காஷ்மீர் சிறுமி பலாத்காரம்; பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையே தீர்வு: வரலட்சுமி ஆவேசம்

By செய்திப்பிரிவு

இனிமேலும் ஒரு குழந்தையோ, அல்லது ஒரு பெண்ணோ உயிரிழக்கக் கூடாது. அதற்கு மரண தண்டனை ஒன்றே ஒரே தீர்வு என்று வரலட்சுமி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் கதுவா பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது முஸ்லிம் சிறுமி ஆசிஃபா கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக 3 போலீஸார் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை மட்டுமே ஒரே தீர்வு என்று ஒரு சட்டம் இயற்றப் போராடுவோம் என்று நடிகை வரலட்சுமி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நம் நாடும் மாநிலமும் தற்போது இருக்கும் கொந்தளிப்பான சூழ்நிலையில் எனக்கு புது வருடத்தைக் கொண்டாட மனம் ஏற்கவில்லை. இனிமேலும் தாமதிக்காமல், காலம் கடத்தாமல், நாம் நம்மையே கேள்வி கேட்டுக்கொள்ளும் நேரம் இது. இத்தகைய ஒரு சமுதாயத்திலா நாம் வாழ ஆசைப்பட்டோம்? நம் வருங்காலத்தை நிர்ணயம் செய்வது நம் கடந்த காலமே என்பது பெரியோர் வாக்கு. ஏற்கெனவே காலம் கடந்துவிட்டது.

அரசியல்வாதிகள், பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகள், குழந்தைகள் மேல் காமுறும் பேய்களின் கைகளில் சிக்கி நாம் சின்னாபின்னாவானது போதாதா? நான் உங்களை இரந்துக் கேட்டுக்கொள்கிறேன். எதிர்த்து கேள்வி கேளுங்கள், நியாயமான, நல்ல விஷயங்களுக்காக எதிர்த்து நில்லுங்கள். உங்களால் முடிந்ததை செய்யுங்கள். ஆனால் தயவுசெய்து ஏதாவது செய்யுங்கள். ஜல்லிக்கட்டு, காவிரி, ஏன் ஒரு கண் சிமிட்டலை டிரெண்டிங் ஆக்க முடிந்தது நம்மால்...

ஒரு குழந்தையின், ஒரு உயிரின், மதிப்பு என்பது ஒரே ஒரு நாள் கோபத்திற்கும், இரங்கலுக்கும் மட்டுமே உரியதா?!? நாம் அனைவரும் இணைவோம், நியாயம் கேட்போம். பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை மட்டுமே ஒரே தீர்வு என்று ஒரு சட்டம் இயற்றப் போராடுவோம். இங்கு கேட்டால் மட்டுமே கிடைக்கும். சக இந்தியர்களை நான் இருகரம் கூப்பி இரந்து அழைக்கிறேன், இதுவே சரியான நேரம். நியாயமான விஷயங்களுக்கு குரல் கொடுங்கள், எதிர்த்து நில்லுங்கள். பாலியல் வன்கொடுமை என்பது நாம் சகித்துகொண்டுச் செல்லும் ஒரு விஷயமில்லை.

நாம் அனைவரும் இது நம் பிரச்சினை இல்லை என்று நினைத்தால், அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தெரியுமா இது மாதிரி ஒரு சம்பவம் தங்களுக்கு நேரும் என்று? ஆனால், அது நடந்தது. இது யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். இந்த ஆத்திரத்தையும் வலியையும் புரிந்துகொள்ள நான் ஒரு தாயாக வேண்டிய அவசியமில்லை. மனிதத் தன்மையுடையவராக இருந்தாலே போதுமானது. நாம் ஏற்கெனவே மிகவும் காலம் தாழ்த்திவிட்டோம்.

இதனை எதிர்ப்பதற்கும், உங்கள் மனசாட்சி உறுத்துவதற்கும் இன்னும் எத்தனை அப்பாவி உயிர்களை இழக்க வேண்டும்? நான் உங்களை வீட்டை விட்டு வெளியே வந்து போராட அழைக்கவில்லை, ஆனால் சமூக வலைதளங்களின் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவே அழைக்கிறேன். அதையாவது செய்யுங்கள். கோழைகளாக இருக்காதீர்கள். உங்களை இரைஞ்சுகிறேன்.

கடுமையான தண்டனை பற்றிய பயம் இல்லையென்றால் இது போன்ற கொடூரங்களை ஒரு நாளும் நிறுத்த முடியாது. காலம் கடக்குமுன்னே ஒரு மாற்றத்தை ஒன்றிணைந்து நாம் அனைவரும் ஏற்படுத்தலாம். என்னை ட்விட்டரில் பின்தொடரும் எட்டு லட்சம் பேருக்கும் இத்தகவலை நான் பகிர்ந்துள்ளேன். நீங்களும் பகிர வேண்டுகிறேன். இது அமைதி காக்கும் நேரமல்ல. பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடு.. எங்களுக்கு நீதி வேண்டும் என போராடும் நேரமிது.

நான் வரலக்ஷ்மி சரத்குமார். நான் ஒரு பெண். இன்று நான் எதிர்த்து நிற்கிறேன். உண்மையாகவே நான் பாதுகாப்பாக உணரவில்லை, கொடூரமானவர்கள் தங்கள் தவறுகளுக்கு தண்டனை பெரும் காலம் நெருங்கிவிட்டது. இனிமேலும் ஒரு குழந்தையோ, அல்லது ஒரு பெண்ணோ உயிரிழக்கக் கூடாது. அதற்கு மரண தண்டனை ஒன்றே ஒரே தீர்வு'' என்று வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்