யார் இந்த ரவுடி பினு?- திரும்பத்திரும்ப தப்பிக்கும்  ‘சுகர் பேஷண்ட்’ ரவுடி

By மு.அப்துல் முத்தலீஃப்

சென்னை

போலீஸாரிடம் சிக்குவதும், எப்படியோ ஜாமீன் கிடைப்பதும் பின்னர் தலைமறைவாவதும் மீண்டும் சிக்குவதும் என போலீஸாருக்கும், மீடியாக்களுக்கும் பழக்கமாகிப்போன ரவுடி பினு குறித்த சில தகவல்கள்.

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரவுடி பினு, சென்னைக்கு வந்து குடியேறி சூளைமேட்டில் தங்கியிருந்தார். 1997-ம் ஆண்டு முதல் சென்னையில் சிறு சிறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த பினுவுடன் ராதாகிருஷ்ணன், விக்கி, நாகராஜ் என பல ரவுடிகள் கூட்டுச் சேர்ந்தனர்.

பின்னர் தாதாவாக மாறிய பினுவின் சாம்ராஜ்யம் பெரிதானது.ஒரு கட்டத்தில் கூட்டாளிகள் பிரிந்து எதிரியாக மாறினர். அதில் முக்கியமானவர் அரும்பாக்கம் ராதா என்கிற ராதாகிருஷ்ணன்.

ஒருபுறம் போலீஸ் வழக்குகள் என நெருக்கடி அதிகரிக்க மறுபுறம் எதிரிகளால் உயிருக்கு ஆபத்து என்பதால் ஜாகையை வெளியூருக்கு மாற்றினார். 2014-ம் ஆண்டுக்குப்பின் ரவுடி பினு தலைமறைவானார். அவரைப் போலீஸார் தேடிவந்தனர்.

’அரும்பாக்கம் ராதாவின் அட்டகாசம் தாளமுடியவில்லை, அண்ணா நீங்கள் வாருங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்’ என சொந்த தம்பி அழைக்க தனது பிறந்தநாள் விழாவை முடிசூட்டு விழாவாக நடத்த முடிவெடுத்து சென்னையின் முக்கிய, நண்டு சிண்டு ரவுடிகளுக்கு அழைப்பு விடுத்தார் பினு.

சென்னையில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார் பிரபல ரவுடி பினு. பிறந்தநாள் கூட்டத்துக்கு சென்ற ஒரு அப்ரண்டீஸ் ரவுடி போலீஸார் வாகனச்சோதனையில் சிக்க அவர் சொன்ன தகவலை அடுத்து பெரும் போலீஸ் படை சுற்றி வளைத்து ரவுடிகளைக் கைது செய்தது.

இதில் சிக்காமல் தப்பிச் சென்றார் ரவுடி பினு, ஆனால் அவர் கேக் வெட்டிய புகைப்படங்கள் பிரபலமாகின. அவரை என்கவுன்ட்டரில் போடப்போவதாக தகவல் வெளியானதை அடுத்து என்கவுன்ட்டர் பீதியால் அவர் அதே பிப்ரவரி மாதம் அம்பத்தூர் போலீஸ் இணை ஆணையர் முன் பினு சரணடைந்தார்.

அப்போது அவர் பேசிய காணொலி வைரலானது, என்னை மன்னித்து வாழவிடுங்கள் என்று கெஞ்சியபடி பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மிகப்பெரிய தாதா, அரிவாளால் கேக்கை வெட்டியவர் என்றெல்லாம் பிம்பமாக காட்டப்பட்டவர், கைகளை குவித்தப்படி, “அய்யா நான் அவ்வளவு ஒர்த் இல்லீங்க, பாழாப்போன என் தம்பி பேச்சைக்கேட்டு பிறந்தநாள் கொண்டாட வந்து மாட்டிக்கிட்டேனுங்க, நான் சுகர் பேஷண்டுங்க என்னை அய்யா அவர்கள் மன்னித்து வாழவிட்டால் நான் சிவனேன்னு வாழ்வேன்” என்று அழுதபடி கூறியிருந்தார்.

விசாரணைக்கு பின்னர் பினுவை புழல் சிறையில் அடைத்தனர். அங்குள்ள மற்ற ரவுடிகளால் பினுவுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் வேலூர் சிறைக்கு அதிகாரிகள் மாற்றினர். கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி பினுவுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. 30 நாட்கள் மாங்காடு போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் ஜாமீனில் வந்த பினு தலைமறைவானார். பினுவை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் சென்னை எழும்பூரில் வைத்து ரவுடி பினு மற்றும் அவரது கூட்டாளிகளை போலீஸார் கைது செய்தனர். பின்னர் சில மாதங்களில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த பினு தலைமறைவானார்.

மீண்டும் அவரை போலீஸார் தேடிவந்தனர். ஒரு குற்றச் சம்பவத்தில் ரவுடி ஒருவன் துப்பாக்கியை வைத்துச் சுட அவரைப்பிடித்த போலீஸார் நடத்திய விசாரணையில், ரவுடி பினு விற்றதாக கூற போலீஸார் ரவுடி பினுவை தீவிரமாக தேடி வந்தனர் இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி கொளத்தூரில் உள்ள தனது தாயைச் சந்திக்க வந்த பினுவை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் மீண்டும் ஜாமீனில் வெளிவந்த ரவுடி பினு தலைமறைவானார். அதன்பின்னர் போலீஸார் அவரை தேடி வந்தனர். நேற்று முன் தினம் ரவுடி பினுவின் கூட்டாளியும் பின்னர் எதிரியாக மாறிவிட்ட ராதாகிருஷ்ணன் என்கிற அரும்பாக்கம் ராதாவும் கோவையில் சிக்கினார். தொடர்ந்து தலைமறைவாக இருந்த பினு நேற்றிரவு திருவல்லிக்கேணியில் போலீஸாரிடம் சிக்கினார்.

பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு திரும்பத்திரும்ப போலீஸாரிடம் பிடிபடுவதும், சில மாதங்களில் ஜாமீனில் இவர்கள் விடுவிக்கப்பட்டு தலைமறைவாவதும் போலீஸாருக்கே வெளிச்சம். மீண்டும் அவருக்கு ஜாமீன் கிடைக்கலாம் மீண்டும் அவர் தலைமறைவாகலாம்.

ரவுடி பினுமீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, ஆயுத தடைச் சட்டம், கொலை மிரட்டல், வழிப்பறி என பல்வேறு பிரிவுகளில் 19 சம்பவங்கள் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

44 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்