முதல் பார்வை: ஜாம்பி

By உதிரன்

ஜாம்பிகளிடம் சிக்கிய நண்பர்கள் குழு அவர்களிடமிருந்து தப்பிக்கத் திட்டம் தீட்டினால் அவர்களுக்கு மருத்துவ மாணவி ஒருவர் உதவினால் அதுவே 'ஜாம்பி'.

மாமியார், மனைவியின் தொல்லையிலிருந்து தப்பிக்க நினைக்கிறார் சுதாகர். அம்மா, மனைவிக்கு இடையே நிகழும் சண்டையில் சமாதானம் செய்தே அலுத்துப் போகிறார் கோபி. வீடியோ கேம் மீதான ஆர்வத்தால் பெண் பார்க்கும் படலத்தில் சொதப்புகிறார் அன்பு. நண்பர்களான இவர்கள் மூவரும் ஒரு மதுபானக்கடையில் சந்தித்துப் புலம்ப, அங்கு வரும் யோகி பாபுவின் பகையைச் சம்பாதிக்கின்றனர். பிஜிலி ரமேஷுக்கும் யோகி பாபுவுக்கும் அதே மதுபானக்கடையில் மோதல் வெடிக்கிறது.

சுதாகர், அன்பு, கோபியுடன் பிஜிலி ரமேஷும் மது அருந்த வந்த கார்த்திக்கும் இணைய ஐந்து பேரும் காரில் புறப்படுகின்றனர். ஒரு ரிசார்ட்டில் தங்கி கொண்டாட்டமாக இருக்கும்போது திடீரென்று மனிதர்கள் ஜாம்பிகளாக மாறி ஒவ்வொருவரையும் கடித்துக் குதறுகின்றனர். இதிலிருந்து அந்த ஐந்து பேரும் தப்பித்தார்களா, யோகி பாபு என்ன ஆனார், யோகி பாபுவைக் கொன்றே தீருவேன் என்று இன்ஸ்பெக்டர் ஜான் விஜய் கடுப்பில் திரிவது ஏன், யாஷிகா ஆனந்த் ஜாம்பிகளிடம் இருந்து தப்பிக்க எப்படி உதவுகிறார் போன்ற கேள்விகளுக்கு அலுப்போடும் சலிப்போடும் பதில் சொல்கிறது திரைக்கதை.

ஹாலிவுட்டில் ஹிட்டடித்த ஜாம்பி ஜானர் தமிழ் சினிமாவில் அவ்வளவாக கண்டுகொள்ளப்படுவதில்லை. ஜெயம் ரவி நடிப்பில் 'மிருதன்' படம் மட்டும் ஜாம்பி ஜானரில் வெளிவந்த நிலையில், இரண்டாவதாக 'ஜாம்பி' படம் வந்துள்ளது. ஆனால், ஜாம்பி குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் வெறுமனே மேக்கப்பை மட்டும் நம்பி இயக்குநர் புவன் நல்லான் களம் இறங்கியிருக்கிறார்.

பேய் சினிமா, ஜாம்பி சினிமாவுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லாத அளவுக்கு கதையை நகர்த்திச் சென்ற விதம் ரசிகர்களின் சகிப்புத்தன்மைக்கு விடப்பட்ட சவால். காமெடி, த்ரில்லர் என்று எந்த வகைக்குள்ளும் அடங்காத அளவுக்கு ஏனோதானோவென்று காட்சிகள் உள்ளன. இயக்குநர் ஜாம்பி குறித்த பிம்பத்தைக் கட்டமைக்காமல் யோகி பாபு, பிஜிலி ரமேஷ், ஜான் விஜய், 'பரிதாபங்கள்' கோபி- சுதாகர், மனோபாலா, கார்த்திக், பிளாக்‌ஷிப் அன்பு ஆகிய நடிகர்களைப் பார்த்தாலே சிரித்துவிடுவார்கள். அவர்கள் பேசினாலே கை தட்டி ஆரவாரம் செய்வார்கள் என்று எப்படி நம்பினார்? என்று தெரியவில்லை. கதை என்கிற வஸ்துவுக்காகவோ, திரைக்கதை என்ற அம்சத்துக்காகவோ இயக்குநர் புவன் நல்லான் எந்த மெனக்கிடலிலும் ஈடுபடாதது வருத்தம்.

பிஜிலி ரமேஷ் ஒரு கட்டத்தில் இனிமேல் தான் சிறப்பான தரமான சம்பவம் இருக்கு என்கிறார். அது படத்தில் இல்லை. படம் பார்க்க வந்த ரசிகர்களுக்குத்தான் என்பதைப் புரிந்துகொள்ள வெகுநேரம் ஆகவில்லை.

யாஷிகா ஆனந்த் மருத்துவ மாணவியாக வருகிறார். இவரால் படத்தில் பெரிய திருப்பம் வரும் என்று எதிர்பார்த்தால், அவர் கவர்ச்சி நாயகியாகவே வந்து போகிறார். ஜாம்பிகளை எதிர்த்துப் போராடுவது, ஜாம்பிகளைத் தாக்குவது குறித்த புரிதலும் படத்தில் இல்லை. யோகி பாபு இடையே காணாமல் போகிறார். கடைசியில் வந்து தானாகவே ஒட்டிக்கொள்கிறார்.

பிரேம்ஜி அமரனின் இசையும் பின்னணியும் சில நகைச்சுவை வசனங்களுமே படத்தின் ஆறுதலாக உள்ளன. 2-ம் பாகம் வேறு வருவதாக அறிவித்துள்ளனர். அந்த அதிர்ச்சியிலிருந்துதான் மீள முடியவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

56 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்