முதல் பார்வை: 90 எம்.எல்

By உதிரன்

எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தங்களுக்குப் பிடித்த மாதிரி வாழ நினைக்கும் ஐந்து பெண்களின் கதையே '90 எம்.எல்'.

சென்னையில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்க வருகிறார் ரியா (ஓவியா). அங்கு ஏற்கெனவே குடியிருக்கும் தாமரை (பொம்மு லட்சுமி), சுகன்யா (மோனிஷா ராம்), காஜல் (மசூம் ஷங்கர்) , பாரு (ஸ்ரீகோபிகா) ஆகிய நான்கு பெண்களைச் சந்தித்துப் பழகுகிறார். தாமரையின் (பொம்மு லட்சுமி) பிறந்த நாள் அன்று ஓவியா மது விருந்து கொடுக்க, அதுவரை பழக்கமே இல்லாத  மற்ற பெண்களும் தயங்கியபடி மது அருந்துகின்றனர். பின் ஒவ்வொருவராக பாலியல் குறித்தும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், திருமணம் குறித்தும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். சுகன்யா தன் காதலுக்கு மதம் தடையாக இருப்பதாகவும் தான் காதலிக்கும் நபருக்கு அடுத்த நாள் திருமணம் நடக்க இருப்பதாகவும் புலம்புகிறார். அவரைத் தேற்றும் விதமாக சுகன்யாவைக் காதலனுடன் சேர்க்க நான்கு பெண்களும் திட்டமிடுகின்றனர்.

இப்படி தாமரை, பாரு, காஜல், ரியா உள்ளிட்ட  ஐந்து பெண்களுக்கும் ஒவ்வொரு பிரச்சினை உள்ளது. அந்தப் பிரச்சினைகள் என்னனென்ன, அவற்றைத் தீர்க்க முடிந்ததா, சுகன்யாவுக்குத் திருமணம் ஆனதா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

லிப் லாக் முத்தக் காட்சிகள், படுக்கையறைக் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள், பெண்கள் மது அருந்துவது, போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற காட்சிகள் ட்ரெய்லரில் இருக்கிறதே என்று யோசிக்கலாம். ஆனால், படத்தின் மையம் இவை அல்ல. அந்த விதத்தில் இயக்குநர் அழகிய அசுரா என்கிற அனிதா உதீப் பெண்களின் பார்வையில் அவர்கள் வாழ்க்கை குறித்துப் பேசியிருக்கிறார்.

படத்தில் பியூட்டி பார்லரில் வேலை செய்யும் பெண் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் ஓவியா. தன்னை அதிகம் நேசிக்கிற, யாருக்காகவும் தன்னை விட்டுக்கொடுக்காத, காதலில் மட்டும் நம்புகிற, கல்யாணம், கமிட்மென்ட் என்றாலே தூர ஓடுகிற சுதந்திரப் பறவை மாதிரியான துணிச்சலான கதாபாத்திரத்தில் வந்து போயிருக்கிறார். ஓவியா நடிப்பதற்கு எந்த இடத்திலும் வாய்ப்பு இல்லை. ஸ்டைலாக நடப்பது, பன்ச் பேசுவது என்றே நகர்ந்து போகிறார். அவரது கதாபாத்திரக் கட்டமைப்பும் முழுமையாக இல்லை.

நான்கு பெண்கள் தங்கள் பிரச்சினைகளைப் பகிர்வதற்கான கருவியாகவும், அதைத் தீர்ப்பதற்கு தன்னால் ஆன உதவிகளைச் செய்யும் கதாபாத்திரமாகவுமே ஓவியா இருப்பதால் சில இடங்களில் மட்டும் பிரதான நாயகிக்கான அம்சங்களோடு வலம் வருகிறார்.

காதல் கணவன் மீதான அன்பை வெளிப்படுத்தும் தருணங்களிலும், கண்டுபிடிச்சிட்டியா என்று கணவனிடம் வெட்கப்பட்டுக் கேட்கும்போதும் பொம்மு லட்சுமியின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. மசூம் ஷங்கர், மோனிஷா ராம், ஸ்ரீகோபிகா ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களில் பொருந்திப் போகிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் வரும் சிம்புவும் ஒரு ஃபினிஷிங் கொடுக்கிறார்.

அர்விந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், ஆண்டனியின் எடிட்டிங்கும் படத்துக்கு வலு சேர்க்கின்றன. மிர்ச்சி விஜய் வரிகளில் சிம்புவின் இசையில் பிரியாணி பாடல் மட்டும் ஓ.கே.ரகம். பின்னணி இசையிலும் சிம்பு கவனிக்க வைக்கிறார். மரண மட்டை பாடலை அப்படியே கத்தரித்திருக்கலாம்.

கட்டுப்பாடோடு வாழும் பெண்களுக்கு சுதந்திரம் ஏன் அவசியம், விருப்பப்பட்ட வாழ்க்கையை ஏன் அவர்களால் வாழ முடியவில்லை என்ற கேள்வியை அனிதா உதீப் இப்படத்தில் எழுப்பியிருக்கும் விதம் சிறப்பு. ஆண்கள் மட்டுமே தங்கள் பாலியல் விருப்பத்தை, ஏக்கத்தை, இயலாமையைப் பேசும் சூழலில் பெண்கள் அதுகுறித்துப் பேசுவது தமிழ் சினிமாவுக்குப் புதிது. அந்த விதத்தில் அனிதா உதீப் பாராட்டுக்குரியவர். அந்த இடைவேளை ட்விஸ்ட் செம்ம.

பெண்கள் மது அருந்துவது போன்ற காட்சிகள் அடுத்தடுத்து தொடர்வதும் போதைப் பொருள் பயன்படுத்தும் அளவுக்குச் செல்வதும் கதைக்குத் தேவைப்படவில்லை. ஆனாலும் அது ரிப்பீட் ஆவதால் திரைக்கதையில் தேக்க நிலை ஏற்படுகிறது. முத்தக் காட்சிகளும், படுக்கையறைக் காட்சிகளும் கூட சம்பந்தமே இல்லாமல் செருகப்பட்டுள்ளன. மது அருந்தினால்தான் அல்லது போதைப் பொருளைப் பயன்படுத்தினால்தான் பெண்கள் தங்கள் பிரச்சினைகளைச் சொல்வார்கள், அழுது புலம்புவார்கள் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை.

பெண்ணின் தன் பாலின உறவைக் குறித்து துணிச்சலுடன் படம் பேசுகிறது. ஆனால், அக்காட்சிகள் உணர்வுப்பூர்வமாக சித்தரிக்கப்படவில்லை.  இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் தமிழ் சினிமாவில் பேசாப்பொருளைப் பேசத் துணிந்ததற்காக '90 எம்.எல்' படத்தை வரவேற்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்