நான் அப்படி வளரவில்லை, வளர்க்கப்படவில்லை: பொதுநலன் கருதி படக்குழுவினர் புகார் தொடர்பாக கருணாகரன் விளக்கம்

By ஸ்கிரீனன்

நான் அப்படி வளரவில்லை, வளர்க்கப்படவில்லை என்று 'பொதுநலன் கருதி' படக்குழுவினர் புகார் தொடர்பாக கருணாகரன் விளக்கம் அளித்துள்ளார்.

சீயோன் இயக்கத்தில் பிப்.7-ம் தேதி வெளியாகியுள்ள படம் 'பொது நலன் கருதி'. வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலில் இருக்கும் போட்டியை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் சந்தோஷ், அருண் ஆதித், கருணாகரன், அனுசித்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கருணாகரன் கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி இயக்குநரும், தயாரிப்பாளரும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது. 

இவர்கள் இப்படிப் பேசியது பிடிக்காமல், நடிகர் கருணாகரன் இவர்களை தொலைபேசியில் அழைத்து மிரட்டியதாக ஒரு ஒலிப்பதிவை சாட்சியாகக் காட்டி, இயக்குநர் சீயோன் மற்றும் படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கருணாகரன் மீது புகார் அளித்தனர்.

அதில், ''கருணாகரன் படத்தில் நடிக்க ரூ. 25 லட்சம் முழுமையாக பெற்றுக்கொண்ட பிறகே பின்னணி குரல் கொடுத்தார். பட விளம்பர நிகழ்ச்சிக்கு அழைத்த போது வரவில்லை. மேலும், இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்திற்கும் தொலைபேசியில் அழைத்து மிரட்டல் விடுத்துள்ளார். எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இப்புகார் தொடர்பாக கருணாகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''முதலில் 'பொதுநலன் கருதி' இயக்குநர் சீயோன் மற்றும் அதன் இணைத் தயாரிப்பாளர் என்னைப் பற்றிச் சொல்லும் குற்றச்சாட்டுகள் முழுவதுமே உண்மை இல்லை. படத்தின் ஆடியோ ரிலீஸ் பிப்.4-ம் தேதியென்று சொல்லி என்னை அழைத்ததே பிப்.1-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9.30 மணிக்கு தான்.

கால அவகாசம் குறைவாக இருந்ததால் முன்னதாக ஒப்புக்கொண்ட பணிகளை ஒதுக்கிவைக்க முடியவில்லை. இவற்றையெல்லாம் தெளிவாக இயக்குநரிடமும், இணை தயாரிப்பாளரிடமும் கூறியிருந்தேன். படப்பிடிப்புப் பணிகள் முடிந்து நான் சென்னை வந்ததே, பிப்.8-ம் தேதி தான். நான் ஏதோ வேண்டுமென்றே ஆடியோ ரிலீசுக்கு வரவில்லை என்று அவர்கள் என் மீது குறை சொல்கிறார்கள். அது உண்மையில்லை.

'Celebrity Show' முடிந்து அவர்கள் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருக்கும் வழியில் கருணாகரனால் அனுப்பப்பட்ட மர்ம நபர்கள், "நீ எப்படி கருணாகரனைக் குறை சொல்லலாம் என தாக்க முயற்சித்தனர்" என்றும் படத்தின் டீஸர் வெளியான நவம்பர் 27 அன்றே கந்துவட்டிக் கும்பல் இயக்குநருக்குத் தொலைபேசியில் மிரட்டியதாகவும் பிப்.9 அன்று புகார் கொடுத்திருக்கிறார்கள்.

இவை தொடர்பாக நான் தெரிவிக்க விரும்புவது பின்வருமாறு:

* எனக்கும் எந்தக் கந்துவட்டிக்காரருக்கும் தொடர்பு ஏதும் இல்லை. ஏனெனில் நான் அப்படி வளரவில்லை.

* எனது தந்தை காளிதாஸ் தேசத்தின் பாதுகாப்புக்காக உழைக்கும் மத்திய அரசின் முக்கியத் துறையில் பணியாற்றி விருது பெற்றவர். இவர்கள் குறிப்பிட்டிருப்பது போன்ற வழிகளில் நான் வளர்க்கப்படவில்லை.

* தான் நடித்த படம் ஓட வேண்டும் என்றுதான் ஒவ்வொரு நடிகரும் விரும்புவர். உயிரைப் பணயம் வைத்து நான் இந்தப் படத்தில் சில காட்சிகளில் நடித்திருக்கிறேன். கந்துவட்டிக்காரர்களுடன் நான் சேர்ந்து படத்திற்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறுவதில் எள்ளளவும் உண்மையில்லை.

* கடனால் பாதிக்கப்பட்ட பல விவசாயிகளுக்கும் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்திருக்கும் என்னை கந்துவட்டிக் கும்பலுடன் தொடர்புபடுத்திப் பேசுவது வேதனை அளிக்கிறது. எனக்கும் சமூக உணர்வு இருக்கிறது. கந்துவட்டிக்காரர்களுடன் சேர்ந்து கொண்டு வன்முறையை நம்பி வாழும் தேவையில் நான் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

*குறும்படங்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்த நான் புதுமுக இயக்குநர்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டேனா? ’பொதுநலன் கருதி’ திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்''.

இவ்வாறு கருணாகரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்