மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் உடல்நலக்குறைவால் காலமானார்

By பிடிஐ

பாஜகவின் மூத்த தலைவரும், கர்நாடகாவைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான ஆனந்த் குமார் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை பெங்களூரு மருத்துவமனையில் காலமானார்.

அவருக்கு வயது 59. மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சராக கடந்த 2014-ம் ஆண்டு பொறுப்பேற்று, பின்னர் தற்போது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான ஆனந்த் குமார் செயல்பட்டு வந்தார். கடந்த பல மாதங்களாக தொண்டை புற்றுநோயால் அமைச்சர் ஆனந்த் குமார் அவதிப்பட்டு, அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார்.

சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து சென்று புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து ஆனந்த் குமார் நாடு திரும்பினார். அதன் பின் பெங்களூருவில் உள்ள சங்கரா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஆனந்த் குமார் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல், இன்று அதிகாலை 2 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ஆனந்த் குமாருக்கு தேஜஸ்வினி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். அனந்த் குமாரின் சொந்த தொகுதியான பெங்களூரு தெற்கு தொகுதியில் உள்ள தேசிய கல்லூரி மைதானத்தில் மத்திய அமைச்சர் ஆனந்த் குமாரின் உடல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது மத்திய அமைச்சர் அனந்த் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி ட்விட்டரில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், என்னுடைய அமைச்சரவையில் இடம் பெற்ற மதிப்புக்குரியவரையும், சிறந்த நண்பருமான ஆனந்த் குமார் மறைவு எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. மிகவும் குறிப்பிடத்தக்க தலைவரான ஆனந்த் குமார், சிறுவயதிலேயே பொதுவாழ்க்கைக்கு வந்து, சமூகத்துக்கு அர்பணிப்புடன், இரக்க உணர்வுடன் சேவை செய்தவர்.

அவரின் நற்பணிகள், சேவைகள் எப்போதும் நினைவில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் கூறுகையில், மத்தியஅமைச்சர் ஆனந்த் குமார் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. பாஜகவுக்கும், இந்தியாவுக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் சேவை செய்தவர் ஆனந்த் குமார். அவரின் இழப்பை தாங்கிக்கொள்ளும் வலிமையை அவரின் குடும்பத்தாருக்கு இறைவன் வழங்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 1959-ம் ஆண்டு, ஜூலை 22-ம் தேதி பெங்களூரில் நடுத்தர குடும்பத்தில் ஆனந்த் குமார் பிறந்தார். சங்க்பரிவாரின் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் அமைப்பின் மாணவர் அமைப்பில் ஆனந்த் குமார் இருந்தார். இந்திரா காந்தி கொண்டுவந்த அவசரநிலையை எதிர்த்து போராட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்டு ஆனந்த் குமார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 1987-ம் ஆண்டுபாஜகவில் இணைந்து, மாநில செயலாளர், யுவமோர்ச்சா மாநிலத் தலைவர், பொதுச் செயலாளர், தேசியச் செயலாளர் ஆகிய பொறுப்புக்களை ஆனந்த் குமார் வகித்தார்.

கர்நாடகாவில் பாஜகவை வளர்க்க முக்கிய காரணமாக ஆனந்த் குமார் இருந்தார். கர்நாடகவில் பாஜக ஆட்சியைப் பிடிக்க முக்கிய தூண்டுகோலாகவும் ஆனந்த் குமார் இருந்தார். எந்தவிதமான ஜாதிஆதரவும் இன்று 6 முறை பெங்களூரு தெற்கு தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்றவர் ஆனந்த் குமார். பாஜகவில் 3 முறை மத்திய அமைச்சராக ஆனந்த் குமார் இருந்துள்ளார். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். டெல்லியில் பெங்களூரு மனிதர் என்று புகழப்பட்ட ஆனந்த்குமார், ஐக்கிய நாடுகள் சபையில் முதன்முதலில் கன்னடத்தில் பேசிய தலைவர் எனும் பெருமையைப் பெற்றவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்