லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு: பாரிஸ் அனுபவம் பகிர்ந்த விஜே திவ்யா

By செய்திப்பிரிவு

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் திவ்யா, தனது கணவருடன் பாரிஸுக்குப் பயணம் மேற்கொண்டபோது தங்களது பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களும், முக்கிய ஆவணங்களும் திருடுபோன அனுபவம் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி பிரபலமானவர் திவ்யா. பின்னணிப் பாடகியான இவர் 'தீராத விளையாட்டுப் பிள்ளை', 'வில்லு' ஆகிய படங்களில் பாடியுள்ளார். சமீபத்தில் இவர் தனது கணவருடன் பாரிஸுக்குத் திரும்பியுள்ளார். அங்குதான் இவர்கள் வசித்து வருகின்றனர். அங்கு தங்களுக்குக் கிடைத்த மோசமான அனுபவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திவ்யா பகிர்ந்துள்ளார்.

அதன் முழு தமிழாக்கம் பின்வருமாறு:

''பயணப்பட விரும்பும் அனைவருக்கும் ஒரு குறிப்பு.

சென்னையில் பல மணி நேர சோதனைக்குப் பிறகு சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு நானும் என் கணவரும் முதல் விமானத்தைப் பிடித்து ஏறினோம்.

பெங்களூருவிலிருந்து பாரிஸுக்குச் செல்லும் எங்கள் அடுத்த விமானத்துக்காக 5 மணி நேரம் காத்திருந்தோம். (சர்வதேச விமான நிலையத்தில் விமானம் புறப்பட 3 மணி நேரம் முன்னதாகத்தான் உள்ளே விடுவார்கள்). எனவே எங்கள் 5 பைகளோடு விமான நிலையத்துக்கு வெளியே காத்திருந்தோம்.

அதன் பிறகு பெங்களூருவிலிருந்து பாரிஸுக்கு பயணப்பட விமானத்தில் ஏறினோம். அந்தப் பயணத்தில் நாங்கள் முழுவதும் தூங்கியதற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் கடந்த 30 மணி நேரங்களில் நடந்த ஒரே நல்ல விஷயம் அதுதான்.

நாங்கள் பாரிஸ் சென்று இறங்கினோம். விமான நிலையத்திலிருந்து ரயில் நிலையம் செல்ல டாக்ஸியில் பயணப்பட்டோம். எங்கள் வீட்டுக்குச் செல்லும் ரயில் கிளம்புவதற்கு 4 மணி நேரம் முன்பாகவே நாங்கள் ரயில் நிலையத்துக்குச் சென்றுவிட்டோம். எனவே எங்கள் பயண மூட்டைகளை அங்கிருக்கும் லாக்கர் ரூமில் வைத்துவிட்டுச் சாப்பிடலாம் என்று முடிவெடுத்தோம்.

எங்களின் நான்கு பெரிய பெட்டிகள், ஒரு லேப்டாப் ட்ராலி என அனைத்தையும் என் பொறுப்பில் விட்டுவிட்டு என் கணவர் லாக்கர் ரூமைத் தேடிச் சென்றார். அப்போது ஒருவர் என்னை அணுகி, எனக்கு ஆங்கிலம் தெரியுமா என்று கேட்டார். (இங்கு பலருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் இது பொதுவான கேள்வியே). நான் அவரிடம் ஆமாம் என்றேன். என் வாயில் நுழையாத ஒரு நகரத்தின் பெயரைக் கூறி, அதற்கு எந்த ரயில் என்று கேட்டார். நான் தெரியாது என்றேன்.

ஆனால், தொடர்ந்து ஒரு நிமிடம் என்னுடன் விடாப்பிடியாகப் பேசிக்கொண்டிருந்தார். தனது மொபைலைக் காட்டி வழி கேட்டார். எனக்குத் தெரியாது, நீங்கள் ரயில் நிலையத்தில் இருக்கும் உதவி மையத்தைக் கேளுங்கள் என்று நான் சொன்னதும் அவர் நன்றி சொல்லிவிட்டு நடந்து சென்றார்.

இதன் பிறகு என்ன நடந்தது தெரியுமா, அடுத்த நிமிடம் நான் திரும்பிப் பார்க்கும்போது எங்களின் ஒரு பெட்டியும், லேப்டாப் பையும் காணவில்லை. எங்கள் இருவரின் பாஸ்போர்ட், இரண்டு லேப்டாப், எங்கள் சார்ஜர்கள், ஐபேட், போஸ் ஹெட்போன் உள்ளிட்ட மேலும் 2 ஹெட்போன்கள், ஒரு ஏர்பாட், கணவரின் திருமண உடை இதோடு நிறைய உடைகள், சொத்து ஆவணங்கள், வங்கி ஆவணங்கள் என அனைத்தையும் பறிகொடுத்தோம்.

உடனடியாக ரயில் நிலையத்தில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் உடனடியாக புகார் செய்தோம். ஆனால் அவர்கள் இதைத் தீவிரமாகவே எடுத்துக் கொள்ளாமல் காவல் நிலையம் செல்லச் சொன்னார்கள். நாங்கள் காவல் நிலையத்துக்குச் சென்றால் அங்கிருக்கும் காவல்துறை அதிகாரி, மன்னிக்கவும், நாங்கள் மூடிவிட்டோம், வேறு நிலையத்துக்குச் செல்லுங்கள் என்றார்.

எனவே நாங்கள் இன்னும் 15 நிமிடங்கள் நடந்து அடுத்த காவல் நிலையத்துக்குச் சென்றால், அங்கிருந்து இன்னொரு காவல் நிலையம் என்றார்கள். மேலும் 15 நிமிடம் நடந்து மூன்றாவது காவல் நிலையத்துக்குச் சென்றோம். அங்கு எங்களைக் காத்திருக்கச் சொன்னார்கள். ஏதோ தீண்டத்தகாதவர்கள் போல எங்களை நடத்தினார்கள். இரண்டு மணி நேரம், காவல் நிலையத்துக்கு வெளியே, வெயிலில் நாங்கள் காத்திருந்தோம். பின் 2 மணி நேரம் உள்ளே காத்திருந்தோம். 4 மணி நேரத்துக்குப் பிறகு, பல நூறு முறை என்ன ஆனது என்று கேட்ட பிறகு எங்கள் புகாரை எடுத்துக் கொண்டார்கள்.

எங்களிடம் எதுவுமே கேட்கவில்லை, எந்த விவரமும் கோரவில்லை. திருடுபோன பெட்டியில் என்ன இருந்தது என்று கேட்டு காப்பீடு கோரலாம் என்றார்கள். திருடிய நபரைப் பிடிக்க மாட்டீர்களா, நான் நின்று கொண்டிருந்த இடத்துக்கு மேலே இருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்க்க முடியாதா என்று கேட்டபோது அங்கிருக்கும் காவல்துறை அதிகாரி நான் ஏதோ நகைச்சுவை சொன்னதைப் போல என்னைப் பார்த்துச் சிரித்தார்.

வீட்டுக்குத் திரும்ப நாங்கள் பயணப்பட வேண்டிய ரயிலை, காவல் நிலையத்திலிருந்த 4 மணி நேரத்தில் நாங்கள் தவற விட்டோம். காத்திருந்து புதிதாக டிக்கெட் பதிவு செய்தோம். வீடு திரும்ப ஒன்றரை நாள் ஆனதோடு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் திருடு போயின. வீடு திரும்ப ரயில் ஏறினோம்.

இந்த நொடியில் நான் எவ்வளவு நொறுங்கிப் போயிருக்கிறேன் என்று என்னால் விவரிக்க முடியவில்லை. ஆனால் என் கணவர் இப்போது வரையிலும் அமைதியாக, புன்னகைத்துக் கொண்டு இருக்கிறார். அவரது பல வருட உழைப்பு திருடப்பட்ட லேப்டாப்பில் இருந்தது. அவரது முக்கியமான ஆவணங்கள், கருவிகள் என அனைத்தும் போய்விட்டன. இந்த நிலையிலும் பரவாயில்லை, பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்.

எனவே பயணப்பட விரும்புபவர்களுக்கு என் அறிவுரை, கவனமாக, கவனமாக, கவனமாக இருங்கள். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். ஏனென்றால் வெளியில் சில மனிதர்களுக்கு எந்த கொள்கைகளும், உணர்ச்சிகளும் இல்லை. மற்றவர்களின் இழப்பு குறித்து, காயம் குறித்துக் கவலையில்லை.

ஒரு வழியாக வீடு திரும்பினோம். அக்கறை காட்டிய, எங்களுக்காகப் பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி''.

இவ்வாறு திவ்யா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

11 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்