'ஆக்‌ஷன்' தோல்வி: ஓடிடி தளத்தில் 'சக்ரா' வெளியாவதில் சிக்கல்; விஷாலுக்கு நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

'ஆக்‌ஷன்' தோல்வியால், ஓடிடி தளத்தில் 'சக்ரா' வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ட்ரிடென்ட் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஆக்‌ஷன்'. இந்தப் படம் படுதோல்வியைத் தழுவியது. இதற்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார் விஷால்.

இதில் அறிமுக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் 'சக்ரா'. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. மேலும், திரையரங்கில் இல்லாமல் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இதனிடையே, விஷாலின் 'சக்ரா' படம் ஓடிடி தளத்தில் வெளியாவதைத் தடுக்க வேண்டும் என ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து தீர்ப்பு வழங்கும் முன், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஆனந்தன் ஆகியோரின் தரப்பையும் கேட்டறிய வேண்டும் என நீதிபதி சதீஷ் குமார் கூறியுள்ளதால் இந்த விவகாரத்தில் பதிலளிக்குமாறு இருவருக்கும் நோடீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

'ஆக்‌ஷன்' தோல்வியைத் தொடர்ந்து நடிகர் விஷால், ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.8 கோடியைத் திருப்பி அளிக்க வேண்டியிருந்தது. அதைத் தராத காரணத்தால் 'சக்ரா' படத்துக்கு அந்நிறுவனம் தடை கோரியுள்ளது.

இது தொடர்பாகப் பேசிய ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் தரப்பின் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், "கிட்டத்தட்ட 500 திரைப்படங்களை விநியோகித்துள்ள ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் 2016-லிருந்து திரைப்படத் தயாரிப்பில் இறங்கியது. அந்நிறுவனம் தயாரித்த 4-வது மற்றும் கடைசிப் படம்தான் 'ஆக்‌ஷன்'. சுந்தர் சி இயக்கியிருந்தார். விஷாலின் தூண்டுதலின் பேரில்தான் இந்தப் படம் ரூ.44 கோடி செலவில் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தால் எடுக்கப்பட்டது.

தமிழகம், ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் திரையரங்க வசூலில் குறைந்தது ரூ.20 கோடி வசூலிக்கவில்லை என்றால், நஷ்டமாகும் மீதிப் பணத்தைத் தான் தந்துவிடுவதாக விஷால் தயாரிப்பின்போது கூறினார். ஆனால், படம் தமிழகத்தில் ரூ.7.7 கோடி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.4 கோடி மட்டும் வசூலித்தது. விஷால் குறிப்பிட்ட தொகையில் ரூ.8.29 கோடி நஷ்டத்தை அவர்தான் ஈடு கட்ட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இதற்கு சாட்சியாக எழுத்துபூர்வமான ஒப்பந்தம் ஒன்றும் போடப்பட்டது. அதன் அடிப்படையில், நஷ்டத்தை ஈடுகட்ட, ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு, ஆனந்தன் இயக்கத்தில் ஒரு படத்தை நடித்துத் தர விஷால் ஒப்புக்கொண்டுள்ளார்.

தயாரிப்பு ஆரம்பித்தாலும் கரோனா நெருக்கடியின் காரணமாக ஊரடங்கு நிலவியதால் பட வேலைகள் அப்படியே முடங்கின. இந்த நிலையில், விஷாலும் இயக்குநர் ஆனந்தனும் சேர்ந்து சக்ரா என்ற திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதாக வந்த செய்தி தங்களுக்கு அதிர்ச்சி தருவதாகவும் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் கூறியுள்ளது.

தன்னிடம் சொல்லப்பட்ட கதையைத்தான் 'சக்ரா' என்கிற பெயரில் வேறொரு தயாரிப்பாளருடன் எடுக்கப்பட்டிருப்பதாகவும், விஷால் தங்களுக்குத் தர வேண்டிய ரூ.8.29 கோடி பணத்தைத் தரும் வரை ரூ. 44 கோடிக்கு ஓடிடி தளத்துக்கு விற்கப்பட்ட சக்ரா திரைப்படத்தின் வெளியீட்டைத் தடுக்க வேண்டும் என்றும் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் கோரியுள்ளது.

- முகமது இம்ரானுல்லா (தி இந்து, ஆங்கிலம்), தமிழில் - கார்த்திக் கிருஷ்ணா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்