இயக்குநர் மகிழ் திருமேனி பிறந்த நாள் ஸ்பெஷல்: நான்கு திரைப்படங்களும் ரசிகர்களின் நன்மதிப்பும் 

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளில் எத்தனையோ இளம் இயக்குநர்கள் தமது வித்தியாசமான படைப்புகளால் தமக்கென்று ஒரு ரசிகர் படையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இவர்களில் சிலருடைய படங்கள் என்றால் நம்பிச் செல்லலாம் என்று நினைக்கும் பொதுப் பார்வையாளர்களும் உள்ளனர். அப்படிப்பட்ட திறமைசாலி இயக்குநர்களில் ஒருவரான மகிழ் திருமேனி இன்று (ஆகஸ்ட் 8) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

இலக்கியப் பரிச்சயமுள்ள திரைப் படைப்பாளிகளுக்கு தனித்தன்மை வாய்ந்த சிறப்புகள் இருக்கும். மகிழ் திருமேனியும் அதற்கு விதிவிலக்கல்ல. பதின்பருவத்திலிருந்தே தமிழ் இலக்கிய நூல்களை ஆர்வமாகப் படித்தவர். படிப்படியாக ரஷ்யா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் செவ்விலக்கியங்கள் மீதும் அவருடைய நாட்டம் பரவியது. இவற்றின் தொடர்ச்சியாகச் சிறுகதைகள், கவிதைகள் ஆகியவற்றை எழுதிவந்தவர் ஒரு பொன்னான தருணத்தில் சினிமாவின்பால் ஈர்க்கப்பட்டார். அதன்பிறகு பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக வாய்ப்புத் தேடினார். கஸ்தூரி ராஜா இயக்கிய 'துள்ளுவதோ இளமை' படத்தில் அவருடைய உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதை அடுத்து கெளதம் மேனனுடன் இணைந்தவர் 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு' படங்களில் பணியாற்றினார்.

ஒப்பீட்டளவில் குறுகிய ஆண்டுகளில் அவருக்கு இயக்குநராவதற்கான வாய்ப்பு கிடைத்துவிட்டது. அவர் இயக்கிய முதல் படமான 'முன்தினம் பார்த்தேனே' 2010-ல் வெளிவந்தது. கெளதம் மேனன் இயக்கிய 'வாரணம் ஆயிரம்' படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலின் முதல் வரியையே தன் முதல் படத்துக்கான தலைப்பாக வைத்தார். தலைப்பு வைப்பதில் மட்டும் குருநாதரின் பாணியைப் பின்பற்றியவர் படத்தில் தன்னுடைய பிரத்யேகப் பாணியைக் கையாண்டார். நவீன இளைஞர் ஒருவனின் காதல் பயணத்தையும் அவற்றின் மூலம் அவன் வாழ்க்கையில் அடையும் முதிர்ச்சியையும் பொதுவாக ஆண்-பெண் உறவுகளில் உள்ள சில சிக்கலான விஷயங்களையும் பேசிய இந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிபெற்றது. விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. தமனின் இசையில் பாடல்கள் அனைத்தும் வெற்றிபெற்றன.

இரண்டாவது படமாக 'தடையறத் தாக்க' முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் படம். இந்தப் படத்தில் அழகான காதலும் இடம்பெற்றிருந்தது. இதன் கதாநாயகன் அருண் விஜய்யின் நடிப்பு வாழ்க்கையில் முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் இது. ஒரு தரமான கமர்ஷியல் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக முழுக்க முழுக்க சுவாரஸ்யமாக இருந்ததால் படம் அனைத்துத் தரப்பினரின் வரவேற்பையும் பெற்றது.

இவர் இயக்கிய மூன்றாம் படமான 'மீகாமன்' நிழலுலகத்தை மையமாகக் கொண்ட ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர். நிழலுலகப் படங்களில் இது வித்தியாசமான பாணியில் அமைந்திருந்தது. இதில் ஆர்யா-ஹன்சிகா நடித்திருந்தனர்.

இதன் பிறகு சற்று இடைவெளிக்குப் பின் நான்காம் படத்துக்காக மீண்டும் அருண் விஜய்யுடன் கைகோத்தார். 'தடம்' என்ற தலைப்பிடப்பட்ட இந்தப் படம் ஓர் உரு இரட்டையர்களை மையமாகக் கொண்ட ஒரு க்ரைம் த்ரில்லர் படம். முதல் முறையாக அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இதுவரை வந்த இரட்டை வேடப் படங்களில் முற்றிலும் தோற்ற ஒற்றுமை கொண்ட இரட்டையர் என்கிற விஷயத்தை மிகப் பொருத்தமாகவும் தன்னளவில் சுவாரஸ்யத்துக்குரியதாகவும் பயன்படுத்திய படம் 'தடம்'. இந்தப் படமும் விமர்சகர்களின் பாராட்டையும் வணிக வெற்றியையும் பெற்றது.

பத்து ஆண்டுகளுக்கு மேலான திரைப் பயணத்தில் நான்கு படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்ததோடு ரசிகர்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்ற இளம் இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார் மகிழ் திருமேனி.

இயக்கத்தைத் தாண்டி, 'இமைக்கா நொடிகள்' படத்தில் அனுராக் காஷ்யப்புக்கு பின்னணிக் குரல் கொடுத்தார். தற்போது 'டெடி', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவருடைய குரலும், தூய தமிழ்ப் பேச்சும் ரசனைக்குரியவை.

இளமைப் புத்துணர்வும் தனித்தன்மையும் திரைப்படத் தொழிலில் நேர்த்தியும் வாய்க்கப்பெற்ற மகிழ் திருமேனி இன்னும் பல வெற்றிப் படங்களை இயக்கி பல விருதுகளையும் சாதனைகளையும் குவிக்க வாழ்த்துவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

9 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்