திருப்பத்தூர் நகர பாஜக செயலாளர் கொலை: கேரளா, ஆந்திராவை சேர்ந்த 6 பேர் கைது

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி/திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகர பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டு ஊத்தங்கரை அருகே உடல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக கேரளா, ஆந்திராவை சேர்ந்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் கலிகண்ணன் (52). திருப்பத்தூர் நகர பாஜக செயலாளர். மேலும், குடிநீர் கேன் விநியோகம், ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவன தொழில்களிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வெப்பாலம்பட்டி பகுதியில் வேலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய ஏரிக்கரை பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இவரது சடலம் கிடந்துள்ளது.

தகவல் அறிந்த ஊத்தங்கரை டிஎஸ்பி அமலா அட்வின் தலைமையிலான போலீஸார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், கிருஷ்ணகிரி எஸ்பி சரோஜ் குமார் தாகூர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். சம்பவம் தொடர்பாக ஊத்தங்கரை போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், திருப்பத்தூர் டவுன் செட்டித்தெரு பகுதியில் கலிகண்ணன் நேற்று முன்தினம் இரவு நின்றிருந்ததும், அப்போது காரில் வந்த 4 பேர் அவரை அழைத்துச் சென்றதும் தெரிய வந்துள்ளது. எனவே, அவரை கடத்திச் சென்று கொலை செய்து உடலை வீசியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலை மிரட்டல்: விசாரணையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கலிகண்ணனுக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக பாஜக சார்பில் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ஊத்தங்கரை போலீஸார் மேற்கொண்ட துரிதமான விசாரணையைத் தொடர்ந்து ஆந்திரா, கேரளா மாநில கூலிப் படையினர் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழில் போட்டியா? - திருப்பத்தூர் சேர்மன் ஆறுமுகம் தெருவைச் சேர்ந்த ஹரிவிக்னேஷ் (24) என்பவருக்கும் கலி கண்ணனுக்கும் இடையே ஏற்கெனவே தொழில் போட்டி இருந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக கலி கண்ணன் கொலை செய்யப்பட்டுள்ளதால், ஹரிவிக்னேஷின் செல்போன் நடமாட்டத்தை போலீஸார் கண்காணித்தனர்.

அப்போது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. ஓசூர்-தேன்கனிகோட்டை சாலையில் காரில் சென்று கொண்டிருந்த ஹரி விக்னேஷை போலீஸார் பிடித்தனர். காரில் அவருடன் 5 பேர் இருந்தனர்.

போலீஸார் தீவிர விசாரணை: அவர்களிடம் நடத்திய விசாரணையில் கலி கண்ணன் கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஹரி விக்னேஷ் உள்ளிட்ட 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

54 mins ago

கருத்துப் பேழை

38 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

3 hours ago

மேலும்