72 நாட்களுக்கு பிறகு கையுறைகள், சானிடைசர் உள்ளிட்ட முழு பாதுகாப்பு உபகரணங்களுடன் சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது

By மகராசன் மோகன்

சின்னத்திரை சீரியல் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் தொடங்கியுள்ளன. படப்பிடிப்பு தளத்தில் நடிகர், நடிகை, ஊழியர்களுக்கு கையுறை, சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி முழு பரிசோதனைக்கு பிறகே படப்பிடிப்பு நடக்கின்றது.

கரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 72 நாட்களாக சீரியல், சினிமா படப்பிடிப்பு எதுவும் நடைபெறாமல் இருந்து வந்தன. இந்நிலையில், அரங்குகள் மற்றும் வீடுகளில் மட்டுமே பெரும்பாலும் சீரியல்கள் படப்பிடிப்பு என்பதால் தயாரிப்பு தரப்பினர் அதற்கு மட்டும் அரசிடம் கோரிக்கையாக வைத்தனர். உடனடியாக அரசும் சில நிபந்தனைகளுடன் சீரியல்கள் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது. இதனை அடுத்து முறையே மாநகராட்சி ஒப்புதல் கடிதம் பெற்று நேற்று முதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளன.

5 தொடர்கள் தொடக்கம்

ஜீ தமிழ் சேனலின் ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’, ‘யாரடி நீ மோகினி’, கலர்ஸ் தமிழ் சேனலில் ‘அம்மன்’, ‘ஓவியா’, ‘இதயத்தை திருடாதே’ உள்ளிட்ட 5 நெடுந்தொடர்கள் நேற்று படப்பிடிப்பை தொடங்கியுள்ளன. இதுபோக விஜய் தொலைக்காட்சியின் ‘ஆயுத எழுத்து’ உள்ளிட்ட தொடர்கள் நாளை புதன்கிழமை படப்பிடிப்புக்கு செல்கின்றன. சன் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல்கள் சில இன்னும் மாநகராட்சி ஆணையரின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. மேலும், ஒப்புதல் பெற்ற சில சீரியல்களின் நடிகர், நடிகைகள் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருப்பதால் உடனடியாக கலந்துகொள்ள முடியவில்லை.

மாநகராட்சியின் தாமதம்

ஒவ்வொரு சீரியல் குழுவினரும், படப்பிடிப்புக்கு முன்பு ஷூட்டிங் நடக்க உள்ள வீடு மற்றும் அரங்கத்தின் உரிமையாளர்களிடம் படப்பிடிப்புக்கு முறையே தடையில்லா கடிதம் (என்.ஓ.சி) பெற வேண்டியுள்ளது. அந்த கடிதத்தோடு முதல்கட்டமாக, மாநகராட்சியின் மக்கள் தொடர்பாளர் அலுவலகத்துக்கு சென்று சீரியல் படப்பிடிப்புக்கு அனுமதி கேட்டு கடிதம் அளிக்க வேண்டும். அந்த கடிதம், மாநகராட்சி துணை ஆணையர் மற்றும் ஆணையர் இருவரது ஒப்புதலுக்கு சென்று பின்னர் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதி கடிதம் பெற முடிகிறது. இதற்கிடையே, படப்பிடிப்பில் கலந்துகொள்பவர்களது முழு விவரமும் பெப்சி அமைப்புக்கு தெரியபடுத்த வேண்டும். அவர்கள் முறையே இன்ஸூரன்ஸ் எடுத்தால் மட்டுமே படப்பிடிப்புக்கு அனுமதி எனவும் பெப்சி தெரிவித்துள்ளது. அரசின் அனுமதி கிடைத்தபோதிலும், மாநகராட்சியின் ஒப்புதல் கடிதம் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது என்றும், அதனால், சில சீரியல்கள் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை எனவும் சீரியல்கள் தயாரிப்பாளர்கள் சிலர் தெரிவித்தனர்.

படப்பிடிப்பு தளத்தில் செவிலியர்!

ஜீ தமிழ் சேனல் மற்றும் விஜய் தொலைக்காட்சி தரப்பினர் சீரியல்கள் நடக்கும் இடத்துக்கு முகக்கவசம், கையுறைகள், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தையும் கொண்டுசெல்கின்றனர். இதில் ஜீ தமிழ் சேனல், மருத்துவமனையின் ஆலோசனை பெற்று ஒவ்வொரு படப்பிடிப்பு தளத்திலும் ஒரு செவிலியரை நியமித்துள்ளது. சென்னை, வளசரவாக்கம் பகுதியில் உள்ள விஷன் டைம்ஸ், ராவுத்தர் பிலிம்ஸ், பூந்தமல்லி சாலையில் உள்ள ஜீ ஸ்டுடியோஸ், கோகுல் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் நேற்று தொடங்கிய படப்பிடிப்பை பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட குழுவினர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். படப்பிடிப்பில் ஊழியர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விசாரித்துள்ளனர். மேலும், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள ஈவிபி பிலிம்ஸ் சிட்டியில் ஆய்வு மேற்கொள்ளவும் செய்தனர்.

ஜூன் 15 முதல் ஒளிபரப்பு

கரோனா காலகட்டத்துக்கு முன்பே படப்பிடிப்பு தொடங்கி சில அத்தியாயங்கள் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டதால் விஜய் தொலைக்காட்சி ‘செந்தூரப் பூவே’ என்ற தொடரை தற்போது ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது. இதுபோக, நேற்று தொடங்கப்பட்ட ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் சீரியல்கள், நாளை தொடங்க உள்ள விஜய் டிவி தொடர்கள் வருகிற 15 ம் தேதி முதல் ஒளிபரப்பை தொடங்குகின்றன. சன் டிவியின் சில முக்கிய சீரியல்கள் ஜூன் 21 ம் தேதி முதல் ஒளிபரப்ப உள்ளதாகவும் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

10 mins ago

சுற்றுச்சூழல்

20 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

15 mins ago

விளையாட்டு

36 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்