மைசூருவில் ஊரடங்கு உத்தரவை மீறி அனுமன் ஜெயந்தி: பாஜக எம்பி உள்ளிட்ட 58 பேர் கைது; இந்துத்துவ அமைப்பினரின் போராட்டத்தால் பதற்றம்

By இரா.வினோத்

மைசூருவில் ஊரடங்கு உத்தரவை மீறி அனுமன் ஜெயந்தி பேரணி நடத்திய பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா உட்பட 58 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த இந்துத்துவ அமைப்பினர் போலீஸாரின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சனிக்கிழமை மிலாது நபி பேரணியும், ஞாயிற்றுக்கிழமை அனுமான் ஜெயந்தியும் நடைபெற்றது. கடந்த ஆண்டைப் போல வன்முறை சம்பவங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக மைசூரு மாவட்ட நிர்வாகம், ஏராளமான கட்டுபாடுகளை விதித்தது. குறிப்பாக இரு பிரிவுகளை சேர்ந்த சர்ச்சைக்குரிய தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கவோ, பேரணி நடத்தவோ தடை விதிக்கப்பட்டது. உன்சூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதனால் கடந்த சனிக்கிழமை மிலாது நபி பேரணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து முடிந்தது. இதையடுத்து மறுநாள் மைசூரு மாவட்டத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம், அனுமான் சேனா உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினரின் சார்பாக அனுமான் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. அப்போது மைசூருவில் இருந்து உன்சூரில் மஞ்சுநாதேஷ்வரா கோயிலுக்கு அனுமான் சிலை ஊர்வலமாக கொண்டு செல்ல முயற்சித்தனர்.

அப்போது போலீஸார் கடந்த ஆண்டு வன்முறை ஏற்பட்டதால் இந்த ஆண்டு, அனுமான் சிலையை ஊர்வலமாக கொண்டு செல்லக்கூடாது. அவ்வாறு கொண்டு செல்லப்பட்டால் மற்ற பிரிவினர் வன்முறையில் ஈடுபட வாய்ப்பு உள்ளது என அனுமதி மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த இந்துத்துவ அமைப்பினர் மைசூரு - ஹூன்சூர் சாலையில் தர்ணா ஈடுபட முயற்சித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மைசூரு பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் போலீஸார் போட்டிருந்த தடுப்புகளின் மீது காரை விட்டு ஏற்றினார். ஒரு கட்டத்தில் போலீஸாருக்கும், இந்துத்துவ அமைப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் எம்பி பிரதாப் சிம்ஹா உட்பட 58 பேரை கைது, நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர். பிரதாப் சிம்ஹா உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டம் 353,332,229 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த தகவல் பரவியதை தொடர்ந்து உன்சூரில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பாஜகவினர் போலீஸாருக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். அப்போது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் போலீஸார் தடியடி நடத்தி, கலவரக்காரர்களை விரட்டி அடித்தனர். மாவட்ட மேஜிஸ்திரேட் (ஆட்சியர்) ரன்தீப் முன்னிலையில் ஆஜரான பிரதாப் சிம்ஹா உள்ளிட்ட 29 பேர் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் மைசூரு மாவட்டத்தில் திங்கள்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை கண்டித்து மைசூருவில் பாஜக, அனுமான் சேனா, பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக எம்பி ஷோபா கரந்தலாஜே தலைமையில் நடந்த போராட்டத்தில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதில் பங்கேற்ற பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா, '' சித்தராமையா அரசு இந்துக்களை ஒடுக்கி வருகிறது. இஸ்லாமியரின் வாக்குகளை பெறுவதற்காக இந்து மக்களின் உரிமைகளை பறித்து வருகிறது. எனது அரசியல் எதிர்காலத்தைவிட, என் மதத்தின் உரிமையே எனக்கு முக்கியம். எத்தனை வழக்கு போட்டாலும், இந்து மதத்தின் உரிமைக்காக போராடுவேன்''என்றார்.

இதனிடையே மைசூருவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனந்தகுமார், '' சித்தராமையாவின் ஆட்சியில் திப்பு ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மிலாது நபி பேரணி நடத்த முடிகிறது. ஆனால் அனுமான் ஜெயந்தி கொண்டாட முடியவில்லை. இந்துக்களை ஒடுக்குவதில் ஹிட்லரை போல செயல்படுகிறார். ராவண ஆட்சி செய்துவரும் சித்தராமையாவுக்கு தக்கப்பாடம் புகட்டப்படும். மைசூருவில் இந்துக்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும். இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்''என்றார்.

மைசூருவில் பாஜக, பஜ்ரங் தளம், அனுமான் சேனா உள்ளிட்ட அமைப்பினர் போராட்டத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக கே.ஆர். பேட்டை, உன்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. சில இடங்களில் போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

16 mins ago

சினிமா

19 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

17 mins ago

சினிமா

35 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

29 mins ago

சினிமா

40 mins ago

சினிமா

43 mins ago

வலைஞர் பக்கம்

47 mins ago

சினிமா

52 mins ago

மேலும்