”குயர் சமூகத்தினர் பல கேள்விகளுக்கான பதிலை இப்படத்தில் உணரமுடியும்” -  'ஒய் ஸோ ஸ்ட்ரெயிட்' இயக்குநர் மாலினி

By வா.ரவிக்குமார்

யார் ஆண் யார் பெண்ணென
பிறப்பின் உறுப்புகள் அலையும் நகரில்
இதயமென ஒரு நரம்பு
எறும்பென உள்நகர்வதை
உங்கள் மழை அறியுமோ?

தமயந்தியின் கவித்துவமான இந்த வரிகள் பின்னணியில் ஆங்கிலத்தில் ஒலிக்க, திரையில் மழைத்துளிகளின் சேர்ந்திசையில் நடனக் கலைஞர் அமேயா நனையும்போது, அவருடன் சேர்ந்து நாமும் மானசீகமாக நனைகிறோம்!

'லேடீஸ் அண்ட் ஜென்டில் வுமன்' ஆவணப்படத்தைத் தொடர்ந்து மாலினி ஜீவரத்னம் வெளியிட்டிருக்கும் 'ஒய் ஸோ ஸ்ட்ரெயிட்?' (Why So Straight) ஆவணப்படத்தின் காட்சிதான் முதல் பத்தியில் நீங்கள் படித்தது. 'நேர்' சிறந்தது. 'நேர்' வலிமையானது... என்று காலம் காலமாக நமக்கு புகட்டப்பட்டிருக்கிறது. 'நேர்' அல்லாததின் இருப்பையும், நியாயத்தையும் பேசுவதுதான் இந்த 'ஒய் ஸோ ஸ்ட்ரெயிட்?' ஆவணப்படம்.

புனேவில் வாழும் குயர் (Queer) சமூகத்தைச் சேர்ந்த அமேயாவின் வாழ்க்கையே மிகவும் ரசனையுடன் ஆவணப்படமாக்கி இருக்கிறார் மாலினி. அவரிடம் பேசியதிலிருந்து...

'ஒய் ஸோ ஸ்ட்ரெயிட்' ஆவணப்படம் எப்படி சாத்தியமானது?

"கிரவுட் ஃபண்டிங் எனப்படும் மக்களின் பங்களிப்போடு 'வேட்டிக்காரி' புரொடக்‌ஷன்ஸ் சார்பாக இந்த ஆவணப்படத்தை எடுத்திருப்பதை மிகவும் முக்கியமான நகர்வாக பார்க்கிறேன். கிரவுட் ஃபண்டிங் முறையில் இன்னமும் நிறைய குயர் சமூகத்தினரின் பிரச்சினைகளை வாழ்க்கையைப் பேசும் படங்கள் வரவேண்டும். அந்தப் பொறுப்பு 'வேட்டிக்காரி' புரொடக்‌ஷனுக்கும் இருப்பதாக நம்புகிறேன். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது இந்த ஆவணப்படம்."

இந்த ஆவணப்படத்தை எடுப்பதற்கு தங்களை தூண்டிய விஷயம் எது?

"எங்கேயோ ஓரிடத்தில் அங்கேயும் அவருக்கான போராட்டத்துக்கு இடையே தன்னையும் தன்னிடமிருக்கும் கலையையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஒருவரின் வாழ்க்கையை சொல்லவேண்டும். அவரின் வாழ்க்கை அவரைப் போன்று பலரையும் வாழ்வதற்கு தூண்டுகோலாக இருக்கும் என்பதால் அமேயாவின் வாழ்க்கை சித்திரத்தை ஆவணமாக்கியிருக்கிறேன். இந்தப் படத்திற்கு முன், லெஸ்பியன் காதல் குறித்து பேசும் 'லேடீஸ் அண்ட் ஜெண்டில் வுமன்' என்னும் ஆவணப்படத்தின் முதல் திரையிடலைப் பார்த்த ஒரு சகோதரர், "என்னக்கா லெஸ்பியன் காதலைப் பற்றிதான் படம் எடுப்பீர்களா? கே லவ் பற்றி படம் எடுக்க மாட்டீர்களா?" என்று கேட்டார். "நிச்சயமாக எடுப்பேன்" என்று அவரிடம் கூறினேன். இதோ நான் அவரிடம் சொன்னதை நிறைவேற்றிவிட்டேன்!"

அமேயா என்பவர் யார்?

"புனேயில் வாழும் குயர் சமூகத்தைச் சேர்ந்த நடனக் கலைஞர் அமேயா. அவரின் தனிப்பட்ட விருப்பங்கள், அவருடைய நண்பர்கள், பெற்றோர், உடன் பணிபுரியும் கலைஞர்கள் அமேயாவைப் பற்றி கூறும் விஷயங்கள் என எல்லாவற்றையும் இந்த ஆவணப்படத்தில் தொகுத்திருக்கிறோம். தமிழ் கலாச்சாரத்துக்கு வெளியே ஒரு குயர் சமூகத்தைச் சேர்ந்தவரின் வாழ்வு, அவர் வாழ்வில் கடந்து வந்த சோகம், மகிழ்ச்சி, நகைச்சுவை, அவரை விரும்பிய பலரின் மனநிலை, சமூகத்திடம் அவர் எதிர்பார்ப்பது என்ன? இதைப் போன்ற பல கேள்விகளுக்கான பதிலை, குயர் சமூகத்தினர் இந்தப் படத்தில் உணரமுடியும். இந்த ஆவணப்படத்தை பார்ப்பவர்கள் அவர்களின் வீட்டில் இருப்பவர்களோடு சேர்ந்து பார்க்க வேண்டும் என்னும் ஆசையையும் வெளிப்படுத்தினர். அதற்கான முயற்சியை எடுத்துவருகிறோம்."

ஆவணப்படத்தில் பணியாற்றியிருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பைப் பற்றி சொல்லுங்கள்...

"இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் எனக்கு 'லேடீஸ் அண்ட் ஜென்டில் வுமன்' படத்திலிருந்து எனக்கு பக்கபலமாக இருப்பவர். அவரின் இசை படத்தின் தரத்தை வேறு தளத்துக்கு கொண்டு சேர்த்திருக்கிறது. மிகவும் நுணுக்கமான இசையை செதுக்கி செதுக்கி இந்தப் படத்துக்காக நெய்திருக்கிறார். படத்தை மிகவும் வண்ணமயமாக கண்களுக்கு விருந்தாக்கியிருப்பவர் ஒளிப்படக் கலைஞர் பிரதீப் காளிராஜா. நான் உதவி இயக்குநராக 'மெட்ராஸ்' படத்தில் பணியாற்றினேன். அவர் அந்தப் படத்துக்கு உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். நாங்கள் இணைந்து இந்தப் படத்தில் பணியாற்றுவதை எங்களின் கலைப் பயணத்தில் முக்கிய தருணமாக நான் பார்க்கிறேன். தமிழரசனின் படத் தொகுப்பும் முக்கியமான கவன ஈர்ப்பாக இந்த ஆவணப்படத்தில் அமைந்திருக்கிறது. தமிழில் எழுதிய பாடல் வரிகளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பையும் தமயந்தியே நேர்த்தியாக எழுதிக் கொடுத்தார். ஒட்டுமொத்த ஆவணப்படத்தின் அடர்த்தியை அந்தப் பாடலின் வரிகள் தாங்கிப் பிடிக்கும்."

ஏற்கெனவே மிகவும் பிரபலமான காத்திரமான ஓர் ஆவணப்படத்தை எடுத்தவர் நீங்கள். முன்பு எடுத்த படத்தோடு ஒப்பிட்டு என்ன மாதிரியான விமர்சனத்தை எதிர்கொள்கிறீர்கள்?

"'லேடீஸ் அண்ட் ஜென்டில் வுமன்' படமும் சரி, 'ஒய் ஸோ ஸ்ட்ரெயிட்?' படமும் சரி, ஆவணப்படத்திற்கான தலைப்பை பலரும் ரசித்து பாராட்டுகின்றனர். உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை இரண்டுக்கும் எதிர்மறையான எந்த விமர்சனத்தையும் நான் எதிர்கொள்ளவில்லை. படத்தைப் பார்த்த குயர் சமூகத்தைச் சேர்ந்த பலரும் அவர்களின் வாழ்க்கைப் பாடுகளோடு படத்தின் காட்சிகளை பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிகிறது என்றனர். பொதுவாகவே குயர் ஆவணப்படங்கள் என்றாலே பெரும் சோகத்தையே பேசுவதாக இருக்கும். ஆனால் இந்த ஆவணப்படம் எல்லா மகிழ்ச்சி, சோகம், நகைச்சுவை, குயர் சமூகத்தினரின் கலை, கொண்டாட்டம் போன்ற பலவற்றையும் உள்ளடக்கியிருப்பது மனதை லேசாக்குகிறது என்கின்றனர்.”

குயர் விழாவில் மணப்பெண் அலங்காரத்தில் வந்து பரபரப்பு ஏற்படுத்தியதுதான் அமேயாவின் இதுவரையிலான வாழ்க்கையின் உச்சமா?

"அதுமட்டுமில்லை. புனேயில் வாழும் குயர் சமூகத்தினருக்கு நடனக் கலையை சொல்லிக் கொடுப்பவராக, அவர்களை அடுத்தகட்டத்துக்கு பொருளாதார ரீதியாகவும் உயர்த்துவதற்கான முயற்சிகளை எடுப்பவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருப்பவர் அமேயா. புனேயில் அவர் ஒரு முன்னணி நடன இயக்குநர்."

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்