கரும்பலகைக்கு அப்பால்... 24 - பள்ளிக்கூட நிழல்

By ‘கலகல வகுப்பறை’ ரெ.சிவா

பத்தாம் வகுப்பில் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது ஒலிபெருக்கியில் ஓர் அறிவிப்பு. அதன்படி குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழியை அனைவரும் கூறினோம்.

முடிந்தவுடன் கேட்டேன், “தம்பிகளா, குழந்தைத் தொழிலாளர் உருவாகக் காரணங்கள் என்னவா இருக்கும்?”

வறுமை, அப்பா அல்லது அம்மா இல்லாமல் இருப்பது, கடன் சுமை… என்றார்கள்.

இவை தவிரப் படிக்க முடியாதது, வன்முறை, கோபம் போன்ற பல காரணங்களால் வீட்டை விட்டு எங்காவது ஓடிப்போகும் சிறார்கள் பல்வேறு கடினமான தொழில்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ‘சலாம் பாம்பே’ படத்தைப் பாருங்க. குழந்தைத் தொழிலாளர் நிலை பற்றிப் புரியும்.

தெருவோரம் ஓர் இரவு

ஆசிரியர் வேலைக்கு வருவதற்கு முன்னால் தெருவோரச் சிறார்களுக்கான மறுவாழ்வு மையம் ஒன்றில் தன்னார்வத் தொண்டராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன்.அப்படித் தென்படும் சிறுவர்கள், சிறுமிகளிடம் பேசி அவங்களைப் பற்றிய தகவல்களைத் தெரிஞ்சுக்குவோம்.

வொர்க் ஷாப், ஹோட்டல் என்று பல இடங்களில் வேலைபார்த்து கஷ்டப்படும் சிறார்களுடன் பேச வைப்போம். இதுபோல பேசி உணர வைத்துப் பல சிறுவர்களை வீட்டில் கொண்டுபோய் விட்ட அனுபவங்கள் பல.

குப்பை பொறுக்குறவங்க தெருவில் என்ன கஷ்டப்படுறாங்க என்பதை உணர நானும் அவங்களோட ஒரு ராத்திரி முழுதும் குப்பை பொறுக்கியிருக்கேன்.

அந்த ஒரு இரவின் அனுபவங்கள் நகரத்தின் மாறுபட்ட பரிமாணங்களை உணர வைத்தன. ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு வகுப்பில் அதை மாணவர்களுடன் பகிராமல் இருந்ததில்லை. ஒவ்வொரு முறையும் அழுகையைக் கட்டுப்படுத்த முடிந்ததும் இல்லை.

எதிர்காலம் யார் கையில்?

தெருவின் பிள்ளைகளாகக் குழந்தைகளை மாற்றுவதில் பள்ளிகளின் பங்கும் இருக்கிறது. பள்ளி இளைப்பாறும் இடமாக, அவர்களுக்கு ஏற்ற முறையில் கற்றுத்தரும் இடமாக அமைந்துவிட்டால்போதும். பல குழந்தைகளின் எதிர்காலம் வளமானதாக மாறும்.

மறுநாள் காணொளிக் காட்சி அறையில் ‘அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்’ என்ற பாடலைத் திரையிட்டேன். தாயின் வலியின் ஊடே விடுதியில் படிக்கும் மகளின் துயரங்களையும் நம்பிக்கையையும் சொல்லும் பாடல்.

பாடலின் முடிவில் மாணவர்கள் நெகிழ்ந்திருந்தனர். ‘ஒரு நாள்’ என்ற குறும்படத்தைத் திரையிட்டேன். அன்புக்கும் கல்விக்கும் ஏங்கி, பசியால் அலைக்கழிந்து தெருவில் வாழ்வு முடிந்துபோகும் சிறுவனின் கதை.

படம் முடிந்ததும் பலரின் முகங்களும் உணர்வு வயப்பட்டிருந்தன. படம் குறித்துப் பேசும் மனநிலையில் நானும் இல்லை. பாடலும் படமும் மனத்துள் பல்வேறு எண்ணங்களைக் கிளறிவிட்டிருந்தன. வீடு சென்ற பிறகு இந்த எண்ணவோட்டத்தை நாட்குறிப்பில் எழுத

முயலும்படி மாணவர்களிடம் கேட்டுக் கொண்டேன்.

வீட்டின், சமூகத்தின் பல்வேறு கொடுமைகளுக்கிடையே குழந்தைகளுக்கு சற்றே நிழல் தரும் இடமாகப் பள்ளிக்கூடங்களே இருக்கின்றன.

‘ஒரு நாள்’ காண இணையச் சுட்டி:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்