இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கே சொந்தம்; தேர்தல் ஆணையத்தின் உத்தரவை உறுதிசெய்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

இரட்டை இலை சின்னம் மற்றும் அஇஅதிமுக என்ற பெயர் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கே சொந்தம் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ம் தேதி காலமானார். இதையடுத்து, வி.கே.சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் அதிமுக பிரிந்தது. இந்த நிலையில், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது ‘இரட்டை இலை’ சின்னத்துக்கு இரு தரப்பும் உரிமை கோரியதால், அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

இதைத் தொடர்ந்து, இரட்டை இலைசின்னத்துக்கு உரிமை கோரி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த அவைத் தலைவரான இ.மதுசூதனன் தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எதிர் தரப்பினராக இருந்தனர். அப்போது, சசிகலா பக்கம் முதல்வர் பழனிசாமி இருந்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, டிடிவி தினகரன் அணிக்கு அஇஅதிமுக (அம்மா) என்ற பெயரும், தொப்பி சின்னமும் ஒதுக்கப்பட்டது. அதேபோல ஓபிஎஸ் அணிக்கு அஇஅதிமுக (புரட்சித்தலைவி அம்மா) என்ற பெயரும், மின்கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டது.

முறைகேடுகள் காரணமாக அந்த தேர்தல் ரத்தான பிறகு, முதல்வர் பழனிசாமி அணியும்,ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்தன. அதன் பிறகு, இந்த வழக்கில் முதல்வர் பழனிசாமி அணி, ஓபிஎஸ் அணியுடன் இணைந்து தேர்தல் ஆணையத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த தேர்தல் ஆணையம் கடந்த 2017 நவம்பர் 23-ம் தேதி இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகளுக்கு ஒதுக்கியது. மேலும்,அவர்கள்தான் உண்மையான அஇஅதிமுக என்றும், கட்சி அவர்களது கட்டுப்பாட்டில்தான் இயங்கும் என்றும் அறிவித்தது. இதனால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) என்ற புதிய கட்சியை ஆரம்பித்த டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகளுக்கே சொந்தம் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து சசிகலாவும், டிடிவி தினகரனும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா ஷேகல் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியும், டிடிவி தினகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வழக்கறிஞர் சி.ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோரும், ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், முகுல் ரோஹ்தகி ஆகியோரும், தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.சோப்ராவும் ஆஜராகி வாதிட்டனர்.

இதற்கிடையில், குக்கர் சின்னத்தையே தங்களுக்கு ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் 4 வாரங்களுக்குள் தீர்ப்பு அளிக்காவிட்டால், தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக முடிவு எடுக்கலாம் என்று கடந்த 7-ம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை கடந்த 8-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா திங்ரா ஷேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:இரட்டை இலை சின்னமும், அதிமுக என்ற பெயரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கே சொந்தம் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்கிறோம்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு தமிழகம், புதுச்சேரி சேர்த்து மொத்தம் 157 எம்.பி., எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. ஆனால் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள சசிகலா, டிடிவி தினகரன் அணிக்கு மொத்தம் 26 எம்.பி., எம்எல்ஏக்களின் ஆதரவே உள்ளது. அதில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் சரியான உத்தரவைத்தான் பிறப்பித்துள்ளது. எனவே, அதில் தலையிட அவசியம் இல்லை என்பதால், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து, குக்கர் சின்னம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதால், 15 நாட்களுக்கு அந்த சின்னத்தை வேறு யாருக்கும் ஒதுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு சசிகலா தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கோரிக்கை விடுத்தார். இதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.

முதல்வர் உற்சாகம்

அவிநாசி புதுப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி நேற்று கூறியதாவது:

உண்மையான அதிமுக நாங்கள்தான் என்பது நீதிமன்றம் மூலமாக மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த இயக்கத்தை அழித்துவிடலாம் என்று நினைத்தனர். கட்சியைக் கைப்பற்றிவிடலாம் என கங்கணம் கட்டிக்கொண்டு இடையூறு செய்தவர்களுக்கு பதில் தரும் வகையில் தீர்ப்பு வந்துள்ளது. நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும், அவர்கள் இதே ஆதாரங்களைத் தான் மீண்டும் கொடுப்பார்கள். கட்சியை உடைக்க வேண்டும் என்ற திமுகவின் சதி திட்டத்தால், இந்தவழக்கை தினகரன் தொடுத்தார். இன்றைக்குநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது.

 மேல்முறையீடு செய்வோம்: தினகரன்

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் நேற்று கூறியதாவது: இரட்டை இலை சின்னம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். நாங்கள் அதிமுகவின் ஒரு அங்கம் என்று டெல்லி உயர் நீதிமன்றமே கூறியுள்ளது. சின்னம் என்பது முக்கியம் அல்ல. யார் அங்கு இருக்கிறார்கள் என்பதையே மக்கள் பார்ப்பார்கள். எனவே, இந்த தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு அல்ல. குக்கர் சின்னம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்வோம். குக்கர் சின்னத்தை நம்பியும் நாங்கள் இல்லை. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். அனைத்து தொகுதிகளிலும் சுயேச்சையாக நிற்போம். ஒவ்வொரு தொகுதியிலும் வெவ்வேறு சின்னத்தில் நின்றாலும் 40 தொகுதிகளிலும் கட்டாயம் வெற்றி பெறுவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

26 mins ago

கருத்துப் பேழை

19 mins ago

கருத்துப் பேழை

27 mins ago

சினிமா

2 hours ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

மேலும்