கமல்: பன்முக வித்தகர் VS சர்ச்சைகளின் குழந்தை

By செய்திப்பிரிவு

60 வருடத் திரை வாழ்க்கை, 6 இந்திய மொழிகளில் 200 படங்கள் எனத் திரைப்பட உருவாக்கத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் முத்திரை பதித்திருப்பவர் கமல்ஹாசன். அவர் அழகாக நடித்த எண்ணற்ற கதாபாத்திரங்கள் மட்டுமில்ல, தனது பங்களிப்பின் மூலம் துறைக்கு அவர் தந்த விஷயங்கள்தான் அவரைத் திறமையான பன்முக வித்தகராக மாற்றுகிறது.

தமிழ் சினிமாவில் நவீனத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியவராக மட்டுமல்ல, சிறந்த கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், நடனமாடுபவர், நடன இயக்குநர் எனப் பல விதங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார்.

1960-ல் களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கி, சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். ’இந்தியன் 2’, ’தலைவன் இருக்கிறான்’ படங்களுக்குப் பிறகு தனது திரை வாழ்க்கையை கமல் முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது திரை வாழ்க்கையில் முக்கியமான படங்களாகப் பல படங்களைச் சொல்லலாம். ஆனால் சமூகத்தின் கற்பனையைப் படம் பிடித்த சில படங்கள் உள்ளன.

கமலின் தொடக்கம்

1973-ல் 'அரங்கேற்றம்' படத்தில் முதல் முறையாக கமல்ஹாசனுக்கு முழுநீளக் கதாபாத்திரம் கொடுத்தது மட்டுமல்ல, 1975-ல் 'அபூர்வ ராகங்கள்' மூலம் அவருக்குப் பெரிய திருப்புமுனையைத் தந்ததும் மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் தான். அதுதான் ரஜினிகாந்துக்கும் முதல் படம். கே.பியின் 'வறுமையின் நிறம் சிவப்பு', 'புன்னகை மன்னன்', 'மரோசரித்ரா' போன்ற பல மறக்க முடியாத படங்களில் கமல்ஹாசன் நடித்தார்.

கமர்ஷியல் படங்கள் மூலம் தடம்

1980களின் மத்தியில் கமல்ஹாசனின் படங்கள் தொடர் தோல்வி கண்டன. 1980-ல் பார்வைக் குறைபாடு உள்ளவராக அவர் நடித்த 'ராஜ பார்வை' ஓடவில்லை. ஆனால் சினிமா வியாபாரத்தில் தன் பெயரை மீண்டும் நிலை நிறுத்தி, கமர்ஷியல் சினிமாவில் தடம் பதித்தார். 'சகலகலா வல்லவன்', 'காக்கி சட்டை' போன்ற சூப்பர் ஹிட் கமர்ஷியல் படங்களுக்கு நடுவில் 'மூன்றாம் பிறை', 'புன்னகை மன்னன்' போன்ற படங்களைத் தந்தார். 1987-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'நாயகன்' அவரை புதிய உயரங்களுக்கு இட்டுச் சென்றது.

அதிலிருந்து அவரது எல்லா படங்களிலும் அவரின் தனி முத்திரை இருந்தது. 'அபூர்வ சகோதரர்கள்', கிரேஸி மோகனுடன் இணைந்து, நிமிடத்துக்கு ஒரு முறை சிரிக்க வைத்த மறக்க முடியாத 'மைக்கேல் மதன காமராஜன்' உள்ளிட்ட படங்களில் கதாசிரியராகவும் அவர் பணியாற்ற ஆரம்பித்தார்.

கமல் vs ரஜினி

தமிழ் சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் பாதைகள் பிரிந்தன. பின்னவர், கமர்ஷியல் சினிமாவுக்கும், யதார்த்த சினிமாவுக்கும் இருக்கும் கோட்டுக்கு நடுவில் 90களில் ஆரம்பித்து 2000கள் வரப் பயணித்தார்.

'மைக்கேல் மதன காமராஜன்’ படத்துக்குப் பிறகு ’குணா’. காதல் காமெடி ’சிங்காரவேலன்’ படத்துக்குப் பிறகு மறக்க முடியாத ’தேவர் மகன்’. ’இந்தியன்’, ’குருதிப்புனல்’ படங்களைத் தொடர்ந்து ’அவ்வை சண்முகி’, ’காதலா காதலா’ போன்ற காமெடிப் படங்கள். துன்பியல் நாடகமான ’மகாநதி’ படத்தைத் தொடர்ந்து கல்லூரிக் கதையான ’நம்மவர்’, நகைச்சுவைப் படமான ’சதி லீலாவதி’ படங்கள் வந்தன.

அந்த தசாப்தத்தின் முடிவு கமல்ஹாசனின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றைப் பார்த்தது. ’ஹே ராம்’ படத்தின் தோல்வியையும் தாண்டி மற்றுமொரு பிரம்மாண்ட பெரிய பட்ஜெட் படமான ’ஆளவந்தான்’ படத்தில் அவர் தரத்தை இன்னும் உயர்த்தினார். பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவில் வெளியான இந்தப் படம் தோல்வி அடைந்தது.

2000களில் அற்புதமான நகைச்சுவைப் படங்களான ’பம்மல் கே சம்பந்தம்’, ’பஞ்சதந்திரம்’, ’வசூல் ராஜா எம்பிபிஎஸ்’, பெரிய பட்ஜெட் சூப்பர் ஹிட் படங்களான ’வேட்டையாடு விளையாடு’, ’தசாவதாரம்’ உள்ளிட்ட படங்கள் வந்தன. ’விஸ்வரூபம்’ படத்தின் பிரச்சினைகளுக்குப் பிறகு கமல்ஹாசன் திரைத்துறையில் சற்று அமைதியாகிவிட்டார். ’உத்தம வில்லன்’, ’தூங்காவனம்’ என இரண்டு படங்களை மட்டுமே எடுத்தார்.

சர்ச்சைகளின் குழந்தை

வலது சாரி, நடுநிலையாளர்கள், இடது சாரி என அனைவரையும் கமல்ஹாசனைப் போல யாரும் வெறுப்பேற்றியதில்லை. தேவர்மகனோ, விருமாண்டியோ, ஹேராமோ எப்போதுமே தவறாகவே புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறார்.

கமல்ஹாசனின் ’விருமாண்டி’ (2004) மற்றும் ’விஸ்வரூபம்’ (2013) இரண்டும் தலித் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தன. தனக்கான கருத்துச் சுதந்திரம் நிராகரிக்கப்பட்டால் நாட்டை விட்டே வெளியேற வேண்டியிருக்கும் என்று விரக்தியடைந்த கமல்ஹாசன் அறிவித்தார்.

- உத்தவ் நாயக் (தி இந்து ஆங்கிலம்), தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்