‘பீஸ்ட்’ முதல் ‘புழு’ வரை... - கவனம் ஈர்த்த படங்களில் மெச்சத்தக்கவை எவை?

By கலிலுல்லா

கடந்த மாதம் ஏப்ரல் 13-ம் தேதி வெளியான விஜய்யின் 'பீஸ்ட்' படம் தொடங்கி அண்மையில் மே 20-ம் தேதி வெளியாகி திரையில் ஓடிக்கொண்டிருக்கும் 'நெஞ்சுக்கு நீதி' படம் வரையிலான சினிமா குறித்த ஒரு விரிவான ஓப்பீட்டு பார்வை குறித்து பார்ப்போம்.

விஜய் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது 'பீஸ்ட்' திரைப்படம். இந்திய 'ரா' உளவுப் பிரிவு அதிகாரியாக இருக்கும் விஜய், சென்னை மால் ஒன்றை ஹைஜாக் செய்யும் தீவிரவாதிகளிடமிருந்து மக்களை எப்படி மீட்டார்? எதற்காக அந்த ஹைஜாக் நடக்கிறது என நீள்வது தான் படத்தின் கதை. இந்தப் படம் வெளியான மறுநாள் யஷ் நடித்த 'கேஜிஎஃப் 2' திரைப்படம் வெளியிடப்பட்டது. 'கேஜிஎஃப்' முதல் பாகத்தின் தொடர்ச்சியான இந்தப் படத்தில், ஒட்டுமொத்த கேஜிஎஃப் சாம்ராஜ்ஜியத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் யஷ், அதிகார மோதலுக்கு எதிரான யுத்தத்தில் என்ன ஆனான் என்பதுதான் கதை.

இந்த இரண்டு படங்களுமே நாயக பிம்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வணிக சினிமாக்கள். ஆனால், நாயக பிம்பத்தை மட்டுமே கொண்டு ஒரு படத்தால் வெற்றி பெற்றுவிட முடியாது என்பதை 'பீஸ்ட்' நிரூபித்துக்காட்டியுள்ளது. நம்பகத்தன்மையில்லாத, அமெச்சூர் காட்சிகளால் ரசிகர்களின் பேராதரவிலிருந்து பின்தங்கிவிட்டது 'பீஸ்ட்'. அப்படிப்பார்த்தால் 'கேஜிஎஃப் 2' முழுவதுமே கற்பனைவாத காட்சிகள்தான். ஏனினும், திரைக்கதை மொழியுடன் கட்டமைக்கப்படும் காட்சிகளை விருந்து படைக்கும்போது, அதில் நம்பகத்தன்மை கரைந்து காட்சியின் சாரம்சம் படிந்துவிடுகிறது.

'பீஸ்ட்' படத்தின் இறுதிக் காட்சியில் விஜய் போர்விமானத்தை ஓட்டும்போது ஏற்படும் சோர்வும், 'கேஜிஎஃப் 2' இறுதிக்காட்சியில் கப்பலில் அத்தனை தங்கத்தையும் எடுத்துக்கொண்டு தனியாளாக நிற்கும் யஷ்ஷுக்கு கிடைக்கும் வரவேற்பும்தான் திரைமொழியின் அடர்த்தி. தவிர, இரண்டு படங்களிலும் ஆண்மையவாத காட்சிகள், பெண்களை செட்பிராபர்டியாக பயன்படுத்துவது உள்ளிட்ட மாஸ் படங்களுக்கான டெம்ப்ளேட்டுகள் தொடர்ந்து ஊட்டபட்டிருப்பதையும் விமர்சன ரீதியில் தவிர்க்க முடியாது.

அடுத்து, அருண் விஜய், அர்னவ், மஹிமா நம்பியார், விஜயகுமார் நடிப்பில் ஏப்ரல் 21-ம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியானது 'ஓ மை டாக்'. மற்ற எல்லா உயிரினங்களையும் போல, மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த உலகில் வாழ அனைத்து உரிமைகளும் உண்டு என்பதை விழிசவால் நிறைந்த நாய் ஒன்றின் மூலம் சொல்ல முயற்சித்திருக்கும் கதை. தமிழ் சினிமாவை எடுத்துக்கொண்டால் வித்தியாசமான கதைக்களங்கள் படங்களாவது அபூர்வம். குறிப்பாக நாய்கள் குறித்து எடுக்கப்படும் படங்கள் வெகு சொற்பம். அந்த வகையில், ஒரு புது முயற்சியாகவும், குழந்தைகளுக்கான திரைப்படமாகவும் கோடைக்காலத்தில் ஓடிடியில் வெளியானது 'ஓ மை டாக்'.

அடுத்ததாக ஏப்ரல் 28-ம் தேதி விஜய் சேதுபதி நாயகனாகவும், நயன்தாரா, சமந்தா நாயகிகளாக நடித்த 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் வெளியானது. இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் காதலிக்கும் நாயகன் இறுதியில் என்ன முடிவெடுத்தார் என்பது தான் கதை. காலங்காலமாக உருவாக்கிய ஃபர்னிச்சர்களை சில இயக்குநர்கள உடைக்க முயற்சிக்கும் வேளையில், மீண்டும் அந்த ஃபர்னிச்சரை ஒட்ட வைக்கும் பொறுப்பை சில இயக்குநர்கள் தங்களை அறிந்தும், அறியாமலும் செய்கின்றனர்.

அப்படியான ஒரு படமாக வெகுஜன பார்வையாளர்களிடமிருந்தும் கூட பெரிய அளவில் 'காத்து வாக்குல காதல்' படம் வரவேற்பை பெறவில்லை. இதே கதையை கொஞ்சம் மாற்றி இரண்டு ஆண்கள் ஒரு பெண் என வடிவமைந்திருந்தால், 'ஒரு பெண் இரண்டு ஆண்களை காதலித்து ஏமாற்றுகிறாள்' என வசைமொழிகள் வந்திருக்கிருக்கும். ஆனால், விஜய் சேதுபதிக்கு அப்படியான எந்த பிரச்னையுமில்லை. காரணம் ஆண்.

அவர் கதீஜாவையும், கண்மனியையும் ஒரே நேரத்தில் காதலித்து ஒரே வீட்டில் தங்க வைக்கலாம். 'நீங்க தான் என்ன லவ் பண்ணீங்க என்னால அத தடுக்க முடியல' என அந்த இடத்திலும் கூட எளிதாக தன்னை நல்லவனாக்கி அந்த இரு பெண்களையும் குற்றப்படுத்தி கைதட்டு பெறலாம். இறுதியில் அந்த ஆணை திருத்தும் பொறுப்பை இரண்டு பெண்களும் மேற்கொள்ள வேண்டும். விமர்சன ரீதியாகவும், கமர்ஷியலிலும் தடுமாறிய படம் 'காத்து வாக்குல காதல்'.

இதேநாளில், ஆண்கள் விடுதியில் சிக்கிக்கொள்ளும் பெண் ஒருவர் எப்படி தப்பிகிறார் என்பதை கதையாக கொண்டு ரீமேக் செய்யபட்டு அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'ஹாஸ்டல்' திரைப்படம் பார்வையாளர்களை சோதித்தது. இந்தப் படம் வெளியாகிய மறுநாள் 'ஆஹா' ஓடிடியில் வெளியான 'பயணிகள் கவனிக்கவும்' திரைப்படம் ரீமேக் என்றாலும் விதார்த்தின் நடிப்பின் மூலமாக கவனம் ஈர்த்தது.

மே 6-ம் தேதி கே.எஸ்.ரவிக்குமார், பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் நடிப்பில் வெளியானது 'கூகுள் குட்டப்பன்'. 'ஆன்ராய்டு குஞ்சப்பன்' படத்தின் ரீமேக்காக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் அந்த படத்தின் மறுஆக்கத்திற்கு நியாயம் சேர்க்க தவறியது. அதேநேரத்தில், 'ஜோசப்' மலையாள படத்தின் ரீமேக்காக வெளியான 'விசித்திரன்' படமும் ரசிகர்களை ஈர்க்க தவறியது. இந்த நேரத்தில் 'அமேசான் ப்ரைம்' ஓடிடியில் வெளியானது 'சாணிக்காயிதம்'. தமிழ் சினிமாவுக்கு புதிய, அதீத வன்முறைக்காட்சிகளுடன் வெளியான இந்த படம், அந்த வன்முறைக்கான உரியை நியாயத்தை சேர்த்த காரணத்தால் தப்பித்தது. புதிய முயற்சியாகவும் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தது.

தொடர்ந்து மே 13-ம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது 'டான்' திரைப்படம். இலக்கைத்தேடி அலையும் ஒருவன் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அதை எப்படி எட்டிப்பிடித்தான் என்பது தான் படத்தின் கதை. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், வழக்கமான நாயக பிம்பத்தை பின்தொடர்ந்து, சுவாரஸ்யமற்ற காட்சிகளாலும், 'எல்லாம் உன் நல்லதுக்குத்தான்' என்ற ஒற்றை வார்த்தை மூலம் பிள்ளைகளை சித்ரவதை செய்யும் பெற்றோர்களின் 'அபியூசிவ் பேரன்டிங்' (abusive parents) மனப்பான்மை ஆதரிக்கும் உள்ளடகத்தை கொண்டதால் விமர்சனதுக்கும் உள்ளானது. அதே நாளில் வெளியான சிபி ராஜ், நிகிலா விமல் நடிப்பில் வெளியான 'ரங்கா' திரைப்படம் பெரிய வெறும் விறுவிறுப்பை மட்டுமே கொண்ட திரைக்கதையால் சொதப்பியது.

வழக்கமான நாயக பிம்ப, ஆண்மையவாத, கருத்தாழமில்லாத படங்களை தமிழ் சினிமா வெளியிட்டுக்கொண்டிருந்த இதே நேரத்தில், மலையாள சினிமாவிலிருந்து 'ஜன கண மன' 'புழு' ஆகிய இரண்டு முக்கியமான படைப்புகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டு படங்களும் பேசிய உள்ளடக்கம் முக்கியமானது. முதல் படம் சாதி, மத, அரசியல் அழுத்தங்கள் குறித்தும், இரண்டாவது படம், சாதிய ஆணவக்கொலை குறித்தும் அடர்த்தியான அழமான கருத்தை முன்வைத்தது. உண்மையில் கலைப்படைப்புக்கான நியாயத்தையும் விவாதத்தையும் இந்த இரு படங்கள் சேர்த்தன.

அப்படியே கொஞ்சம் நகர்ந்து ஆந்திரா பக்கம் சென்றால், மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மே 12-ம் தேதி வெளியானது 'சர்காரு வாரி பாட்டா'. அதே ஆண்மையவாத, பெண்களை தேவைக்கான பயன்படுத்துகிற, சலித்துப்போன மாஸ் பிம்பத்தைக்கொண்ட முதிர்ச்சியற்ற படமாக வெளியாகியிருந்தது. வங்கிகளில் கடன்பெரும் பெரு முதலாளிகளுக்கும், ஏழைகளுக்குமான பாகுபாட்டை கையிலெடுத்த 'சர்காரு வாரி பாட்டா' படம் அந்த கதைக்கான நியாயத்தை நேர்மையுடன் பதிவு செய்திருந்தால் கவனிக்கப்பட்டிருக்கும்.

இந்த தென்னிந்திய சினிமாக்களிலேயே நிலவும் இந்த மூன்று வகையான திரைப்பட உள்ளடக்கத்தையும் அதன் உருவாக்கத்தையும் மேற்கண்ட படங்களின் வழியே நம்மால் அறிய முடியும். இந்த சமநிலையற்ற தன்மை ரசிகர்களின் ரசனையை ஒருபுறம் மேம்படுத்தியும் மறுபுறம் மட்டுப்படுத்தியும் வருகிறது.

இதற்கிடையில் அண்மையில் வெளியான 'நெஞ்சுக்கு நீதி' படம் தமிழ் சினிமா பேசத்தயங்கும் சில வெளிப்படையான வசனங்களையும், காட்சிகளையும் பேசியதன் மூலம் உள்ளடக்கத்தின் வழியே கடந்த மாதம் வெளியான படங்களில் ஒரு அடி முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

13 mins ago

கல்வி

27 mins ago

சினிமா

35 mins ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

39 mins ago

விளையாட்டு

55 mins ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்