‘லிங்கா’ பட விவகாரம்: ரஜினிகாந்த், ராக்லைன் வெங்கடேஷ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி மனு

By செய்திப்பிரிவு

‘லிங்கா’ படத்தால் ஏற்பட்ட இழப்புக்கு நஷ்டஈடு தராத காரணத்தால் நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மரினா பிக்சர்ஸ் மேலாண்மைப் பங்குதாரர் ஆர்.சிங்காரவடிவேலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படத்துக்கான திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கான விநியோக உரிமையை ரூ.8 கோடி கொடுத்து வாங்கினேன். இப்பணம் திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டதாகும்.

இப்படத்துக்கான விநியோக உரிமையை வாங்கும்போது ‘படம் வெற்றி பெறும். ஒருவேளை படம் தோல்வியடைந்தால் அதற்கான நஷ்டஈடு வழங்கப்படும்’ என்று வாய்மொழியாக உறுதி யளிக்கப்பட்டது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால், வசூலும் கணிசமாக குறைந்துவிட்டது. அதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

படம் வெளியாவதற்கு முன்பு, இப்படத்தை எங்களுக்கு திரை யிட்டுக் காட்டவில்லை. அவ்வாறு செய்திருந்தால் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து விநியோக உரிமையை பெற்றிருக்கமாட்டேன்.

இப்படத்தால் பெரும் இழப்பு ஏற்பட்டதையடுத்து நான் உட்பட பல்வேறு விநியோகஸ்தர்கள் லிங்கா பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷிடமும், நடிகர் ரஜினிகாந்திடமும் முறையிட்டோம். அதன்பிறகு பல போராட்டங்களும் நடத்தினோம். எந்தப் பலனும் இல்லை. இப்படத்தால் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் சுமார் ரூ.33 கோடியும், எனக்கு மட்டும் ரூ.4.5 கோடியும் இழப்பு ஏற்பட் டுள்ளது.

‘லிங்கா’ என்ற வார்த்தை சமஸ் கிருத வார்த்தையாகும். இது, தமிழ் வார்த்தை என்று சொல்லி, அரசிடம் இருந்து கேளிக்கை வரி விலக்கு பெற்றுள்ளனர். இதன்மூலம் தமிழக அரசுக்கு ரூ.21 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ‘லிங்கா’ படத்தால் ஏற்பட்ட இழப்புக்கு நஷ்டஈடு தராததால் நடிகர் ரஜினிகாந்த், பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் மார்ச் 3-ம் தேதி புகார் அளித்தேன். அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இருவர் மீதும் மார்ச் 3-ம் தேதி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

23 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்