வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த மறுப்பு: உவைஸி கட்சி கவுன்சிலர் மீது தாக்குதல், கைது

By ஆர்.ஷபிமுன்னா

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அஞ்சலி செலுத்த மறுத்த அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தாத்துல் முஸ்லிம் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் கவுன்சிலர் சையது மத்தீன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 93 வயதில் காலமானார். இதையடுத்து அவுரங்காபாத்தின் மாநகராட்சியில் அதன் உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. இதில், பாஜக உறுப்பினர் ராகுல் வைத்யா, வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை முன் வைத்தார். .

இதற்கு ஏஐஎம்ஐஎம் கட்சியின் உறுப்பினரான சையது மத்தீன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், அக்கூட்டத்தில் இருந்த பாஜக உறுப்பினர்கள் கடும் கோபம் கொண்டனர். சுமார் பத்து ஆண் மற்றும் சில பெண் உறுப்பினர்கள் சேர்ந்து மத்தீன் மீது தாக்கியுள்ளனர். இதில், அங்கிருந்த பாதுகாவலர் மற்றும் வேறு கட்சி உறுப்பினர்களால் மத்தீன் பாதுகாக்கப்பட்டார்.

இந்தத் தாக்குதலால் படுகாயம் அடைந்த மத்தீன், அவுரங்காபாத் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் மீதான தாக்குதலைக் கேள்விப்பட்ட மத்தீன் கட்சியின் ஆதரவாளர்கள் மாநகராட்சிக்கு வெளியே களேபரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், பாஜக தலைவர் பாபுராவ் தேஷ்முக்கின் ஓட்டுநர் மீதும் அவரது வாகனம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாகவும், மத நல்லிணக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டதாகவும் வழக்குப் பதிவு செய்து மத்தீன் கைது செய்யப்பட்டுள்ளார். அதேசமயம், மத்தீன் மீது தாக்குதல் நடத்தியதாக மூன்று பாஜக உறுப்பினர்களான பிரமோத் ராத்தோர், விஜய் உபாண்டே மற்றும் ராஜ் வன்கேடே ஆகியோர் மத்தீனைத் தாக்கியதாக வழக்குப் பதிவாகி விசாரணை நடைபெறுகிறது.

இதனிடையில், மத்தீனுக்கு ஆதரவாகப் பேசும்போது அவுரங்காபாத் காவல்துறையினரிடம் முறை தவறி நடந்ததாகவும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் அவரது கட்சியின் மாவட்ட தலைவர் ஜாவீத் குரைஷியும் கைது செய்யப்பட்டுள்ளார். மத்தீன் தாக்கப்பட்ட காட்சிகள் வீடியோ பதிவுகளாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐதராபாத்தின் மக்களவை எம்.பி. அசாத்தீன் உவைஸி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு மகாராஷ்ராவின் சில மாவட்டங்களில் ஆதரவு பெருகி வருகிறது. அவுரங்காபாத் மாநகராட்சியில் உவைஸி கட்சிக்கு 25 உறுப்பினர்கள் உள்ளனர். மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் இரண்டு எம்எல்ஏக்களும் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்