ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த நாளில் பிஹாரில் புதிய கூட்டணிக்கு அச்சாரம்: நிதிஷ், பாஸ்வான், குஷ்வாஹா ஒன்றுசேர முயற்சி

By செய்திப்பிரிவு

புதுடெல்லிஅம்பேத்கர் பிறந்த நாளான 14-ம் தேதி பிஹாரில் ஒரு புதிய கூட்டணிக்கான அச்சாரம் அமைய உள்ளது.

பிஹார் மாநிலம் பாகல்பூரில் 1989-ல் மதக் கலவரம் வெடித்தது. அதன் பிறகு இதுவரை பெரிய அளவில் மதக்கலவரம் ஏற்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பாகல்பூர், நவாதா மாவட்டங்களின் சில பகுதிகளில் கடந்த வாரம் நடந்த ராம நவமி ஊர்வலத்தின்போது மதக்கலவரம் மூண்டது. இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபேயின் மகன் அர்ஜித் சஹஸ்வாத் உட்பட பல பாஜகவினர் மீது வழக்குகள் பதிவாகி உள்ளன.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இது அந்த சட்டத்தை நீர்த்து போகச் செய்வதாக உள்ளது என எதிர்க்கட்சியினரும் தலித் அமைப்பினரும் குற்றம் சாட்டினர். உச்ச நீதிமன்ற உத்தரவைக் கண்டித்து வட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 12 பேர் பலியாயினர். இந்த சம்பவம் பிஹார் அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கி உள்ளது.

இதனால், பாஜக ஆதரவுடன் பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், தலித் சமூகத்தின் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ் பாஸ்வான்) மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் ராஷ்ட்ரிய லோக் சமதா (உபேந்திர குஷ்வாஹா) ஆகிய கட்சிகள் இணைந்து ஒரு புதிய அணியை உருவாக்க முயற்சி நடைபெறுகிறது. இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் சமூகங்களின் வாக்குகள், நிதிஷ் மற்றும் பாஸ்வான் கட்சிகளிடம் இருந்து நிரந்தரமாக பிரியும் ஆபத்து ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முதன்முறையாக பெரும் விழாவாகக் கொண்டாட முதல்வர் நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளார். இதில் மத்திய உணவுத் துறை அமைச்சர் பாஸ்வான், மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹாவும் பங்கேற்க உள்ளனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்களான மூவரும் இக்கூட்டத்தின் மூலம் ஒரு புதிய அணிக்கு அச்சாரமிட திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து நிதிஷ் கட்சி நிர்வாகிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “பிஹார் மற்றும் தேசிய அளவில் நிலவும் சூழலை சாதகமாக்கி தமது மெகா கூட்டணியை வலுவாக்க லாலு முயன்று வருகிறார். இதனால், எங்கள் கட்சி தனித்து விடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதை முறியடிக்க பாஜக அல்லாத புதிய அணியை உருவாக்க நிதிஷ் முடிவு செய்துள்ளார். தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியும் எங்களுடன் மாநில அளவில் சேர வாய்ப்பு உள்ளது” என்றார்.

கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், இப்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரை குஷ்வாஹா நேரில் சென்று நலம் விசாரித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய ஜிதன்ராம் மாஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, லாலு தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்து விட்டது. இந்நிலையில், நிதிஷ் குமார் உருவாக்க உள்ள புதிய அணிக்கு பிஹாரில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

ஜோதிடம்

12 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்