காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அவகாசம் கோரிய மத்திய அரசின் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

By இரா.வினோத்

காவிரி தீர்ப்பை அமல்படுத்துவதற்காக செயல் திட்ட வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரும் மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்றம் நேற்று நிராகரித்தது. நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்து, காவிரி வழக்கு இன்று விசாரணைக்கு வருவதால், செயல் திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யுமா என கேள்வி எழுந்துள்ளது.

காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், “காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்’ (செயல் திட்டம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டது.

இதற்கு தமிழக அரசு, காவிரி நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகிய இரு அமைப்புகளையும்தான் ‘ஸ்கீம்’ என குறிப்பிட்டது. எனவே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத் தியது.

ஆனால், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் தொடர் பாக எவ்வித உறுதியான கருத்தையும் தெரிவிக்காமல் 6 வார காலம் மவுனம் காத்தது. இதனால் தமிழக அரசு, “ உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்கவில்லை. நீதிமன்ற உத்தர‌வை அவமதித்த மத்திய அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்''என உச்ச நீதிமன்றத் தில் முறையிட்டது.

உச்ச நீதிமன்றம் விதித்த காலக் கெடு கடந்த மார்ச் 29-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், மத்திய அரசு புதிய மனுவை தாக்கல் செய்தது. அதில், “உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள ஸ்கீம் என்பதன் பொருள் என்ன, அது காவிரி மேலாண்மை வாரியமாக இருந்தால், அதனை உருவாக்க கூடுதலாக‌ 3 மாதங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். கர்நாடகாவில் மே 12-ல் தேர்தல் நடைபெறுவதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்” என குறிப்பிட்டு இருந்தது.

கடந்த ஏப்ரல் 9-ம் தேதி இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “ஸ்கீம் என்கிற வார்த்தைக்கு காவிரி மேலாண்மை வாரியம் என்பது மட்டும் பொருள் அல்ல. அது காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு தரக்கூடிய பிற திட்டங்களையும் உள்ளடக்கியது. உச்ச நீதிமன்ற‌ தீர்ப்பை செயல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு உருவாக்காத‌து ஏன், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேலாண்மை திட்டத்தை மாநில அரசுகளுடன் ஆலோசித்து, மே 3-ம் தேதிக்குள் தீர்ப்பை அமல்படுத்துவதற்காக செயல்திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக் கல் செய்ய வேண்டும்'' என உத் தரவிட்டார்.

இடைக்கால மனு

இந்நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி மத்திய அரசின் வழக்கறிஞர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வின் முன்னிலையில் ஆஜராகி, “நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்காக செயல் திட்டத்தின் வரைவு அறிக்கையை வடிவமைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் போதவில்லை. எனவே இந்த வரைவு அறிக்கையை தயாரிக்க கூடுதலாக‌ 2 வார கால அவகாசம் தேவை. இந்த மனுவை அவசர வழக்காக கருதி, உடனே விசாரிக்க வேண்டும்'' என வாய்மொழியாகக் கோரினார். பின்னர் கால அவகாசம் கோரும் மனுவை மத்திய அரசு திரும்ப பெற்றது.

இந்நிலையில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் நேற்று மீண்டும் இடைக்கால மனுவை தாக்கல் செய்தார். அதில், “திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கும் பணிகள் இன்னும் முழுமை அடையவில்லை. எனவே நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் அதனை தாக்கல் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே செயல் திட்ட வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய வருகிற 16-ம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும். இதனை அவசர வழக்காக கருதி, இன்றே விசாரிக்க வேண்டும்'' என கோரப்பட்டிருந்தது.

அதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “இந்த மனுவை அவசர வழக் காக ஏற்க முடியாது. எனவே மத்திய அரசின் இடைக்கால மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும். நாங் கள் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு இன்னும் அமலில்தான் இருக்கிறது. காவிரி வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வருவதால், அப்போது மத்திய அரசு தனது கோரிக்கையை முன் வைக்கலாம்''என்றார்.

இந்நிலையில் காவிரி தீர்ப்பை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு என்ன முடிவெடுத்துள்ளது, எத்தகைய அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்பார்த்து வருகின்றன. இதனிடையே, கர்நாடகாவில் வரும் 12-ம் தேதி தேர்தல் நடைபெறுவதாலேயே, மத்திய பாஜக அரசு வழக்கை இழுத்தடிக்க முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

க்ரைம்

27 mins ago

தமிழகம்

31 mins ago

இந்தியா

12 mins ago

தமிழகம்

51 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

மேலும்