மகாராஷ்டிராவின் புனே நகரை கலக்கும் ‘தந்தூரி டீ’

By செய்திப்பிரிவு

தந்தூரி சிக்கன் தெரியும், தந்தூரி டீ எத்தனை பேருக்கு தெரியும்? ஆம் மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள ஒரு கடை தந்தூரி டீயை வழங்கி வருகிறது. இது டீ பிரியர்களின் நாக்கை கொள்ளையடித்துள்ளது. இது தொடர்பான தகவல் சமூக வலை தலங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்திய மக்களுக்கு மிகவும் பிடித்த பானங்களில் முக்கியமானது டீ என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதிலும் மசாலா டீ இன்னும் சிறப்பு. இதுபோல புதுப்புது வகையான டீயை கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில், புனே நகரின் கராடி பகுதியைச் சேர்ந்த ‘சாய் லா’ என்ற கடை, தந்தூரி டீயை வாடிக்கையாளர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இந்த டீ புது விதமான சுவையுடன் இருப்பதால், ஏராளமான டீ பிரியர்கள் அந்தக் கடையை மொய்த்து வருகின்றனர்.

இந்த டீயை எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போம். தந்தூரி அடுப்பில் சிறிய களிமண் பானையை வைத்து நன்கு சூடான பின்பு, அதில் பாதியளவு சூடாக்கப்பட்ட டீயை ஊற்றுகின்றனர். நன்கு கொதித்து நுரை தள்ளி வரும்போது, அதை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.

வாடிக்கையாளர்களின் விருப்பப்படி, பன் அல்லது பிஸ்கட்டுடனும் வழங்குகின்றனர். ஒரு கப் டீ வெறும் ரூ.20-க்கு கிடைக்கிறது. இது தந்தூரி உணவைப் போல மிகவும் சுவையாக மண் வாசனையுடன் இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். இங்கு மட்டும்தான் இதுபோன்ற டீ வழங்கப்படுகிறது. எனவே, உலகின் முதல் தந்தூரி டீ என அவர்கள் கூறிக்கொள்கின்றனர்.

அறிவியல் பட்டதாரிகளான பிரமோத் பங்கர் மற்றும் அமோல் ராஜ்தியோ ஆகிய இருவர்தான் இந்த கடையின் உரிமையாளர்கள். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “கிராமத்தில் உள்ள எங்கள் பாட்டி புதுவிதமாக பால் காய்ச்சியதைப் பார்த்தோம். இதை அடிப்படையாகக் கொண்டு தந்தூரி டீயை தயாரிக்கத் தொடங்கினோம். இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதுபற்றி கேள்விப்பட்ட வெளி மாநிலத்தவர்களும் இங்கு வரத் தொடங்கி உள்ளனர்” என்றனர். இந்த டீயை குடித்தவர்கள், தந்தூரி டீயின் அருமை பெருமைகளை சமூக வலைதளங்களில் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இந்த தகவல் வேகமாக பரவி வருகிறது.

இந்த டீயை குடித்த ராஜஸ்தான் மாநிலம் டவ்சா மக்களவை தொகுதி உறுப்பினர் ஹரிஷ் மீனா ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “இந்த டீ மிகச்சிறந்த கண்டுபிடிப்பு. புனே நகருக்கு செல்லும்போதெல்லாம் தந்தூரி டீயை குடிப்பேன்” என பதிவிட்டுள்ளார். .

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்