தேர்தல் ஆணையத்துக்கு தன்னாட்சி அதிகாரம் கோரும் மனு: மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

By செய்திப்பிரிவு

தேர்தல் ஆணையத்துக்கு முழுமையான தன்னாட்சி அதிகாரம் வழங்கக் கோரும் பொதுநல மனு மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

டெல்லி பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஷ்வனி குமார் உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “தேர்தல் நடைமுறைகள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, தேர்தல் ஆணையத்துக்கு முழுமையான தன்னாட்சி அதிகாரம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு கடந்த டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் உதவுமாறு அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலை நீதிபதிகள் அமர்வு கேட்டுக் கொண்டது.

இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கே.கே.வேணுகோபால் கூறும்போது, “இந்த விவகாரத்தில் எனக்கு மாறுபட்ட கருத்துகள் உள்ளன. எனவே, முதலில் மத்திய அரசின் கருத்தைக் கேட்க வேண்டும்” என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள் கூறும்போது, “இந்த மனு தொடர்பாக மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பாக சில ஆவணங்களை சமர்ப்பிக்க விரும்பும் தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது” என உத்தர விட்டனர்.

அஷ்வனி குமார் மேலும் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “வாக்காளர் அடையாள எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இதன்மூலம் போலி வாக்காளர்களைத் தடுக்க முடியும். பினாமி பரிவர்த்தனையை கண்காணிக்க அசையும் மற்றும் அசையா சொத்து ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறும் உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

உபாத்யாய் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், இந்த மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், உடனடியாக பதில் அளிக்குமாறு உத்தரவிட முடியாது என்றும், இந்த மனுவை 4 வாரங்களுக்குப் பிறகு விசாரணைக்கு ஏற்பதாகவும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தெரிவித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

56 mins ago

விளையாட்டு

48 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்