தினேஷ் குண்டுராவ், உம்மன் சாண்டி சென்னை வருகை; ஸ்டாலினுடன் தொகுதி பங்கீடு குறித்து 25-ல் பேச்சு: காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை

By செய்திப்பிரிவு

தொகுதிப் பங்கீடு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தினேஷ் குண்டுராவ், உம்மன் சாண்டி ஆகியோர் வரும் 25-ம் தேதி பேச்சு நடத்தவுள்ளனர்.

திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் உள்பட 10 கட்சிகள் உள்ளன. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் உருவான இந்தக் கூட்டணி வரும் தேர்தலிலும் தொடர்கிறது. ஆனால், தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வமாக எந்தப் பேச்சும் இதுவரை தொடங்கவில்லை.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் பேசிக்கொள்ளலாம் என்று திமுக தலைமை கூறியதாக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூறிவந்தனர். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டுராவ், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் நாளை சென்னை வருகின்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நாளை மாலை நடைபெறும் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் மாநிலத் தலைவர்கள் எம்.கிருஷ்ணசாமி, கே.வீ.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சு.திருநாவுக்கரசர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில செயல் தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

முதல் கட்ட பேச்சு

தமிழகத்தில் காங்கிரஸுக்கு 10 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்கு வங்கி உள்ள தொகுதிகள், திமுகவிடம் கேட்க வேண்டிய தொகுதிகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். அதனைத் தொடர்ந்து வரும் 25-ம் தேதி தினேஷ் குண்டுராவ், உம்மன் சாண்டி, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, கே.எஸ்.அழகிரி, கே.ஆர்.ராமசாமி ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துதொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக முதல்கட்ட பேச்சு நடத்துகின்றனர். அப்போது, காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் அளிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2011 பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. இதுவே, 2016-ல் அது 41 ஆக குறைந்தது. வரும் பேரவைத் தேர்தலில் 41 தொகுதிகளை காங்கிரஸ் கேட்கிறது. ஆனால், கூட்டணியில் 10 கட்சிகள் இருப்பதால் 20 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று திமுக தரப்பில் கூறப்பட்டதாக செய்திகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து தான் ஜனவரி 14, 23, 24, 25 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரக் கூட்டங்களில் பேசும்போது திமுக பற்றியோ, ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்றோ ராகுல் காந்தி பேசவில்லை. இது பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து ஜனவரி 25-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், “ திமுக கூட்டணியில் தொடர்வதாகவும், மு.க.ஸ்டாலினை முதல்வராக ஏற்கிறோம்" என்றும் கூறினார். 3-வது கட்டமாக வரும் 27, 28, மார்ச் 1 தேதிகளில் தென் மாவட்டங்களில் ராகுல் பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.

இணக்கமான சூழல்

அதற்குள் கூட்டணியில் இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ பேச்சை வரும் 25-ம் தேதி காங்கிரஸ் தொடங்குகிறது. திமுக 20 தொகுதிகள் தர முடியும் என்று கூறினாலும் 30 தொகுதிகளுக்கு குறையக் கூடாது என்று சோனியாவும், ராகுல் காந்தியும் உறுதியுடன் இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். இந்தச் சூழலில் திமுக – காங்கிரஸ் இடையே பேச்சு தொடங்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்