ஆர்வத்துடன் கணினி கற்கும் கார்த்தியாயினி பாட்டி; முதல் முறையாக தன் பெயரை ஆங்கிலத்தில் எழுதிப் பார்த்து நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

கேரள எழுத்தறிவுத் தேர்வில் 98% மதிப்பெண்களைப் பெற்று பாராட்டுகளைக் குவித்த கார்த்தியாயினி பாட்டிக்கு அம்மாநில கல்வித்துறை அமைச்சர் லேப்டாப் பரிசளித்துள்ளார். இதைத் தொடர்ந்து தன் பெயரை முதல் முறையாக ஆங்கிலத்தில் எழுதிப் பார்த்த கார்த்தியாயினி பாட்டி நெகிழ்ந்தார்.

ஆலப்புழாவைச் சேர்ந்தவர் கார்த்தியாயினி பாட்டி (96). இவர் அக்‌ஷரலக்‌ஷம் எழுத்தறிவுத் தேர்வில் 98% மதிப்பெண்களைப் பெற்று, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். கேரள மாநில எழுத்தறிவு இயக்கம் நடத்திய தேர்வில் எழுதும் திறனில் 40-க்கு 38 மதிப்பெண்களும், வாசிக்கும் திறனிலும் கணிதவியலில் முழு மதிப்பெண்களும் பெற்றிருந்தார்.

தன்னுடைய இளமைக் காலத்தில் பள்ளிக்கூடத்துக்கே சென்றிராத கார்த்தியாயினி பாட்டி, வீட்டு வேலை செய்து தன் பிழைப்பை நடத்தியவர். தனது 51 வயது மகள் அம்மணியம்மாவிடம் இருந்து படிக்கும் ஆசை முளைத்தது என்கிறார் அவர். பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தியவரான அம்மணியம்மா, கல்வி வகுப்புகளில் தொடர்ந்து பங்கேற்றதன் மூலம் 10-ம் வகுப்புக்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதே போல கார்த்தியாயினி பாட்டியும் அக்‌ஷரலக்‌ஷம் தேர்வெழுதி சாதனை படைத்தார்.

இவருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற விழாவில் சான்றிதழ் அளித்து, பாராட்டு தெரிவித்தார். அப்போது கணினி கற்க ஆசைப்படுவதாக கார்த்தியாயினி பாட்டி தெரிவித்திருந்தார். இந்நிலையில் கேரள கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் அவருக்கு லேப்டாப் பரிசளிக்க முடிவு செய்தார்.

நேற்று (புதன்கிழமை) கார்த்தியாயினி பாட்டியின் வீட்டுக்கு நேரில் சென்ற அமைச்சர், லேப்டாப்பைப் பரிசாக அளித்தார். அப்போது தன் பெயரை முதல் முறையாக ஆங்கிலத்தில் எழுதிப் பார்த்து நெகிழ்ந்தார் கார்த்தியாயினி பாட்டி.

தள்ளாத வயதிலும் தளராது படித்து 100-க்கு 98 மதிப்பெண்கள் எடுத்த கார்த்தியாயினி பாட்டி தற்போது ஆர்வத்துடன் கணினி கற்பதால் பல்வேறு தரப்பிடமும் இருந்து பாராட்டுகளைக் குவித்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

வலைஞர் பக்கம்

25 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

56 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்