில் இருந்து மத்திய டெல்லிக்கு செல்லுமாறும் அவர்கள் அறிவுறுத்தினர். ஒரு ஆட்டோவைக் காட்டி ஏறச் சொன்னார்கள். அந்த ஆட்டோ ஓட்டுநர் என்னை ஒரு டிராவல் ஏஜென்சிக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஓட்டல் புக்கிங் தொடர்பாக நான் சில எண்களை தொடர்பு கொண்டேன். ஐந்து மணி நேரம் அலைந்து திரிந்து சோர்வடைந்திருந்தேன். எனக்கு நிலைமை கவலை தருவதாக இருந்தது. 

அவர்கள் எனக்கு சில ஓட்டல்களைப் பரிந்துரை செய்தனர். ஆனால் அவையெல்லாம் அதிக செலவாகும்போல் இருந்ததால் நான் வேறு ஓட்டல்களைத் தேடினேன். கடைசியாக 40 டாலருக்கு ஒரு ஓட்டலை தேர்வு செய்தேன். அதற்கான தொகையை ரொக்கமாகக் கொடுத்தேன்.

மூன்றாவது மாடியில் ஜன்னலே இல்லாத ஓர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அந்த ஓட்டல் அறையில் இணைய வசதியும் இல்லை. நான் பல மணி நேரம் அங்கே முடங்கியிருந்தேன். இடை இடையே யார் யாரோ கதவைத் தட்டி தொந்தரவு செய்தனர். ஒருவழியாக எனது ஃபோன் ஆக்டிவேட் ஆனது.

உடனே நான் ரிஷிகேஷில் உள்ள எனது நண்பருக்கு ஃபோன் செய்தேன். அவர், நான் முன்னதாக அறை புக் செய்திருந்த ஓட்டலை தொடர்பு கொண்டபோது அவர்கள் அந்த அறை ரத்தாகவில்லை எனக் கூறியுள்ளனர். பின்னர் அந்த ஓட்டல் ஊழியர் ஒருவர் வந்து என்னை அழைத்துச் சென்றார்.

எனக்கு நேர்ந்த சம்பவங்கள் அச்சத்தைத் தந்தன. அதனால் அடுத்த நாள் காலை முதல் விமானத்தில் மீண்டும் பெல்ஜியம் சென்றுவிட்டேன்.

இதுமாதிரியான சம்பவங்கள் இந்தியர்களுக்கு அவமரியாதையை ஏற்படுத்தித் தரும். இனி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வெளிநாட்டவருக்கு அச்சத்தைத் தரும்.

இவ்வாறு அந்தப் பெண் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக புது டெல்லி போலீஸ் கமிஷனர் மதுர் வர்மா, "சுற்றுலாப் பயணிகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்