’ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’வுக்கு வயது 23; ஹிட் ஃபார்முலா பேக்கேஜ் ‘சூர்யவம்சம்’

By வி. ராம்ஜி

அப்பா - மகன் படங்கள் என்பது வெற்றியின் இலக்கணங்களில் ஒன்று. ஆனால் அதுமட்டுமே வெற்றிக்குப் போதாது. குடும்பப் பாங்கான படங்களை எல்லோருக்கும் பிடிக்கும். அதேசமயம், அப்படிக் குடும்பக் கதைகளாக எடுத்தால் ஓடிவிடும் என்பதற்கெல்லாம் உத்தரவாதமில்லை. பொழுதுபோக்குப் படமெடுத்தால் ஓடிவிடும் என்பதை திரையுலகம் எப்போதுமே நம்பும். ஆனால், எது பொழுதுபோக்குப் படம் என்பதை ரசிகர்கள் தீர்மானித்து, வெற்றியைக் கொடுப்பார்கள். இப்படி எல்லாவகையிலும் திருப்தி படுத்துகிற அம்சங்கள் நிறைந்ததுதான் ‘சூர்யவம்சம்’.

மேலே சொன்ன எல்லாவற்றையும் கடந்து, வெற்றிக்கான இன்னொரு விஷயமும் இருந்தது. அது ‘விக்ரமன் படம்’ என்பது. விக்ரமன் படமா? ஆபாசம் இருக்காது. விக்ரமன் படமா? நல்ல கதை இருக்கும். விக்ரமன் படமா? தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். விக்ரமன் படமா? போரடிக்காது. விக்ரமன் படமா? நல்ல மெசேஜ் இருக்கும் ... என்பதான பெயர்களை இயக்குநர் விக்ரமன் ரசிகர்களிடம் இருந்து பெற்றிருந்தார். அந்த ‘விக்ரமன் ‘டச்’கள்’ நிறைய நிறைய இருந்த ‘சூர்யவம்சம்’ அடைந்த வெற்றி சாதாரணம் அல்ல.

ஊர்ப்பெரியவராகத் திகழும் அப்பாவுக்கு பிடிக்கவே பிடிக்காத பையன். வீட்டில் நடைபெறும் திருமணத்தைப் பற்றிய எந்த விவரமும் தெரியாமல், பணியாள் செய்யும் வேலைகளைச் செய்பவர். மகனை அப்பா வெறுக்கக் காரணம் என்ன என்பதை அறிகிறாள் நாயகி. தெரிந்ததும் அவனின் மீது காதல்வயப்படுகிறாள். அவனும் காதலிக்கிறான்.

இதனிடையே ஊரில் வில்லத்தனம் செய்வதற்காகவே பிறந்திருக்கும் வில்லனின் மகனுக்கும் நாயகிக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. ஹீரோ போகிறார். சண்டை. ஹீரோயினை திருமணம் செய்துகொள்கிறார். ஏற்கெனவே வெறுப்பில் இருக்கும் அப்பா, இன்னும் கடுப்பாகிறார். வீட்டை விட்டுத் துரத்துகிறார். ஹீரோவும் ஹீரோயினும் தனிக்குடித்தனம் இருக்கிறார்கள். நாயகியின் ஐ ஏ எஸ் ஆசையை அறிந்துகொள்ளும் ஹீரோ அதன் தேர்வுக்கு தயாராக்குகிறார். கலெக்டராகிறார். இவரும் தொழிலதிபராகிறார்.


மகனைப் புரிந்துகொண்ட அப்பா, மனம் திருந்துகிறார். மகனை ஏற்றுக்கொள்கிறார் என்பதை, பக்கா பேக்கேஜாக, வெற்றி பேக்கேஜாகக் கொடுத்திருந்தார் விக்ரமன். கதை விக்ரமன் ஸ்டைல் கதையாக இல்லாமல் போனாலும், கதை சொன்ன விதமெல்லாம் காட்சிப்படுத்திய விதமெல்லாம் அக்மார்க் விக்ரமன் முத்திரை.

அப்பா - மகன் என இரண்டு கேரக்டர்களிலும் வெளுத்துவாங்கினார் சரத்குமார். பொதுவாகவே, அப்பா - மகன் என டபுள் ஆக்‌ஷன் படங்கள் என்றாலே, அப்பா கேரக்டருக்குத்தான் அழுத்தம் இருக்கும். அசத்தலான நடிப்பு இருக்கும். ‘தெய்வமகன்’ தொடங்கி ‘இந்தியன்’ தாத்தா வரை இப்படித்தான் நடந்தது. ஆனால், இதில் இருவருக்கும் சம வாய்ப்பை வழங்கியிருப்பார் விக்ரமன். சொல்லப் போனால், மகன் சரத்குமாரின் கதாபாத்திரத்தை அழகாகக் கட்டமைத்திருப்பார்.

அப்பா சரத்துக்கு ராதிகா. மகன் சரத்துக்கு தேவயானி. இரண்டு ஜோடியும் சூப்பர் பொருத்தம். பாந்தம். சொந்தக்காரப் பெண் ப்ரியாராமனைக் காதலிப்பார் சரத். ஆனால் அவரோ, ‘படிக்காத நீ எங்கே? படித்த நான் எங்கே?’ என்று சொல்லிவிடுவார். ஆனால், அவரைக் காப்பாற்றுவதற்காக, ‘பொண்ணு எனக்குப் பிடிக்கலை’ என்று சொல்லிவிட, அப்போதிருந்துதான் அப்பா மகன் மீது கடுப்பாவார். விக்ரமன் படங்களில் ஏதேனும் ஒரு பெண் கதாபாத்திரத்துக்கு கெளரி எனும் பெயர் வைப்பதுண்டு. இதில் பிரியாராமனின் பெயர் கெளரி.


விக்ரமனுக்கு காமெடி, கதையுடன் ஒட்டியே அவ்வளவு அழகாக வரும். இதில் சரத் - மணிவண்ணன் ஜோடியின் ரகளை, ரவுசு பண்ணும். அதேபோல், மணிவண்ணன் - ஆர்.சுந்தர்ராஜன் இருவரும் சேர்ந்து தெறிக்கவிடுவார்கள். பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டு, பஸ்சில் தூங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பி ‘நல்லாருக்கீங்களா, ஊருக்கு வரேன்னு சொன்னீங்க, வரவே இல்ல’ என்று அவர்களைக் குழப்பி, தூங்கவிடாமல் செய்யும் காமெடி புதுசு. பின்னாளில் இந்தப் படத்தின் அந்தக் காட்சியைப் பார்க்கும்போதுதான் ’அட... ராஜகுமாரன்’ என்று தெரிந்தது நமக்கு.

தேவயானி கலெக்டராவதும் சரத்குமார் தொழிலதிபர் ஆவதும் பார்ப்பவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டக்கூடிய வகையிலான காட்சிகள். ஒரு ‘இட்லி உப்புமா’வைக் கொண்டே சென்டிமென்ட்டும் செய்திருப்பார். ஜெய்கணேஷ் - சத்யப்ரியாவைக் கொண்டு காமெடியாகவும் ஆக்கியிருப்பார் விக்ரமன்.
தாத்தாவுக்கும் பேரனுக்குமான காட்சிகள் அழகாகச் சொல்லப்பட்டிருக்கும். பிரியாராமன், சரத்குமார், தேவயானியை காயப்படுத்துவதும் பின்னாளில் தேவயானியிடம் வந்து கணவருக்கு வேலை கேட்பதுமான காட்சி நாயகன், நாயகியின் ஜெயித்தலையும் பெருந்தன்மையையும் காட்டுவதாக அமைந்திருக்கும்.

பேருந்து, பேருந்தில் பெண் கண்டக்டர், காக்கி டிராயர், அந்த கண்டக்டருக்காகவே கூடுகிற கூட்டம் என்பதை முழுவதுமாகவே தவிர்த்திருக்கலாம். அது காமெடியாகவும் இல்லை. கிளாமராகவும் எடுபடவில்லை.

சூப்பர் குட் பிலிம்ஸின் தயாரிப்பு. படத்தின் வெற்றிக்கு இந்த பிராண்டும் ஒரு காரணம். எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. ‘சலக்கு சலக்கு சரிகை சேலை’, ‘காதலா காதலா’, ‘நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்பாக்குது’ என்று எந்தப் பாடலையும் மறக்கமுடியாது. முக்கியமாக, ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’வை இன்றைக்கும் கேட்டு சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.


சரத்குமாருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. விக்ரமனின் படைப்பில் இந்தப் படமும் எல்லா செண்டர்களிலும் பட்டையைக் கிளப்பியது. எல்லா வயது ரசிகர்களுக்கும் தேவயானி பிடித்த நடிகையானார். ‘நாட்டாமை’, ‘சூர்யவம்சம்’ படங்களுக்குப் பிறகு பொள்ளாச்சிப் பக்கம் கதை பண்ண நிறைய பேர் சென்றார்கள். கவுண்டர் கதாபாத்திரங்கள் ஏராளமாக வந்தன. ஆனாலும் ‘நாட்டாமை’யும் ‘சூர்யவம்சமும்’ மக்களின் மனங்களில் தனியிடம் பிடித்தன. இன்றைக்கும் அப்படியொரு இடத்தில் கம்பீரமாக நிற்கிறது ‘சூர்ய வம்சம்’.

வழக்கம் போல் ஜெய்சங்கர் எடிட்டிங், சரவணனின் ஒளிப்பதிவு, எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசை என்று தன் குழுவினருடன் இறங்கி, சிக்ஸர் அடித்திருப்பார். படமும் இருநூறு நாட்களைக் கடந்து பல ஏரியாக்களில் ஓடியது.


நெகிழ வைத்து, உருக வைத்து, மகிழ வைத்த ‘சூர்யவம்சம்’ 97ம் வருடம் ஜூன் 27ம் தேதி வெளியானது. படம் வெளியாகி, 23 வருடங்களாகிவிட்டன. ‘சூர்யவம்சம்’ படம் வெளியாகும்போது, தியேட்டரில் எல்லோரும் பார்த்தார்கள். இப்போது டிவியில் ஒளிபரப்பினாலும் எல்லோரும் பார்க்கிறார்கள். எப்போது டிவியில் போட்டாலும் பார்ப்பார்கள். அதுதான் விக்ரமனின் ‘சூர்யவம்சம்’ டச்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

18 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

12 hours ago

வலைஞர் பக்கம்

12 hours ago

மேலும்