தேர்தலுக்குப் பிறகு யாருடைய ஆதரவும் நரேந்திர மோடிக்கு தேவைப்படாது: பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பேட்டி

By செய்திப்பிரிவு

தேர்தலுக்குப் பிறகு யாருடைய ஆதரவையும் நாட வேண்டிய நிலை நரேந்திர மோடிக்கு ஏற்படாது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.

சென்னையில் பாஜக தலைமை யகமான கமலாலயத்தில் அவர் நிருபர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

பாஜக தேர்தல் அறிக்கையை பொருளாதார, அரசியல் நிபுணர்கள் பாராட்டியுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்புதிய முயற்சியால் மாநில அரசுகளுக்கான முக்கியத்துவம், மரியாதை, உரிமைகள் கிடைக்கும்.

மத்திய அரசு ஆளும் மாநிலங்களில் ஒரு கண்ணோட்டம், மற்ற மாநிலங்களில் வேறு கண் ணோட்டம் என்ற நிலை அடிபட்டுப் போகும். வாஜ்பாய் காலத்திலே நதிகள் இணைப்புக்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டன. கங்கை-காவிரி இணைப்புக்கு அதிக செலவாகும் என்பதால், விந்தியத்துக்கு வடக்கே, தெற்கே என பிரித்து, தென்னக நதிகள் இணைப்பு திட்டத்தை அமல்படுத்து வது, கிராமங்களுக்கான கால்வாய் அமைப்பது முதற்கொண்டு அப்போதே திட்டமிடப்பட்டுவிட்டது. தென்னக நதிகளைப் பொருத்தவரை மகாநதி-கோதாவரி-கிருஷ்ணா ஆகிய நதிகளை இணைத்து ஒகேனக்கல்லுடன் இணைக்க திட்டமிடப்பட்டது.

ராமர் சேது பாலம் நமது நாட்டின் கலாச்சார பாரம்பரிய சின்னமாகும். இப்பாலத்துக்கு குந்தகம் ஏற்படாமல் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த 4-வது பாதை வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே பரிந்துரைக்கப்பட்டது. ராமர் பாலத்துக்கு குந்தகம் ஏற்படாமல் சேது திட்டம் நிறைவேற்றுவதில் ஆட்சேபம் இல்லை.

பொது சிவில் சட்டம் பற்றி அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் அரசியலமைப்புச் சட்ட வரையறைக்கு உட்பட்டு ராமர் கோயில் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தீர்ப்பு வந்த பிறகு ராமர் கோயில் கட்ட சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். ராமர் கோயில் கட்டுவது எங்களது அடிப்படைக் கொள்கை.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்துள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்குவது குறித்து அனைத்து தரப்பினருடன் விவாதிக்கப்படும் என்றுதான் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விவாதிப்பது எப்படி தவறாகும்?

அண்டை நாடுகள், அண்டை மாநிலம் குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தமிழகத் தின் முக்கிய கோரிக்கைகளான இலங்கைத் தமிழர் நலன், தமிழக மீனவர்கள் நலன் குறித்த தகவல்கள் கொண்ட துணை தேர்தல் அறிக்கை வெளியாகும் என நினைக்கிறேன்.

நீலகிரி பாஜக வேட்பாளர் குருமூர்த்தி வேட்புமனு நிராகரிக் கப்பட்டது துரதிருஷ்டவசமானது. எங்கள் வேட்பாளர் விலைபோகவில்லை. அவர் தவறு செய்திருக்கலாம், துரோகம் செய்யமாட்டார். ஏ.பி. படிவத்தை எடுத்துச் செல்லும்போது விபத்து ஏற்பட்டதால் தாமதம் ஆகியிருக்கிறது. அதற்காக வேட்பு மனுவை நிராகரித்துள்ளனர். அதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

பாஜக 272 இடங்களில் வெற்றி பெறும். கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும் இடங்களையும் சேர்த்தால் 300-ஐ தாண்டும். தேர்தலுக்குப் பிறகு யாரிடமும் ஆதரவு கேட்கும் நிலை நரேந்திர மோடிக்கு ஏற்படாது. தேர்தலுக்கு பிறகு அதிமுக பாஜகவோடு போய்ச்சேரும் என்று கூறுவது திசை திருப்பும் முயற்சியாகும். கருணாநிதியைப் பொருத்தவரை திமுக எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ அது, மதச்சார்பற்ற கூட்டணி. அக்கட்சி இல்லாத கூட்டணி, மதவாத கூட்டணி. அவர்கள் எங்களோடும் கூட்டணி வைத்துள்ளார்கள். மதவாத கூட்டணி கோஷம் மக்களிடம் எடுபடாது. பாஜகவுக்கு கோகுலம் மக்கள் கட்சியும், தமிழக மருத்துவ நாவிதர் பேரவையும் ஆதரவு தெரிவித்துள்ளன என்றார் இல.கணேசன்.

குறைந்தபட்ச பொது செயல்திட்டம்

பொது சிவில் சட்டம் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்த கருத்து பற்றி பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசனிடம் ‘தி இந்து’ நிருபர் கேட்டபோது, “மதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள எல்லாவற்றையும் பாஜக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. அதுபோல பாஜக தேர்தல் அறிக்கையில் உள்ளவற்றில் சிலவற்றை அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் போகலாம்.

இது, ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அறிக்கை அல்ல; பாஜகவின் தேர்தல் அறிக்கை. மத்தி யில் பாஜக தலைமையில் ஆட்சி அமையும்போது, ‘குறைந்தபட்ச பொது செயல்திட்டம்’ அடிப்படையில் அரசு செயல்படும். அப்போது கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து பொது சிவில் சட்டம் குறித்து தீர்மானிக்கப்படும்” என்றார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மதிமுக வேட்பாளர் மாசிலாமணியை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரசாரம் செய்தபோது, பொது சிவில் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த திமுகவுடன் கூட்டணி வைக்கலாமா என்று முஸ்லிம் இயக்கங்களிடம் கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

45 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்