முதல் பார்வை: டாக்டர் - நேர்த்தியான கமர்ஷியல் சினிமா 

By க.நாகப்பன்

கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்க ஒரு டாக்டர் போராடினால், அதற்கு ராணுவமும் உதவினால் அதுவே ‘டாக்டர்’.

தனக்கு செட்டாகாது என்பதால் டாக்டர் வருணுடன் (சிவகார்த்திகேயன்) நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தச் சொல்லிவிடுகிறார் பத்மினி (பிரியங்கா அருள் மோகன்). காரணம் அறிந்து சரிசெய்ய முனைகிறார் டாக்டர் வருண். அவரது பெற்றோரும் பேச்சுவார்த்தைக்கு பத்மினியின் வீட்டுக்கு வருகின்றனர். சுமுகமாகப் பேச்சுவார்த்தை முடியாததால் பெற்றோர் கிளம்பிச் சென்றுவிடுகின்றனர். வருண் மட்டும் போக மனசில்லாமல் பத்மினியின் வீட்டுக்கு அருகிலுள்ள டீக்கடையில் அமர்ந்திருக்கிறார். அப்போதுதான் பள்ளிக்குப் போன பத்மினியின் அண்ணன் மகள் கடத்தப்படுகிறார். 12 வயதுச் சிறுமியைக் கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார் வருண்.

சிறுமியைக் கடத்தியது யார், அந்த நெட்வொர்க் எப்படி இயங்குகிறது, கண்டுபிடித்து மீட்க முடிந்ததா, சிவகார்த்திகேயனின் காதல் கைகூடியதா போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது திரைக்கதை.

‘கோலமாவு கோகிலா’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நெல்சன் திலீப்குமாரின் இரண்டாவது படம் ‘டாக்டர்’. மிக மிக சீரியஸான காட்சிகளிலும் காமெடியைத் தூவி இயக்குநர் சிரிக்க வைத்திருக்கிறார். ஸ்கிரிப்ட்டை அப்படியே திரையில் காட்சிப்படுத்திய விதத்தில் ட்ரீட்மெண்ட் செம்ம.

சிவகார்த்திகேயன் தன் மீதான எல்லா பிம்ப ஃபர்னிச்சர்களையும் உடைத்துத் தள்ளி கமர்ஷியல் ஹீரோவாக அடுத்தகட்டப் பாய்ச்சலில் சிக்ஸர் அடித்திருக்கிறார். மெதுவான குரலில் பேசுவது, டாக்டருக்கே உரிய உடல் மொழி, திட்டங்கள் தீட்டும் புத்திசாலி என்பதையும் நடிப்பில் நிரூபித்துள்ளார். ஒரு குழந்தை என்று மட்டும் இலக்கு வைக்காமல் அனைவரையும் காப்பாற்றப் போராடும் அந்த அக்கறையும், அறமும் அட போட வைக்கிறது. இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் சிவாவின் கிராஃப் ஏகத்தும் எகிறியுள்ளது. ரேஞ்ச் மாறியுள்ளது.

பிரியங்கா அருள் மோகன் கதாபாத்திர வார்ப்புக்கு அதிகம் மெனக்கெடவில்லை. நானியின் ‘கேங் லீடர்’ தெலுங்குப் படத்தில் உள்ள பிரியங்கா அருள் மோகன் கேரக்டர் ரெஃபரன்ஸை அப்படியே கட் காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார்கள். நாயகிக்கு உரிய பங்களிப்பை இம்மியும் குறையாமல் செய்துள்ளார் பிரியங்கா. அதேபோல் வினய் கதாபாத்திரமும் துப்பறிவாளன் ரெஃபரன்ஸாகவே மிஞ்சி நிற்கிறது.

‘கோலமாவு கோகிலா’,‘ஏ1’ படங்களுக்குப் பிறகு ரெடின் கிங்ஸ்லீக்குப் பேர் சொல்லும் படம் இது. மனிதர் அதகளம் செய்துள்ளார். யோகி பாபு குணச்சித்திரமும் காமெடியும் கலந்த கதாபாத்திரத்தில் பிரகாசமாக நடித்துள்ளார். சுனில் ரெட்டி, அவரது அடியாள் சிவா ஆகியோரும் கிடைத்த கேப்பில் ஸ்கோர் செய்து அப்ளாஸ் அள்ளுகிறார்கள். உணர்வுபூர்வமான காட்சிகளிலும் காமெடி சரவெடியில் இவர்கள் பின்னி எடுத்திருக்கிறார்கள்.

இளவரசு, அருண் அலெக்ஸாண்டர், அர்ச்சனா ஆகியோர் துயரத்தின் கையறு நிலையை இயல்பு மீறாமல் நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளனர். தீபா அக்கா வழக்கம் போல் தன் பாணியில் தனித் தடம் பதிக்கிறார். ஆல்வின், மெல்வினாக ரகுராமும், ராஜீவ் லட்சுமணனும் திரைக்கதையின் திருப்பத்துக்குப் பயன்பட்டுள்ளனர். மிலிந்த் சோமன் ஓரிரு காட்சிகளில் வந்தாலும் மிகச்சிறந்த அளவில் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.

விஜய் கார்த்திக் கண்ணன் சென்னையின் இயல்பையும், கோவாவின் அழகையும் கேமராவுக்குள் கடத்தியுள்ளார். அனிருத் பின்னணி இசையில் கதையோட்டத்துக்கு ஏற்ப தெறிக்க விடுகிறார். செல்லம்மா பாடல் ரசிக்க வைக்கும் ரகம். நிர்மலின் படத்தொகுப்பு கச்சிதம். பாடலைப் படத்துக்கு இடையில் செருகாமல் முடிவில் வைத்தது புத்திசாலித்தனம்.

‘கோலமாவு கோகிலா’ படத்திலும் கடத்தல் சம்பந்தமான காட்சிகள் இருக்கும். பெரிய லாஜிக் எதிர்பார்க்க முடியாது. ஆனால், குடும்பத்துக்கான சிக்கலைத் தீர்க்க அப்படி ஒரு ரிஸ்க்கை நயன்தாரா எடுக்க, அதை நம்பகத்தன்மையுடன் காட்சிப்படுத்திய விதத்தில் திரைக்கதையை வலுவாக்கினார் நெல்சன். அதேபோன்று இதிலும் சில பல லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. டாக்டர் எப்படி ராணுவ வீரர்களுக்கான சிகிச்சையை விட்டுவிட்டு இப்படி ஒரு ஆப்ரேஷனில் இறங்க முடியும், கடத்தல் செய்யும் பல்வேறு கும்பல்களை எளிதில் அணுக முடியுமா, அவர்களை வளைக்க முடியுமா, குழந்தையை மீட்க அவர்கள் போடும் திட்டம் போன்றவை நம்பமுடியாத அளவில் உள்ளன. ஆனால், அந்த லாஜிக்குகளைத் தாண்டிப் பார்த்தால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

மேலோட்டமாகப் பார்த்தால் ‘பொய் சொல்லப் போறோம்’,‘கேங் லீடர்’ போன்ற படங்களின் சாயல் தெரிகிறது. ஆனால், திரைக்கதையில் வேற லெவல் மேஜிக் செய்து அதிரடி ஆக்‌ஷனில் காமெடியைப் புகுத்தி அசர வைத்துள்ளார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். இரண்டாம் பாதியில் சில காட்சிகள் ஊகித்தபடியே நகர்கின்றன.

அழகா இருக்கிற பெண்களுக்கு அறிவு இருக்காது, மூஞ்சி முகரையைப் பாரு, பைத்தியக்காரச்சி போன்ற வசனங்கள் மூலம் பெண்களை இழிவுபடுத்துவது ஏன்? அடியாள் ஒருவருக்கு நைட்டி அணிவித்து, பூச்சூடி கிண்டல் செய்வதை அறவே தவிர்த்திருக்க வேண்டும். கதாநாயகி கதாபாத்திர வார்ப்பும் மெச்சும்படி இல்லை. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அறிவில் குறைந்த நாயகியாகக் காட்சிப்படுத்துவார்கள்?

இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், தன் குடும்பத்துக்கு ஒன்று என்றால்தான் பதற வேண்டும் என்ற சுயநல எண்ணத்தைச் சுக்கு நூறாக உடைத்த விதத்தில் இயக்குநர் நெல்சனைப் பாராட்டலாம். சிவகார்த்திகேயன், நெல்சன் திலீப்குமாரின் சினிமா கரியரை கமர்ஷியல் அந்தஸ்துக்கு உயர்த்திய விதத்திலும், கான்செப்ட் சினிமாவில் கரை கண்ட விதத்திலும் ‘டாக்டர்’நேர்த்தியான சினிமாவாக ஜொலிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்