அரசியலுக்கு வர ரஜினிக்கும் ஆசை உண்டு: பாலிவுட் நடிகை ஹேம மாலினி பேட்டி

By ஆர்.ஷபிமுன்னா

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மக்களவை தேர்தலுக்காக போட்டியிடுகிறார் பாலிவுட் நடிகை ஹேமமாலினி (64). மாநிலங்களவை முன்னாள் எம்பியான (2003-09) இவருக்கு கடும் போட்டியாக இருப்பவர் காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த ராஷ்டிரிய லோக் தளம் வேட்பாளரான ஜெயந்த் சௌத்ரி.

மதுராவின் கோவர்தனில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவர், ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்காக அளித்த சிறப்பு பேட்டி:

பாலிவுட் திரையுலக கனவுக்கன்னிக்கு அரசியலில் ஈர்ப்பு வரக் காரணம் என்ன?

பாலிவுட்டிலிருந்து முதன் முறையாக பாஜகவில் இணைந்தவர் வினோத் கன்னா. இவர்தான் எனக்கு அரசியலில் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக் கூறினார். அவர் கூறியதன்பேரில் நான் 2004-ல் அரசியலில் நுழைந்தேன். இதன்மூலம் திரையுலகில் கிடைக்கும் அளவிற்கு பொதுமக்களின் ஆதரவும் அன்பும் அரசியலிலும் கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்.

பாஜகவில் உங்களை ஈர்த்த முக்கிய அம்சங்கள்?

நான் அரசியலில் நுழையும்போது பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய்ஜியை பற்றி கேள்விப்பட்டு மலைத்து விட்டேன். எதையும் வெளிப்படையாக தைரியமாக செய்யும் அவரது திறமை. மேலும் காங்கிரஸைப் போல் லஞ்சம் ஊழல் பிரச்சனைகள் இந்தக் கட்சியில் கிடையாது.

கட்சியின் மூத்த தலைவரான அருண் ஜேட்லி அடிக்கடி காங்கிரஸ் செய்யும் தவறை சுட்டிக்காட்டி பேசியதை நான் ராஜ்யசபையின் உறுப்பினராக இருந்தபோது கேட்டு ஆச்சரியப்பட்டு போனேன். அவர் அறிவுப்பூர்வமாக கூறும் பல விஷயங்கள் அற்புதமானவை, என்னை பாஜகவிற்கு கவர்ந்து இழுத்தவை.

ராஜ்யசபை உறுப்பினராக இருந்த போது நீங்கள் செய்த சாதனை என்ன?

இதைப் பற்றிய முழு விவரம் சொல்ல இப்போது என்னிடம் நேரம் இல்லை. ஆனால் ஏராளமான பணிகள் செய்தேன். எம்பிக்கான நிதி எதையும் வீணாக்காமல் அனைத்தையும் பள்ளி, கல்லூரி மற்றும் சமூகப் பணியில் மக்களுக்காக செலவு செய்தேன்.

மதுரா தொகுதியில் போட்டியிட நீங்கள் விருப்பம் தெரிவித்தீர்களா? கட்சியே ஒதுக்கியதா?

ஒரு கிருஷ்ண பக்தையான எனக்கு அவர் மீது அளவு கடந்த ஆசை உண்டு. இதற்காக எனக்கு அடிக்கடி மதுரா வருவது மிகவும் பிடிக்கும். எனவே, இந்தத் தொகுதியை நானாகத்தான் தேர்ந்தெடுத்தேன். தேர்தலில் போட்டியிடும் முடிவையும் நானே எடுத்தேன்.

மதுராவில் அதிக அளவில் இருக்கும் விதவைகளின் மறுவாழ்விற்காக முக்கிய திட்டங்களை வைத்திருக்கிறீர்களா?

விதவைகளின் நல்வாழ்விற்காக பலரும் அதிக அளவில் நிதியுதவி அளிக்கிறார்கள். இதை இடையில் இருக்கும் என்.ஜி.ஓ.க்கள் சாப்பிட்டு விடுவதாக கேள்விப்பட்டேன். இதைக் கண்காணித்து சரி செய்தாலே விதவைகளின் வாழ்வு நல்லதாகி விடும். ஆனால் மதுராவின் மற்ற பிரச்சினைகளை பார்க்கும்போது விதவைகளின் பிரச்சினை மிகவும் சிறியது.

கடந்த தேர்தலில் சுமார் இரண்டு லட்சம் வாக்குகளில் வெற்றி பெற்ற ஜெயந்த் சௌத்ரியை வெல்வது சாதாரணமானது எனக் கருதுகிறீர்களா?

கடந்த தேர்தலில் இவரது ராஷ்ட்ரிய லோக் தளம், பாஜக கூட்டணியில் போட்டியிட்டது. எனவே, அவர் பெற்ற பாதிக்கும் மேலான வாக்குகள் நான் பிரச்சாரம் செய்தமையால் கிடைத்தது. எனவே, இங்கு நான் கண்டிப்பாக வெல்வேன். அவர் ஜாட் சமூகத்தவர் எனில், நானும் ஒரு ஜாட் குடும்பத்து மருமகள்தான். (இவரது கணவர் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்)

உபியின் ராம்பூரில் ஜெயப்பிரதா போட்டியிட்டபோது நீங்கள் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்ய சென்றிருந்தீர்கள். இப்போது அதற்கு பதில் என்பது போல் உங்களை எதிர்த்து அவர் மதுராவில் கூட்டம் நடத்தியுள்ளாரே?

நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம் எனும் திரையுலகைச் சேர்ந்தவர்கள். ஆனால் அரசியல் என வரும்போது அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகள் சொல்வதைக் கேட்க வேண்டி இருக்கிறது. இதை நன்கு உணர்ந்து ஒருவருக்கு எதிராக ஒருவர் பிரச்சாரம் செய்ய வேண்டி உள்ளது. ராம்பூரில் பிரச்சாரம் செய்தபோது நான் என்னைப் பற்றி, எனது கட்சி மற்றும் அங்கு போட்டியிடும் அதன் வேட்பாளர் பற்றி மட்டுமே பேசினேன்.

இதில் அங்கு போட்டியிடும் ஜெயப் பிரதாவை பற்றி ஒரு வார்த்தைகூட நான் விமர்சிக்கவில்லை. அதேபோல் ஜெயாவும் என்னைப்பற்றி எதுவும் கூறியிருக்க மாட்டார் என நான் நம்புகிறேன்.

இந்த புரிதல் அரசியலில் இருக்கும் நட்சத்திரங் களிடம் தெளிவாக இருப்பதால் பிரச்சி னைகள் வருவதில்லை.

திரையுலகில் ஆப்பிள் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் என குடித்துக் கொண்டு, அவ்வப்போது நிழலில் அமர்ந்து பணியாற்றலாம். இதுவே அரசியலுக்காக களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டி இருக்கும். இது நடிகையான உங்களுக்கு சாத்தியமா?

நான் ஏற்கெனவே செய்து வருகிறேனே! இத்தனை நாளில் எனது நிறத்தைப் பாருங்கள்? நான் எப்படி இருந்தவள், இப்போது இப்படி மாறி விட்டேன். இதுபோல், கஷ்டப்பட்டு வேலை செய்வது எனக்கும் தெரியும். நான் ஒன்றும் தங்கப்படுக்கையில் படுத்துக் கொண்டே புகழ் பெற்றுவிடவில்லை. ‘ஹேமமாலினி’ என்ற பெயர் மிகவும் கஷ்டப்பட்டு நான் பெற்றது.

கோயிலில் பிரச்சாரம் செய்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே?

இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதற்கு எனது கட்சிதான் பதில் அளிக்க வேண்டும். ஏனெனில், என்னை கட்சி எங்கு அழைத்து செல்கிறதோ, அங்கு நான் செல்கி றேன், பிரச்சாரம் செய்கிறேன்.

பரத நாட்டியம், குச்சுப்புடி மற்றும் ஒடிசியில் சிறந்து விளங்கும் நீங்கள், உங்கள் எதிர்காலத்தை அதற்காக செலவிடுவீர்களா அல்லது அரசியலுக்காகவா?

இரண்டையும் வைத்துக் கொள்வேன். எவ்வளவு நாள் ஆட முடியுமோ ஆட வேண்டியது. பிறகு ஆட முடியாத அளவிற்கு வயதானாலும் அரசியலில் இருக்கலாம் அல்லவா? வீட்டில் சும்மா இருக்காமல், அரசியலில் இருந்து மக்களுக்காக எதையாவது நற்பணிகள் செய்யலாம் என எண்ணுகிறேன். இல்லையெனில் ஒரு பெரிய திரையுலக நட்சத்திரம் எனப் பெயர் பெற்றும் பயனில்லாமல் போய்விடும்.

மதுராவில் வென்று எனது பதவிக்காலம் வரை இங்கு தங்கி மக்களுக்காக நல்ல பணிகள் செய்வேன். தவிர, மத்திய அமைச்சராக நான் வரவில்லை. மும்பையில் எனக்கு சொந்த வீடு உள்ளது. அங்குதான் நிரந்தரமாக இருப்பேன்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் ஒரு நடிகையாக உங்களுக்கு நட்பு உண்டா?

அது ஒரு காலத்தில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்ததுடன் சரி. பிறகு ஒருமுறை நான் அங்கு சென்று அவரை சந்தித்தேன்.

சமீபத்தில் நரேந்திர மோடி சென்னை சென்றபோது ரஜினிகாந்தை சந்தித்தது பற்றி உங்கள் கருத்து?

ரஜினியும் மோடியும் சந்தித்தது மிகவும் நல்லது. ரஜினிக்கு அரசியலில் வர வேண்டும் என்ற அதிக ஆசை எப்போதும் உண்டு. ஆனால் ஏதோ ஒரு தயக்கம் அவருக்கு உள்ளது. என்னை அவர் பார்க்கும் போதெல்லாம், ‘எப்படி ஹேமா நீ இதை எல்லாம் செய்கிறாய்?’ என கேட்பார். இதற்கு நான், ‘நீங்களும் இதை செய்யலாம் அரசியலுக்கு வாங்க!’ என அழைப்பேன்.

பொது மேடைகளிலும் ஆயிரக் கணக்கானவர்கள் முன்னிலையிலும் ரஜினிக்கு நடிக்கவும், நடனமாடவும் மிகுந்த ஆசை. இதை நான் செய்யும் போதும் அவர், அனைவரின் முன்பாக எப்படி செய்கிறாய் என ஆச்சரியமாக கேட்பார். எனவே, அவருக்கு அரசியலில் வர ஆசை இருந்தும் உள்ள தயக்கம் என்ன என்பது அவருக்குத்தான் தெரியும். அவர் நினைத்தால் தாரளமாக அரசியலுக்கு வரலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்