இந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிட்ட அருண் ஜேட்லி: நெருக்கடிநிலையின் போது கைதி ஒருவருக்கு உணவுக்காக ரூ.3 மட்டுமே ஒதுக்கிய அவலம்

By செய்திப்பிரிவு

1975-ல் நாட்டை உலுக்கிய இந்திய எமெர்ஜன்சி ‘அடக்குமுறை’ அமல்படுத்தலை விமர்சித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தன் முகநூல் பதிவில் இந்திரா காந்தியையும் ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரையும் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இந்திராகாந்தியின் நெருக்கடி நிலைப் பிரகடனம் முன் கூட்டியே நன்கு சிந்திக்கப்பட்டு எழுதப்பட்ட ஒரு பிரதியாகும் இது 1933-ல் நாஜி ஜெர்மனியில் நடந்த விஷயத்தினால் ஊக்கம் பெற்றதோ? என்று கேட்டுள்ளார்

அவர் மேலும் தன் பதிவில் கூறியிருப்பதாவது:

நான் ஒரு வாரம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டேன். அதன் பிறகு 20 கைதிகளுடன் நான் அம்பாலா செண்ட்ரல் ஜெயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டேன். அப்போதைய சிறை விதிமுறைகளின் படி தினப்படி ரேஷன் முறையில்தான் உணவு வழங்கப்படும். கைதி ஒருவருக்கு தினப்படி பட்ஜெட்டில் ஒதுக்கீட்டு தொகை ரூ.3, இதில்தான் உணவு உள்ளிட்டவைகளை நிர்வகிக்க வேண்டும்.

எனவே 20 கைதிகள் என்றால் மொத்தம் ரூ.60தான். இதில்தான் தினசரி உணவுகளை நாம் சிக்கனமாக நிர்வகிக்க வேண்டும். தேநீர், காலை உணவு, மதிய உனவு, மாலை தேநீர், இரவு உணவு. ஆனால் மாதக்கணக்கான போராட்டங்களுக்குப் பிறகு இந்தத் தொகை ரூ.5 ஆக அதிகரிக்கப்பட்டது. ஆரம்ப சில மாதங்களில் கைதிகள் அவர்கள் குடும்பத்தினரை சந்திக்க அனுமதி கிடையாது. பிறகு மாதமொரு முறை ஒருசில நிமிடங்கள் குடும்பத்தினரை சிறையில் சந்திக்கலாம். இது பிற்பாடு வாரம் ஒருமுறை குடும்பத்தினரைச் சந்திக்கலாம் என்று மாற்றப்பட்டது. நான் அப்போது சட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் இருந்தேன். கைதை எதிர்த்து நிறைய பேர் மனு செய்தனர், அதில் நானும் ஒருவன்.

இதனையடுத்து எனது சட்டத்தேர்வுகளை எழுத அனுமதி வேண்டி நீதிமன்றத்தில் மனு செய்தேன். சிறையிலிருந்தே தேர்வு எழுத நிறைய மனுக்களை மேற்கொண்டேன். ஆனால் டெல்லி பல்கலைக் கழகம் விதிமுறையை மாற்றுமாறு உத்தரவிடப்பட, நேரில் வந்து எழுத வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது, தேர்வு மையத்துக்கு போலீஸ் காவலுடன் சென்று எழுதுகிறேன் என்று மனு செய்தேன். ஆனால் அரசு அதனை நிராகரித்தது. அதாவது தேர்வு மையத்திற்கு நான் சென்றால் பொது ஒழுங்கு சீர்குலையும் என்று அரசு நிராகரிப்பு செய்தது. 19 ஆண்டுகால கைதி வாழ்க்கையில் நான் ஒரு கல்வியாண்டையே இழந்தேன். இரண்டாவது ஆண்டையும் இழக்கும் அபாயமும் ஏற்பட்டது, ஆனால் இந்த மனுக்கள் மூலம் அம்பாலா சிறையிலிருந்து திஹார் சிறைக்கு என்னை மாற்றமுடிந்தது.

வெளியிலோ பயமும், நடுக்கமும் அச்சுறுத்தலுமான சூழல் நிலவியது. அரசியல் செயல்பாடுகள் முற்றிலும் ஒடுக்கப்பட்டன. எதிர்ப்பாளர்கள் பெரும்பாலும் எதிர்க்கட்சியின மற்றும ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். இவர்கள் தொடர்ந்து சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினர் இதனால் சிறை சென்றனர். நெருக்கடி நிலை காலம் முழுதும் ஷிரோமணி அகாலிதளம் தங்கள் தொண்டர்களை பொற்கோயிலுக்கு வெளியே சத்தியாகிரகத்துக்காக அளித்ததால் பெருமை பெற்றது, இதனாலும் கைதுகள் தொடர்ந்தன. அகாலிதளத்திற்கு நாடு முழுதும் இதனால் பலத்த ஆதரவு கூடியது. நியாயமற்ற முறையில் தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் சத்தியாகிரகப் போராட்டத்தில் பெரும் பங்கு வகித்தது.

செய்தி ஊடகத்துறைகள் கடுமையாக மிரட்டப்பட்டு ஒடுக்கப்பட்டன. நிறைய செய்தி ஆசிரியர்களும் நிருபர்களும் மத்திய அரசின் எமர்ஜென்சிக்கு ஆதரவாக தங்களை சமரசம் செய்து கொள்ள வைக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சியினசெய்தித்தாள் ‘நேஷனல் ஹெரால்ட்’ தன் தலையங்கத்தில் ‘இந்தியா ஒற்றைக் கட்சி ஜனநாயகமாக மாற காலம் பருவமடைந்துள்ளது’ என்று எழுதியுள்ளது. ஜனநாயகத்திலிருந்து கட்டுக்கோப்பான ஜனநாயகம் என்று மாற வேண்டும் என்று திருமதி இந்திரா காந்தியும் விரும்பினார்.

ஊடகங்களிலும் எதிர்ப்பாளர்கள் இருந்தனர். இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஸ்டேட்ஸ்மென் நெருக்கடி நிலைக்கு எதிராக பெரிய பங்காற்றியது. ராம்நாத் கோயெங்கா, சிஆர்.இரானி, குல்தீப் நய்யார், ஆகியோர் பத்திரிகைச் சுதந்திரத்தின் குறியீடுகளாகத் திகழ்ந்தனர்... என்று நீளமான பதிவிட்டுள்ளார்.

 

அருண் ஜேட்லி எழுதிய பிற முக்கிய அம்சங்கள்:

ஹிட்லரும் இந்திரா காந்தியும் அரசியல் சட்டத்தை ரத்து செய்யவில்லை. மாறாக குடியரசு அரசியல் சட்டத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்றினர்.

அரசியல் சாசன சட்டப்பிரிவு 352-ன் கீழ் அவசரநிலைப் பிரகடனம் மேற்கொண்டார் இந்திரா காந்தி, இதில் அடிப்படை உரிமைகளுக்கான 359-ம் பிரிவை முடக்கினார், செயலிழக்கச் செய்தார்.

ஹிட்லரும் அவர்கள் நாட்டு அரசியல் சட்டம் 48-ம் பிரிவைச் சுட்டிக்காட்டி, “மக்களைப் பாதுகாப்பது” என்ற பெயரில் சர்வாதிகாரச் செயல்களை நியாயப்படுத்தினார்.

தனிமனித சுதந்திரத்தை ஒடுக்கும் அவசரநிலை அதிகாரங்கள் அமல்படுத்தப்பட்டன, ஜெர்மனி நாடளுமன்ற இல்லம் இது ரெய்ச்ஸ்டாக் என்று அழைக்கப்படும், இது தீவைத்துக் கொளுத்தபப்டு, கம்யூனிஸ்ட் கட்சியின் செயல் இது, அரசு கட்டிடங்களை அழிப்பது கம்யூனிஸ்ட்களின் சதி என்று கூறப்பட்டு அங்கு எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டது. ஆனால் 13 ஆண்டுகளுக்குப் பிறகான நூரம்பெர்க் விசாரணைகளில் கோயபெல்ஸின் மூளையில் உதித்த நாஜிக்களின் கைவரிசையே இது என்று தெரியவந்தது.

இந்திரா காந்தியும் எதிர்க்கட்சி எம்.பி.க்களை கைது செய்ததன் மூலம் சட்டத்திருத்தங்களை தனது 2/3 பெரும்பான்மையை வைத்து உருவாக்கினார்.

இதில் 42வது சட்டத்திருத்த உயர்நீதிமன்றங்களின் அதிகாரங்களை நீர்த்துப் போகச் செய்வதாகும், இந்த அதிகாரம் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களால் இந்தியாவின் இருதயம் நம் நாட்டு அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மா என்று வர்ணித்ததாகும்.

அரசியல் சட்டப்பிரிவு 368ஐ திருத்தி மாற்றியதன் மூலம் நீதிமன்றச் சீராய்வுக்கும் அப்பால் கொண்டு சென்று விட்டனர். ஹிட்லர் செய்யாத சில விஷயங்களைக் கூட இந்திரா காந்தி செய்தார்.

இந்திரா காந்தி அரசமைப்புச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகியவற்றைத் திருத்தினார். இந்தத் திருத்தத்தின் மூலம் பிரதமராக இருப்பதற்கான அதிகாரத்தை கோர்ட் முடிவு செய்ய முடியாது. அதேபோல் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை பின்சென்று திருத்தியதன் மூலம் இந்திரா காந்தி தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்ற கோர்ட் தீர்ப்பை மாற்றுமாறு சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டன.

அவர் நெருக்கடி நிலைப் பிரகடனக் காலக்கட்டத்தில் செய்த அரசியல் சட்டத்திருத்தங்களை அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஜனதாக் கட்சி ஒழித்து ஜனநாயகத்தை நிலைநாட்டியது.

நாடாளுமன்ற நிகழ்வுகளை பொதுமக்களுக்கு சென்றடையா வண்ணம் ஊடகங்கள் அதைப்பற்றி எழுதத் தடைவிதித்தார், இதனை ஹிட்லர் செய்யவில்லை.

கோயபெல்ஸ் எப்படி ஹிட்லரின் சர்வாதிகார நடைமுறைகளைப் புரட்சிகரமானது என்றார்களோ அப்படியே காங்கிரசாரும் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைப் பிரகடனத்தை புரட்சி என்று பேசப் பணிக்கப்பட்டனர்.

இந்தியாவிலும் ஹிட்லரின் ஜெர்மனியிலும் போடப்பட்ட ஊடக சென்சார் சட்டங்கள் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

ஜெர்மனியில் ஒரே அதிகாரம்தான் உள்ளது ஃப்யூரெர் என்றார் ஒரு நாஜி தலைவர், அதே போல் காங்கிரஸ் தலைவர் தேவகந்தா பரூவா, “இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா” என்றார்.

கைது செய்யப்பட்ட ஜெயபிரகாஷ் நாராயண் சிறையிலிருந்து இந்திரா காந்திக்கு எழுதிய போது, உங்களை தயவு செய்து நாட்டுடன் ஒப்பிடாதீர்கள் இந்தியா அமரத்துவம் வாய்ந்தது, நீங்களல்ல என்று எழுதினார்.

நாடே மயான அமைதியாக இருந்தது அப்போது, உயர்நீதிமன்றம் எதிர்த்தது, ஆனால் உச்ச நீதிமன்றம் சரணடைந்தது.

சுதந்திரமான கருத்துகளை அடக்கி பிரச்சாரத்தையும் பரப்புரையையும் அனுமதித்தால் யார் இதனைச் செய்கிறார்களோ அவர்கள்தான் அதற்கு முதல் பலிகடாவாகுவர். காரணம் பிரச்சாரம் செய்பவர்களே தாங்கள் கூறுவதுதான் உண்மை, ஒரே உண்மை என்று நம்பத்தொடங்கி விடுவார்கள்.

இவ்வாறு தன் முகநூல் பதிவில் கூறியுள்ளார் அருண் ஜேட்லி.

ஐ.ஏ.என்.எஸ் தகவல்களுடன்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

7 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்