தேர்தல் 2019: விவசாயிகளின் தேர்தல் போராட்டம்

By ஜெய்

நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்துள்ளது நிசாமாபாத் மக்களவைத் தொகுதி. 185 வேட்பாளர்கள் மோத இருக்கின்றனர். இதுபோல்

1996-ல் தெலுங்கானா நல்கொண்டா மக்களவைத் தொகுதியை நாடே திரும்பிப் பார்த்தது. அங்கு நிலவியத் தண்ணீர்ப் பிரச்சினை தெரியப்படுத்த வேட்பாளர்கள் 480 பேர் தேர்தல் களத்தில் குதித்தனர். இப்போதும் அதே தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த நிசாமாபாத்தில் விவசாயிகள் தங்கள் பிரச்சினைக்காகத் தேர்தல் களத்தில் குத்தித்திருக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே வரட்சி, வெள்ளம், பூச்சித் தாக்குதல் உள்ளிட்ட பல காரணங்கள் விவசாயம் பொய்த்துப் போய், வெள்ளாமை வீடு வந்து சேராத நிலை. அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதனால் அரசின் கவனம் ஈர்க்க அவர்கள் பல விதமான போராட்டங்களை நடத்தினர்.

அரசு அவர்களுக்குச் செவி சாய்க்கவில்லை. அதனால் தேர்தல் கவனத்தில் இருக்கும் ஆளும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேர்தலையே ஒரு போராட்டம் ஆக்கியிருக்கிறார்கள் நிசாமாபாத் விவசாயிகள். பஞ்சாபில் கரும்பு விவசாயிகளின் போராட்டம் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் பெரும் பாதிப்பை விளைவித்து வருவதும் கவனிக்கத்தக்கது.

தெலங்கானாவின் நிசாமாபாத் இந்தியாவின் மிகப் பெரிய மஞ்சள் சந்தைகளுள் ஒன்று. நிசாமாபாத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் மஞ்சளுக்கு இந்திய அளவில் கிராக்கி உள்ளது. புள்ளியல் இயக்ககத் தகவலின்படி 5,668 ஏக்கரில் இங்கு மஞ்சள் பயிரிடப்படுகிறது. நிசாமாபாத் சந்தையிலிருந்து பல நாடுகளுக்கு மஞ்சள் ஏற்றுமதிசெய்யப்படுகிறது. மஞ்சள் 10 மாதக் காலப் பயிராகும்.

அதனால் அந்த அளவுக்குச் செலவு பிடிக்கும் தொழிலாகவும் உள்ளது இது. மொத்தமாக ஒரு குவிண்டல் மஞ்சளுக்கு ரூ.7,500 வரை ஆவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அரசு ரூ.4,500 தருவதாகச் சொல்கிறது. இது எப்படி முறையான ஆதரவு விலை ஆகும், என்பது விவசாயிகளின் கேள்வி. இது அல்லாது இடைத்தரகர்களுக்கு வேறு பங்கு கொடுக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தத் தரகு பிரச்சினைக்கு முடிவு கட்ட மத்திய அரசு இ-நாம் என்னும் திட்டம் முன்மொழியப்படுகிறது. இது 2016-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இணையத் திட்டம் எல்லாச் சந்தைகளையும் ஒரே புள்ளியில் இணைத்தது. அதை 2017-ல் நிசாமாபாத் சந்தை சுவீகரித்துச் செயல்படுத்தத் தொடங்கியது.

இந்தத் திட்டத்தின்படி சந்தையில் மொத்தமாகப் பொருட்கள் சேகரிக்கப்படும். அந்தச் சேகரிப்பு எண் விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும். உரிமம் பெற்ற வியாபாரி மஞ்சளைச் சோதித்து அதற்கேற்ற விலையை இணையம் மூலம் தெரிவிக்க வேண்டும். உள்ளதில் அதிக விலை கேட்டவருக்கு இணையத் திட்டமே நேரடியாக ஏலம் வழங்கப்படும்.

இது விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடியதாகத் தெரிகிறது. ஆனால், இல்லை என்கிறார்கள் நிசாமாபாத் மஞ்சள் விவசாயிகள். சந்தையில் நேரடியாகக் கலந்துகொள்ளும்போது வியாபாரிகளை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்புள்ளது. தரத்துக்குத் தகுந்த விலையை வியாபாரிகள் நேரடியாகப் பேசி வாங்கிக் கொள்வார்கள்.

ஆனால், இந்த இ-நாம் திட்டத்தில் சொல்லப்படும் விலைதான் அதிகம் என எப்படித் தெரிந்துகொள்வது எனக் கேள்வி எழுப்புகிறார்கள் அவர்கள். அதுபோல இ-நாம் திட்டத்தில் ஒரே விலை எல்லாத் தர மஞ்சளுக்கும் விதிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

அதனால் அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு, மஞ்சளுக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதும், தேசிய மஞ்சள் வாரியம் அமைப்பதும் எனத் தீர்மானமாகினர். இந்நிலையில் ஒருங்கிணைந்த ஆந்திராவிலிருந்து பிரிந்து தெலுங்கானா உதயமானபோது அதன் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்தது. மஞ்சள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதும் அவற்றுள் முக்கியமானவை.

2014 மக்களவைத் தேர்தலில் இந்த வாக்குறுதிகளைச் சொல்லித்தான் நடப்பு மக்களவை உறுப்பினரும் 2019 தேர்தல் வேட்பாளருமான கல்வகுண்டல கவிதா வாக்கு சேரிகரித்தார். இவர் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவின் மகள். ஆனால், இன்னும் அவை வாக்குறுதிகளாகவே உள்ளன.

கடந்த சில மாதங்களாகவே நிசாமாபாத் மஞ்சள் விவசாயிகளும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல், ஆட்சியர் அலுவலக முற்றுகை எனப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக இப்போது தேர்தலில் குதிக்க அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

முதலில் விவசாயிகள் ஆயிரம்பேர் தேர்தலில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத கவிதாவை எதிர்த்துப் போட்டியிட முடிவுசெய்ததாகச் சொல்லப்படுகிறது. ஆளும் கட்சி தலையீட்டால் அது சாத்தியம் இல்லாமல் போனது. இப்போது விவசாயிகள் 178பேர் உள்பட 185 பேர் நிசாமாபாத் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஆனால், விவசாயிகள் 250 பேர் மனு செய்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.

சிலரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகளின் இந்தப் போராட்டத்தால் சந்திரசேகர ராவும் மகளும் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகின்றனர். இன்னொரு பக்கம் சவாலான இந்தத் தேர்தலை எப்படி நடத்துவது எனத் தேர்தல் ஆணையமும் ஆலோசித்துவருகிறது. விவசாயிகள் தங்களின் போராட்டம் கவனத்தைப் பெற்றுவரும் நிலையில் உற்சாகமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

நிசாமாபாத் விவசாயிகளைத் தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகளும் தேர்தல் களத்தில் குதிக்கவுள்ளனர். ஆனால், அது தமிழ்நாட்டில் அல்ல. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாராணசித் தொகுதியில் போட்டியிடவுள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் 111பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாக விவசாயிகளின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தியதுபோது பாராமுகம் காட்டிய பிரதமர் தோல்வி முகம் காண வேண்டும் என்பது அவர்களது இப்போதைய போராட்டம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

56 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்