மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: எம்.பி.க்கள் அமளியால் 127 மணிநேரம் வீணானது

By பிடிஐ

 மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படாமல், நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் இன்று ஒத்திவைக்கப்பட்டது. எம்.பி.க்கள் அமளி, போராட்டம், கோஷத்தால் ஒட்டுமொத்தமாக 127 மணிநேரம் வீணானது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த மாதம் 5-ம் தேதி தொடங்கி 22 நாட்கள் நடந்தது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்.பி.க்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கோரி காங்கிரஸ் எம்.பி.க்களும் நாள்தோறும் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் பெரும்பாலும் முடங்கின.

இன்றும் அவை தொடங்கியபோது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்.பி.க்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால், கோபமடைந்த, சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ''இன்று தான் அவையின் கடைசி வேளைநாள். இன்றும் அமளியில் ஈடுபட்டால், அவையைத் தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்க வேண்டியது இருக்கும். அனைவரும் இருப்பிடத்தில் அமருங்கள், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எடுக்க வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டார். அதற்கு எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதியில் நின்றுகொண்டே கோஷமிட்டனர்.

அதன்பின் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேசியதாவது:

''பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட அமர்வில் 34 மணிநேரம் 5 நிமிடங்கள் மட்டுமே அவை செயல்பட்டது. ஏறக்குறைய 127 மணிநேரம் 45 நிமிடங்கள் குழப்பத்தாலும், அமளியாலும் வீணாகி இருக்கிறது. 9 மணிநேரம், 47 நிமிடங்கள் அரசின் அவசர காரணங்களுக்கான ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர்கள் எழுப்பிய 580 கேள்விகளுக்கு 17க்கு மட்டுமே பதில் அளிக்கப்பட்டுள்ளது. 6,670 கேள்விகள் இந்த கூட்டத்தொடரில் எழுத்து மூலம் கேட்கப்பட்டன. இந்த கூட்டத்தொடரில் 5 மசோதாக்கள் மட்டுமே நிறைவேறின, 5 மசோதாக்கள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டன.

நிதி மசோதா 2018, பணிக்கொடை திருத்த மசோதா, சிறப்பு நிவாரண திருத்த மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன.

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் ஏறக்குறைய 10 மணி நேரம் 43 நிமிடங்கள் நடந்துள்ளது. பட்ஜெட் மீதான விவாதம் 12 மணிநேரம் 13 நிமிடங்கள் நடந்துள்ளது.

மக்களின் நலன் சார்ந்த விஷயங்கள், பொதுநலன் சார்ந்த பிரச்சினைகளை எம்.பி.க்கள் எழுப்பி ஆக்கபூர்வமாக விவாதம் செய்ய இந்த அவை சிறந்த அடித்தளத்தை அமைத்துத் தருகிறது. பல்வேறு மக்கள் பிரச்சினைகளை இந்த அவையில் தீர்வு காண முற்பட்ட உறுப்பினர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.''

இவ்வாறு சுமித்ரா மகாஜன் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

18 mins ago

சினிமா

23 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்