சீன சந்தையை இந்திய படங்கள் கையகப்படுத்துவது சாத்தியமா?

By ஸ்ரீதர் பிள்ளை

இந்திய சினிமா சர்வதேச நாடுகளின் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகிறது. ராஜமவுலியின் 'பாகுபலி 2'-க்கு தான் நன்றி சொல்ல வேண்டும். பாகுபலி 2, உலகளவில் ரூ.1,000 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. தொடர்ந்து ஆமிர்கானின் 'தங்கல்’ படம், மொழிமாற்றம் செய்யப்பட்டு மே 4-ஆம் தேதி சீனாவில் வெளியானது. அங்கும் வசூல் சாதனை படைத்து, ’கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ போன்ற ஹாலிவுட் படத்தை மிஞ்சி முதலிடத்தைப் பெற்றது.

வெரைடி என்ற ஹாலிவுட் வர்த்தக இதழ் தனது செய்தியில், "வெளியான இரண்டாவது வாரத்தில் ’தங்கல்’ 32.5 மில்லியன் டாலர்களை வசூலித்து, 10 நாள் வசூலாக 59.7 மில்லியன் டாலர்களை அள்ளிக்குவித்துள்ளது. இது, முதல் நாளில் வசூலித்த 11.3 மில்லியன் டாலர்களை விட மூன்று மடங்கு அதிகமாகும். தற்போது இந்தியாவின் 'தங்கல்’ வசூலித்த 58.1 மில்லியன் டாலர்களுக்கு இணையாக சீனாவிலும் 'தங்கல்' வசூலித்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.

சீனாவில் அதிகம் வசூலித்துள்ள இந்தியப் படம் என்ற சாதனையை 'தங்கல்' படைத்துள்ளது. 10 நாட்களில் ரூ.382.69 கோடி வசூலித்ததன் மூலம், இதற்கு முன் ஆமிர்கான் நடிப்பில் வெளியான 'பி.கே'வின் ரூ.123 கோடி வசூலை தாண்டியுள்ளது. இதற்கு முன்னால், 'பாகுபலி' முதல் பாகம், சீனாவில் 6,000 திரைகளில் வெளியிடப்பட்டு ரூ.7 கோடியை மட்டுமே வசூல் செய்தது. 'தங்கல்' சீனாவில் 9,000 திரைகளில் வெளியாகியுள்ளது.

எந்த பெரிய பிரம்மாண்டமும், கிராபிக்ஸ் காட்சிகளும் இல்லாமல், இந்தியாவில் தயாரான 'தங்கல்’ படம், இந்தியாவை விட, சீனாவில் அதிகமாக வசூலித்திருப்பது அசாத்தியமானது. இந்த வசூலின் மூலம் ’பாகுபலி 2’-க்குப் பிறகு 1000 கோடி வசூலித்த இரண்டாவது இந்தியப் படம் என்ற பெருமையை ’தங்கல்' பெற்றுள்ளது. 'தங்கல்’, மல்யுத்தப் போட்டி, விளையாட்டில் பெண்களின் முன்னேற்றம் பற்றி பேசுகிறது. அது சீன ரசிகர்களை ஈர்த்துள்ளது. இது குறித்து பேசிய அதுல் அனேஜா, "சீன கலாச்சாரத்தில் பெண்களை விட ஆண்களுக்கு முன்னுரிமை அதிகம். உற்சாகமான ஒரு தந்தை, தனது மகள்களை ஊக்குவித்து, மல்யுத்தத்தின் மூலம் எப்படி பாலின பாகுபாட்டை உடைக்கிறார் என தங்கலில் காண்பித்த விதம் சீன மக்களை இயற்கையாக கவர்ந்துவிட்டது" என்றார்.

இப்போது கேள்வி, அடுத்த சில வாரங்களில் சீனாவில் வெளியாகவிருக்கும் ’பாகுபலி 2’, தங்கலின் வசூலை மிஞ்சுமா என்பதுதான்.

சந்தையைப் புரிந்து கொள்ளுதல்

’பாகுபலி’ முதல் பாகத்தைத் தவிர தென்னிந்திய மொழிப் படங்கள் எதுவும் சீனாவில் பெரிய அளவில் வெளியானதில்லை. ’பாகுபலி’யும் தோல்வியுற்றது. மலேசியாவில் இருக்கு முன்னணி தமிழ் பட விநியோகஸ்தர் ஒருவர் பேசுகையில், "நாம் முடிந்தவரை சீன சந்தையில் நுழைய முயற்சிகள் மேற்கொண்டு தொடர்ந்து தோற்று வருகிறோம். ஏனென்றால் அந்நிய மொழிப் படங்களின் வெளியீட்டில் அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது. ரஜினிகாந்தின் ’கபாலி’, ’லிங்கா’ உள்ளிட்ட படங்களை வெளியிட முயற்சித்துள்ளோம் ஆனால் அனுமதி கிடைக்கவில்லை" என்றார். இயக்குநர் ஷங்கரின் 'ஐ' படத்துக்கு சீனாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்திருந்தாலும், திரையிடலுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்ற கூடுதல் தகவலையும் அவர் தந்துள்ளார்.

அமெரிக்காவுக்குப் பிறகு உலகின் மிகப்பெரிய இரண்டாவது திரைப்பட சந்தை சீனா. அதில் சாத்தியங்கள் அதிகம். 2016-ஆம் ஆண்டு,சீன பாக்ஸ் ஆபிஸ் 6.6.பில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. 2020ஆம் ஆண்டு வாக்கில் தென் அமெரிக்காவின் பாக்ஸ் ஆபிஸை சீனா தாண்டும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். சீனாவில் 32,000 திரைகள் உள்ளன. இந்தியாவில் 13,000 திரைகளே உள்ளன. சீன அரசாங்கம் உள்ளூர் சினிமாக்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன. வருடத்துக்கு 34 அந்நிய நாட்டு படங்களுக்கு மட்டுமே அனுமதி. அதில் 90 சதவிதம் ஹாலிவுட் படங்கள்.

தமிழ் சினிமா ஜொலிக்குமா?

சீனாவின் கட்டுப்பாடுகளால் தென்னிந்திய மொழிப்படங்கள் அங்கு வெளியாவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. தென்னிந்திய ஆக்‌ஷன் படங்களை விட, ஹாலிவுட்டின் பிரம்மாண்ட ஆக்‌ஷன் படங்களையே, குறிப்பாக 3டி படங்களையே சீனர்கள் விரும்புகின்றனர். ’தங்கல்’ ஹிட் ஆனது அதில் இருக்கும் தந்தை - மகள் உறவு என்கிற உணர்ச்சிப்பூர்வமான சித்தரிப்பால். அது சீனர்கள் மனதுக்கு நெருக்கமானது. ஆனால் ’பாகுபலி 2’வும், ஷங்கரின் ’2.0’வும் சீனாவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. வேறெந்த பெரிய பட்ஜெட் தென்னிந்திய படமும் சீன வெளியீட்டுக்கான பந்தயத்தில் இல்லை.

’பாகுபலி 2’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷோபு பேசுகையில், "சீனா சவாலான சந்தைதான். அவர்கள் ஹாலிவுட் படங்களையும், உள்ளூர் படங்களையுமே விரும்புகிறார்கள். ’பாகுபலி 1’ ஒரு வருடம் தாமதமாகவே அங்கு வெளியானது. அந்த நேரத்தில் படத்தின் கள்ள பதிப்பு சந்தையில் வந்துவிட்டது. அதனால் படம் எடுபடவில்லை. அது எங்களுக்கு ஒரு பாடம் தான். ’பாகுபலி 2’வைப் பொருத்தவரை, விநியோகஸ்தர் அதற்கான வேலைகளைத் துவங்கிவிட்டார். படம் சீக்கிரம் வெளியாகும்"

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

14 hours ago

மேலும்