வெங்காயத்துக்கு ரூ.2 லட்சம் செலவு; 6 ரூபாய் வருமானம்: வெறுத்துப்போன விவசாயி மகாராஷ்டிரா முதல்வருக்கு அனுப்பினார்

By பிடிஐ

2 லட்சம் ரூபாய் செலவு செய்து வெங்காயம் பயிரிட்ட விவசாயிக்கு 6 ரூபாய் மட்டுமே வருமானம் கிடைத்ததால், மனம் வெறுத்து அந்த பணத்தை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஷ்க்கு அனுப்பினார்.

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக், அகமதுநகர் மாவட்டங்களில் இந்த ஆண்டு வெங்காயம் விளைச்சல் அபரிமிதமாக இருக்கிறது. நாட்டின் 60 சதவீத வெங்காயத் தேவையை இந்தப்பகுதி விவசாயிகள்தான் நிறைவேற்றுகின்றனர். இந்த ஆண்டு அபரிமிதமான வெங்காய விளைச்சலால் போதிய விலை இல்லாமல் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர்.

அகமதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரேயாஸ் அபஹாலே என்ற விவசாயி தன்னுடைய நிலத்தில் ரூ.2 லட்சம் செலவு செய்து வெங்காயம் விளைவித்திருந்தார். இந்நிலையில், கடந்த வாரம் தன் நிலத்தில் விளைந்த 2,657 கிலோ வெங்காயத்தை அருகே உள்ள சங்காம்நேர் மொத்த விற்பனைச் சந்தைக்கு விற்பனைக்காகக் கொண்டு சென்றார்.

ஆனால், அங்குள்ள வியாபாரிகளோ வெங்காயத்துக்கு விலை இல்லை எனத் தெரிவித்து கிலோ ஒரு ரூபாய்க்கு எடுத்துள்ளனர். இதன் மூலம் விவசாயி ஸ்ரேயாஸ்க்கு ரூ.2,916 கிடைத்துள்ளது. வெங்காயத்தைச் சந்தைக்கு கொண்டு செல்ல வண்டி வாடகைக்கு அமர்த்தியது, சுமை தூக்கும் கூலி ஆகியவற்றைக் கழித்த வகையில் மீதம் 6 ரூபாய் ஸ்ரேயாஸ்க்கு கிடைத்துள்ளது.

இதனால் மனம் வெறுத்து அந்த 6 ரூபாயை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்க்கு மணிஆர்டர் மூலம் அனுப்பிவைத்தார்.

இது குறித்து விவசாயி ஸ்ரேயாஸ் அபஹாலே நிருபர்களிடம் கூறியதாவது:

என்னுடைய நிலத்தில் ரூ.2 லட்சம் செலவுசெய்து வெங்காயம் பயிரிட்டேன். அதில் விளைந்த 2,657 கிலோ வெங்காயத்தைச் சந்தையில் விற்கச் சென்றால், கிலோ ஒரு ரூபாய்க்கு மேல் வாங்க வியாபாரிகள் தயாராக இல்லை. இந்த வெங்காயத்தை விற்பனை செய்ததன் மூலம் எனக்கு ரூ.2,916 கிடைத்தது. ஆனால், போக்குவரத்து செலவு, சுமை தூக்கும் கூலி அனைத்துக்கும் செலவிட்டதுபோக மீதம் எனக்கு 6 ரூபாய் கிடைத்தது.

கடினமான உழைத்து, 2 லட்சம் செலவு செய்த எனக்கு 6 ரூபாய் மட்டுமே கிடைத்ததால், வேதனையாக இருந்தது. இந்த 6 ரூபாயை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்க்கு அனுப்பி எனது எதிர்ப்பையும், விவசாயிகள் நிலைமையையும் தெரியப்படுத்தினேன். இவ்வாறு ஸ்ரேயாஸ் தெரிவித்தார்.

இதேபோல கடந்த வாரம், சஞ்சய் சாதே என்ற விவசாயி தனது நிலத்தில் விளைந்தவெங்காயம் கிலோ ஒரு ரூபாய்க்கு விலை போனதால், அதில் கிடைத்த 1,064 ரூபாயை பிரமதர் மோடிக்கு அனுப்பி எதிர்ப்பைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே வெங்காயத்தின் விலை படுமோசமாக சரிந்துவிட்டதை நினைத்து நாசிக் மாவட்டத்தில் இரு விவசாயிகள் கடந்த இரு நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டனர்.

இது தவிர அகமதுநகர் மாவட்டம், நவேசா தாலுகாவைச் சேர்ந்த ஒரு விவசாயி, 20 குவிண்டால் வெங்காயத்தை இலவசமாகத் தருவதாக பதாகையில் மராத்தி மொழியில் எழுதி அறிவித்துள்ளார். மேலும், வெங்காயம் விலை குறைவுக்கு காரணமான மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நன்றி என்றும் அந்த விவசாயி பதாகையில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

51 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

56 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்