வேட்பாளருடன் வரும் ஆதரவாளர்களால் போக்குவரத்து பாதிப்பு; ஆன்லைனில் வேட்புமனுவை தாக்கல் செய்யும் முறை வருமா?- கடும் நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள் கருத்து

By ச.கார்த்திகேயன்

முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலின்போது வரும் அவர்களது ஆதரவாளர்களால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அநேக இடங்களிலும் இந்த நிலை காணப்படுகிறது. இதைத் தவிர்க்க ஆன்லைன் வேட்புமனு தாக்கல் முறையை கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. வடசென்னை மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனுக்கள், பேசின்பாலத்துக்கு அருகில் உள்ள மூலக்கொத்தளம் மாநகராட்சி அலுவலகத்தில் பெறப்படுகிறது. இதையொட்டி அமைந்துள்ள பேசின்பாலம் சாலை எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். ஸ்டான்லி மருத்துவமனை, அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை ஆகியவற்றுக்கு செல்வதற்கான முக்கிய சாலையாக பேசின்பாலம் சாலை உள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் வந்ததால், பேசின்பால சாலையில் போக்குவரத்து முடங்கியது. இதுபோன்ற நேரங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாவட்ட தேர்தல் அலுவலகமும் மாநகர காவல் துறையும் முன்கூட்டியே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதேபோன்று பெரம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் அமைந்துள்ள ஜிஎன்டி சாலை, தென் சென்னை தேர்தல் நடத்தும் அலுவலகம் அமைந்துள்ள அடையாறு போன்ற பகுதிகளிலும் வேட்புமனு தாக்கலுக்கு வருவோர்களால் போக்குவரத்து பாதிக்கிறது. வரும் செவ்வாய்க்கிழமை வரை இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள் சிலர் கூறியதாவது: பல்வேறு சாதி, வருமான சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட மக்கள் நலத்திடங்களுக்காக விண்ணப்பிப்பது ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டது. இதேபோல் வேட்புமனு தாக்கலையும் ஆன்லைன் முறைக்கு மாற்றிவிட்டால், இதுபோன்ற போக்குவரத்து பாதிப்புகளை தவிர்க்கலாம். வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும் நாளன்று அசல் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். வாக்குப்பதிவு இயந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் விவிபாட் இயந்திரம் என அனைத்தும் டிஜிட்டலுக்கு மாறியுள்ள நிலையில் ஆன்லைன் வேட்புமனு தாக்கலும் சாத்தியமான ஒன்றுதான்.

பிரச்சாரத்துக்காக பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள், பட்டாசுகள் போன்றவற்றால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இதுபோன்ற அசவுகரியங்களை தவிர்க்கும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “ஆன்லைன் வேட்புமனு தாக்கலை கொண்டு வரவே முடியாது என்று கூற முடியாது. அடுத்து வரும் தேர்தல்களில், உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் கொண்டு வரப்படலாம்” என்றார்.

சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ் கூறும்போது, “இந்திய தேர்தல் ஆணையம் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது பல்வேறு மாற்றங்களைக் அடைந்துள்ளது. பிற்காலத்தில், ஆன்லைன் வேட்புமனு தாக்கலும் சாத்தியமாகும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 min ago

இந்தியா

7 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

13 mins ago

வலைஞர் பக்கம்

53 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்