தனித்த நடிப்புடன் நெஞ்சம் கிள்ளிய மோகன்!  - ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்துக்கு 39 வயது

By செய்திப்பிரிவு

வி.ராம்ஜி


எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் செய்யக் கூடியவர்தான் நடிகர் எனும் கலைஞன். அப்படி எந்தக் கேரக்டர் செய்தாலும் அவரை, அந்த நடிகரை ஏற்றுக்கொண்டால் அதுவே அந்தக் கலைஞனுக்குக் கிடைத்த வெற்றி. அபரிமிதமான வெற்றி. அப்படியொரு வெற்றியை ருசித்தவர்தான் நடிகர் மோகன்.


பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல் நடித்த ‘கோகிலா’ எனும் திரைப்படம் 1978-ம் ஆண்டு வெளியானது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தில்தான் அறிமுகமானார் மோகன். முதல் படத்திலேயே இயல்பான நடிப்புக்காரர் என பாராட்டப்பட்டார்.


அடுத்து 1980-ம் ஆண்டு. பாலுமகேந்திரா இயக்கத்தில், பிரதாப், ஷோபா நடித்த ‘மூடுபனி’ படத்தில், ‘அறிமுகம் - ‘கோகிலா’ மோகன்’ என்று டைட்டில் கார்டு போடப்பட்டது. புகைப்படக் கலைஞராக மோகன் நடித்தார்.


1980-ம் ஆண்டு நவம்பர் மாதம் 6-ம் தேதி ‘மூடுபனி’ வெளியானது. அதே 80-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 12-ம் தேதி இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ வெளியானது. இதில், சரத்பாபு, பிரதாப், மோகன் என்று டைட்டில் கார்டு வந்தது. சரத்பாபு இருந்தாலும் பிரதாப் இருந்தாலும் மோகனுக்கு மிக முக்கியமான, அருமையான கதாபாத்திரம். ஒவ்வொரு முறை சுஹாசினியை தேவையில்லாமல் சந்தேகப்படுவதும் பிறகு புரிந்து உணர்ந்து மன்னிப்புக் கேட்பதுமான தவிப்பை மிக அழகாக வெளிப்படுத்தியிருந்தார் மோகன்.


கமல் குடும்பத்தில் இருந்து இன்னொருவர் நடிக்க வந்தது இந்தப் படத்தில்தான். கமலின் அண்ணன் சாருஹாசனின் மகள் சுஹாசினி, இந்தப் படத்தின் நாயகியாக அறிமுகமானார்.


மோகனின் நடிப்பு தனித்துத்தெரிந்தது. இந்தப் படத்தில் அமைந்த ‘பருவமே... புதிய பாடல் பாடு’ என்ற பாடல் இன்று வரைக்கும் செம ஹிட்டு. பஞ்சு அருணாசலம் இந்தப் பாடலை எழுதியிருந்தார்.


இதையடுத்து அடுத்த வருடம் வந்த ‘கிளிஞ்சல்கள்’ பட டைட்டிலில், மோகன் என தனி கார்டு போடப்பட்டது. இந்தப் படத்துக்கு டி.ராஜேந்தர் பாடல்கள் எழுதி இசையமைத்தார். மோகன் படத்தில் எல்லாப் பாடல்களும் ஹிட் எனும் பேரெடுத்தது இந்தப் படம்.


ஆக, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம்தான் மோகன் எனும் அற்புத நடிகரை நமக்கு அடையாளம் காட்டியது. அதேபோல், சுஹாசினி மிகச்சிறந்த நடிகையை நமக்குத் தந்ததும் இந்தப் படம்தான்.


‘1980-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ ரிலீசானது. இன்றுடன் 39 வருடங்களாகிவிட்டது. அடுத்த ஆண்டு அதாவது 2020ம் ஆண்டு இந்தப் படம் வெளியாகி, 40 ஆண்டுகளாகின்றன.


மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ தமிழகம் முழுவதும் நூறுநாட்களைக் கடந்து ஓடியது. சென்னையில், ஒருவருடம் ஓடியது. ரசிகர்களின் நெஞ்சம் தொட்ட ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தையும் ‘பருவமே...’ பாடலையும் மோகனையும் சுஹாசினியையும் இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் மறக்கவே முடியாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

வணிகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

4 hours ago

மேலும்