தேர்தல்: மீனவர்களுக்கு தூண்டில் போடும் வேட்பாளர்கள்

By ராமேஸ்வரம் ராஃபி

தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் துவங்கியுள்ளதால் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துள்ள தொழில்முறை மீனவர்களை தேர்தல் நாளன்று வாக்களிக்க தங்களின் சொந்த ஊர்களுக்கு வரவழைக்கும் நடவடிக்கைகளில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்கள் உள்ளன. இந்தக் கடலோர மாவட்டங்களில், ஏப்ரல், மே மாதங்கள் கடல்சார் உயிரிகளின் இனப்பெருக்க காலமாக மத்திய வேளாண் அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

இதனால், தமிழகம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் இந்த ஆண்டுக்கான 45 நாள் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும், இந்த தடைக்காலம் மே 29 வரை அமலில் இருக்கும். இந்த மீன்பிடித் தடைக்காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகளைப் பயன்படுத்தி கடலுக்குச் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்கு செல்லாமல் கடற்கரையில் ஆழங்குறைந்த பகுதிகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன.

மீன்பிடி தடை காலத்தில் தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழிலின்றி நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தடைக்காலம் அமலில் இருக்கும் 45 தினங்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ள தொழில்முறை மீனவர்கள் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து கடல்சார் தொழிலோ அல்லது கூலி தொழிலோ செய்கிறனர்.

நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மீனவர்களை தங்களின் சொந்த ஊர்களுக்கு வரவழைக்க வேட்பாளர்கள் தூண்டில் போட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மீனவப் பிரதிநிதி ஒருவர் கூறும்போது, "ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ஆண்டு தோறும் தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த 45 நாட்களில் கடலுக்குப் போக முடியாமல் பாதிக்கப்படும் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் தமிழக அரசு நிவாரணமாக வழங்குகிறது. ஆனால் இந்த தொகை போதுமானதாக மீனவர்களுக்கு இருப்பதில்லை. எனவே இந்த காலகட்டத்தில் கேரளா உள்ளிட்ட அண்டை கடற்கரை மாநிலங்களுக்கு தொழில்முறை மீனவர்கள் இடம் பெயர்ந்து அங்கு கடலுக்கு செல்வது அல்லது கூலி வேலைகளை பார்க்கின்றனர்.

தற்போது அண்டை மாநிலங்களில் தொழிலுக்காக சென்றிருக்கும் மீனவர்களின் ஓட்டுகளை பெறுவதற்கு வேட்பாளர்கள் தேர்தல் நாள் அன்று வந்துச் செல்லும் போக்குவரத்துச் செலவை ஏற்றுக் கொள்கிறோம். எங்களுக்கு ஓட்டுப் போட்டு விட்டுச் செல்லுங்கள் என்று மீனவர்களுக்கு தூண்டில் போட்டு வருகின்றனர்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

25 mins ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

மேலும்