ஆயிரத்தில் ஒருவன்’... எம்ஜிஆர், ஜெயலலிதா இணைந்த முதல் படம்! -  54 வருடங்கள்... ‘ஆயிரத்தில் ஒருவன்’ வெளியான நாள் இன்று!

By வி. ராம்ஜி

ஒரு படம் எப்படி இருக்கவேண்டும் என்பதும் எப்படி இருந்தால் அது வெற்றி ஃபார்முலா என்பதும் ஆளுக்கு ஆள், கதைக்கு கதை, காலத்துக்கு காலம் மாறுபடலாம். ஆனால், எப்போதுமான வெற்றி ஃபார்முலா ஒன்று இருக்கிறது. அது... எம்ஜிஆர் பட ஃபார்முலா. அந்த எம்ஜிஆர் பட கலவை, இன்று வரை தோற்றதில்லை என்பது கூட எம்ஜிஆரின் பெருமை. அப்படியான ஃபார்முலாவில் வந்து, பிரமாண்ட வெற்றி பெற்ற மிக முக்கியமான படங்களில் ஒன்றுதான்... ‘ஆயிரத்தில் ஒருவன்’.

தயாரிப்பாளரும் இயக்குநருமான பி.ஆர்.பந்துலு, எம்ஜிஆரிடம் சென்று கதையைச் சொன்னார். ‘நீங்கள் நடித்தால்தான் இந்தக் கதையை எடுப்பேன். இல்லேன்னா, இந்தக் கதையை அப்படியே வைச்சிட்டு, வேற கதையை வேற யாரையாவது வைச்சு எடுப்பேன். இந்தக் கதை, உங்களைத் தவிர யாரும் பண்ணமுடியாது. பண்ணினாலும் மக்கள் ஏத்துக்க மாட்டாங்க’ என்று பந்துலு சொன்னார். எம்ஜிஆரும் கதையைக் கேட்டார்.  ’பண்றேன்’ எனச் சம்மதித்தார். அதுதான் ‘ஆயிரத்தில் ஒருவன்’.

1965ம் ஆண்டு வெளியானது ‘ஆயிரத்தில் ஒருவன்’. இதே ஆண்டில்தான், இயக்குநர் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’யும் வெளியானது. இந்தப் படத்தில்தான் வெண்ணிற ஆடை மூர்த்தியும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் அறிமுகமானார்கள். அவர்கள் மட்டுமா? இன்னொரு உச்சநட்சத்திரமும் அறிமுகமானார். அவர்... ஜெயலலிதா.

முதல் படம்,  ஸ்ரீதரின் இயக்கத்தில். அடுத்த படமே எம்ஜிஆருக்கு நாயகி. தமிழ் சினிமாவின் மொத்தக் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார் ஜெயலலிதா. அதுதான் ‘ஆயிரத்தில் ஒருவன்’.

1965ம் ஆண்டு, எம்ஜிஆருக்கு மறக்கமுடியாத ஆண்டு. அந்த வருடத்தின் தொடக்கத்தில் பொங்கல் ரிலீசாக வந்த ‘எங்க வீட்டுப்பிள்ளை’ அடைந்த வெற்றியை சரித்திரம் பதிவு செய்திருக்கிறது. இந்தப் படத்தை அடுத்து மார்ச் மாதம் 27ம் தேதி, டி.ஆர்.ராமண்ணாவின் இயக்கத்தில் ‘பணம் படைத்தவன்’ படம் வெளியானது. இந்தப் படமும் வெற்றியைத் தந்தது.

ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி, கே.சங்கரின் இயக்கத்தில் சரோஜாதேவியுடன் ‘கலங்கரை விளக்கம்’ படத்தில் நடித்தார் எம்ஜிஆர். செப்டம்பர் மாதம் 10ம் தேதி தேவர்பிலிம்ஸின் ‘கன்னித்தாய்’ வெளியானது. அக்டோடபர் 23ம் தேதி எஸ்.ராமதாஸ் இயக்கத்தில் ‘தாழம்பூ’வும் டிசம்பர் 10ம் தேதி புல்லையா இயக்கத்தில் ‘ஆசைமுகம்’ திரைப்படமும் வெளியாகின. நடுவே, ஜூலை மாதம் 9ம் தேதி ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது ‘ஆயிரத்தில் ஒருவன்’.

ஆக,  65ம் ஆண்டில், எம்ஜிஆர் 7 படங்களில் நடித்தார். அதில் ’கன்னித்தாய்’ சுமாரான படமாகவும் ’தாழம்பூ’ தோல்விப்படமாகவும் அமைந்தன. ஆனால் ‘எங்க வீட்டுப் பிள்ளை’யும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படமும் இருநூறு நாட்களைக் கடந்து ஓடியது. வசூலைக் குவித்தது.

இதேபோல் 65ம் ஆண்டில், சிவாஜி கணேசன், 5 படங்களில் நடித்தார். கே.சங்கர் இயக்கத்தில் ‘அன்புக்கரங்கள்’, பீம்சிங் இயக்கத்தில் ‘சாந்தி’, ‘பழநி’, பி.மாதவன் இயக்கத்தில் ‘நீலவானம்’, ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் ‘திருவிளையாடல்’ ஆகிய படங்களில் நடித்தார். இதில் பிரமாண்டமான வெற்றியைப் பெற்ற ’திருவிளையாடல்’, அதை கோயில் விழா, கல்யாண வீடு என ஒலிச்சித்திரமாகக் கேட்டதையும் மறக்கமுடியுமா என்ன?

சரி... ’ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு வருவோம்.

ராஜாங்கக் கதை. அடிமைகளாக்கி விற்கும் அவலம். சர்வாதிகாரம் செய்யும் மன்னனை எதிர்த்து, குரல் கொடுக்கும் கூட்டத்துக்கு மருத்துவரான எம்ஜிஆர், உதவி செய்கிறார். அப்போது அங்கு வந்த மன்னனின் படை, எம்ஜிஆரையும் கைது செய்து அள்ளிச் செல்கிறது. பிறகு, அவர்களை அடிமையாக்கி, ஒரு தீவின் தலைவனிடம் விற்கிறது. அங்கே அரக்க ராஜாவாக மனோகர். இங்கே தீவுத்தலைவனாக ராமதாஸ். இங்கே... இளவரசி ஜெயலலிதா.

அடிமைகளின் தலைவனாக மாறும் எம்ஜிஆர்தான், ‘ஆயிரத்தில் ஒருவன்’. அஹிம்சையையும் அன்பையும் போதித்து, பொறுமை காக்கச் சொல்லும் லட்சியவாதி கேரக்டர், எம்ஜிஆருக்குத் தைத்த சட்டை. எனவே அழகாகப் பொருந்திப்போகிறது.

அங்கிருந்து, தப்பிச் செல்லும் சூழலில், கொள்ளையடிக்கும் கூட்டத்திடம் சிக்கிக் கொள்கிறது எம்ஜிஆர் கூட்டம். அந்தக் கூட்டத்தின் தலைவன் நம்பியார். அவருக்கு அடிமையாகி, கொள்ளையடிக்கவும் செய்கிறார் எம்ஜிஆர். போதாக்குறைக்கு, காதலியாகிவிட்ட ஜெயலலிதாவையும் உடன் அழைத்து வருகிறார். அவர்கள் அனைவரையும் எப்படிக் காப்பாற்றுகிறார். தன் தாய்நாட்டுக்கு எவ்விதம் செல்கிறார் என்பதை உணர்ச்சி பொங்கச் சொல்லியிருப்பார் இயக்குநர் பி.ஆர்.பந்துலு.

அந்த வருடத்தில் வந்த ‘எங்க வீட்டுப்பிள்ளை’ எப்படி கலர்படமோ... அதேபோல், ‘ஆயிரத்தில் ஒருவன்’ படமும் கலர்ப்படம்தான். எனவே, ரசிகர்களை இன்னும் ஈர்த்தது என்றே சொல்லவேண்டும்.

படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் எம்ஜிஆர். அடுத்த காரணம் வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம். ‘மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என்று நம்பியார் கேட்பார். ‘சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்’ என்பார் எம்ஜிஆர். ‘தோல்வியையே சந்திக்காதவன் நான்’ என்று கர்ஜிப்பார் நம்பியார். ‘தோல்வியை எதிரிக்குப் பரிசாகத் தருபவன் நான்’ என்பார் எம்ஜிஆர்.  இப்படி படம் முழுக்க ‘பஞ்ச்’ வசனங்கள் பறந்துகொண்டே இருக்கும்; விசில் சத்தம் காதைக் கிழித்துக்கொண்டே இருக்கும்.

நாகேஷின் காமெடி, படத்துக்கு பக்கபலம். வரும் சீன்களிலெல்லாம் விலா நோகச் சிரிக்க வைத்திருப்பார் நாகேஷ். அதேபோல், ஜெயலலிதாவின் தோழியாக வரும் நடிகை மாதவி (அந்தக் கால நடிகை) அழகாகவும் இருப்பார். காமெடியும் பண்ணுவார். ‘அதேகண்கள்’ படத்தில், நாகேஷுடன் நடித்திருப்பாரே... அவரேதான். ஒருகட்டத்துக்குப் பிறகு இவர் என்ன ஆனார் என்கிற கேள்வி, அப்போது பரவலாகப் பேசப்பட்டது.

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இன்னொரு பலம்... விஸ்வநாதன் ராமமூர்த்தி. ‘பருவம் எனது பாடல்’, ‘ஏன் என்ற கேள்வி’, ஓடும் மேகங்களே’, ‘உன்னை நான் சந்தித்தேன்’, ‘நாணமோ...’, ‘அதோ  அந்தப் பறவை போல வாழவேண்டும்’ என கண்ணதாசனும் வாலியும் பாடல்கள் எழுத, அட்டகாசமாய் இசையமைத்திருந்தார்கள் மெல்லிசை மன்னர்கள். ஆனால் என்ன... இந்தப் படம்தான் மெல்லிசை மன்னர்கள் இணைந்து இசையமைத்த கடைசிப்படம். இதன் பிறகு எம்.எஸ்.வி.யும் வி.ராமமூர்த்தியும் தனித்தனியே இசையமைக்கத் தொடங்கினார்கள்.

எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படம். அதுவே பிரமாண்ட வெற்றி. சக்ஸஸ் ஜோடியாக வலம் வந்தார்கள்... திரையுலகிலும் பின்னாளில் அரசியலிலும்!

1965ம் ஆண்டு, ஜூலை 9ம் தேதி வெளியானது இந்தப் படம். கிட்டத்தட்ட, 54 வருடங்களாகிவிட்டன.  அடுத்த தலைமுறையினரும் கொண்டாடக் கூடிய படம் என்று இன்றைக்கும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

எம்ஜிஆரின் ஆகச்சிறந்த படங்களில்  முக்கியமான திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்.’ எப்போது போட்டாலும் கலெக்‌ஷன் அள்ளும். கைத்தட்டலும் விசிலும் பறக்கும்! ஏனென்றால்... எம்ஜிஆரே ‘ஆயிரத்தில் ஒருவன்’தான்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

6 mins ago

உலகம்

4 mins ago

தமிழகம்

14 mins ago

இந்தியா

17 mins ago

சினிமா

23 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

48 mins ago

ஓடிடி களம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்