முதல் பார்வை | கேஜிஎஃப் 2 - பக்கா மாஸ் உடன் தெறிக்கவிடும் விஷுவல் விருந்து; ஆனால்..?

By கலிலுல்லா

மண்புழுவை மீன் ஒன்று கொத்த முயலும்போது, அது மண்புழுவாக இல்லாமல், தூண்டிலாக இருந்தால் என்ன ஆகும் என்பதுதான் 'கே.ஜி.எஃப் சேப்டர்:2' படத்தின் ஒன்லைன்.

கே.ஜி.எஃப் ராஜாங்கத்தை ஆண்டு கொண்டிருந்த கருடனை கொல்லச்சென்றவன் கொல்லமட்டும் செய்யாமல் ஆளவும் செய்கிறான். ஒட்டு மொத்த கே.ஜி.எஃப்பையும் தனது சுண்டு விரல் அசைவில் வைத்து ஆட்சி செய்பவனை அழிக்கத் துடிக்கும் குள்ளநரிக் கூட்டத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கு எதிரான யுத்தத்தில் ராக்கி என்ன ஆனான் என்பதுதான் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2'.

கன்னட சினிமாவின் பிராண்ட் அம்பாஸிட்டராக உருவெடுத்திருக்கிறார் யஷ். 'சலாம் ராக்கி பாய்' என மற்ற மொழி ரசிகர்களும் அவரை உச்சி முகர்ந்து கொண்டாடுகிறார்கள். அவர் வரும் காட்சிகள் தோட்டாவைப் போல திரையில் தெறிக்கிறது. நீளமான தாடியும், கட்டுடல் மேனியுமாக ரசிகர்களை ஈர்க்கிறார். காதலில் கரைவதும், களத்தில் வெடிப்பதுமாக தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் யஷ்-க்கு வாழ்த்துகள். அழகிய திமிருடன் வலம் வரும் ஸ்ரீநிதி ஷெட்டி, தனக்கு கொடுக்கப்பட்ட ஸ்பேஸை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.

யஷ்ஷுக்கு அடுத்தபடியாக சத்தம் ஒலிப்பது 'சஞ்சய் தத்' இன்ட்ரோக்குதான். மிரட்டலான கெட்டப்-பில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவைத் தருகிறார். பிரகாஷ்ராஜ், ஈஸ்வரி ராவ், மாளவிகா அவினாஷ், சரண் சக்தி ஆகியோர் கதாபாத்திரத்துக்கு தேவையான உழைப்பை கொடுத்திருக்கின்றனர். பிரதமராக ரவீனா டன்டன், அந்தக் கதாபாத்திரத்துக்கு உண்டான உடல்மொழியை உள்வாங்கி நடித்திருப்பது சிறப்பு.

'ரத்தத்துல எழுதுன கதை இது; மையால தொடர முடியாது' என பிரகாஷ்ராஜ் கூறுவதைப்போல, மாஸ் ஆக்‌ஷன் டிராமாவான இந்தக் கதையை அதே ஹைப்புடன்தான் தொடர வேண்டும். தவறினால் படத்தின் ஆன்மாவே குலைந்துவிடும். முதல் பாகத்திலிருந்தே அதே ஹைப்பை கடைசிவரை கொண்டு வர முயன்று வென்றிருக்கிறார் இயக்குநர் பிரஷாந்த் நீல். முதல் பாகம் முழுவதும் கேஜிஎஃப்பை கைப்பற்றும் ராக்கியின் போராட்டம், இரண்டாம் பாகத்தில் அதைக் கைப்பற்றிய பின் தக்கவைக்கும் போராட்டமாக மாறியிருக்கிறது. திரையெங்கும் துப்பாக்கி, தோட்டா, கத்தி, ரத்தம், சண்டை என யுத்தக்களத்துக்குள் நுழைந்து போன்ற உணர்வை கடத்துகிறது.

யஷ்ஷுக்கான மாஸான ஸ்லோமோஷன் காட்சிகள், சண்டைக்காட்சிகள், பழிவாங்கும் காட்சிகள் அப்லாஸ் அல்லுகின்றன. ரத்தம் ஓடும் கதையின் நடுவே மெல்லிய காதலும் இழையோடுவது ரசிக்க வைக்கிறது. 'நீ கை வைச்சது என் காதலி மேல' என்று கூறி கைவைத்தவனை தேடி தேடிக் கொல்வது , ஓடும் ஃபேன் நின்றதும் 'ராணி மாதிரி பாத்துக்குறேன் சொன்னா மட்டும் பத்தாது' என நாயகி கூறும் காட்சிகளில், காதலிக்காக ஹெலிகாப்டரை பறக்கவைத்து ஆச்சரியப்படுத்துவது, பழம் கேட்கும்போது, 'மரமே வாங்கித் தரேன்' என ரீனாவுக்கான ராக்கியின் கசிந்துருகல் ஈர்க்கிறது. பெரும்பாலான பெண்களின் கனவுலக காதலன் கதாபாத்திரம் அது.

'குழந்தைகளையும், பெண்களையும் எதுவும் செய்யக்கூடாது' என்ற கொள்கை கொண்ட வீரன் ராக்கியை கேஜிஎஃப் மக்கள் கொண்டாடுகிறார்கள். விட்டுக்கொடுக்க மறுக்கிறார்கள். 'அவன் கத்தி வீசுன வேகத்துல ஒரு புயலே உருவாகிடுச்சு', 'பரமபத ஆட்டத்துல ஏணி மட்டுமில்ல பாம்பும் கூடவே இருக்கும்' போன்ற வசனங்கள் கவனம் பெற்றாலும், 'யாரோ 10 பேர அடிச்சி டான் ஆகல.. அடிச்ச 10 பேருமே டான்தான்' 'காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு... கர்ஜனையோட பயங்கரமா இருக்கும்' போன்ற முதல் அத்தியாய வெயிட்டேஜ் வசனங்கள் இதில் மிஸ்ஸிங்!

தனது கேமரா லென்ஸ் வழியே ஒவ்வொரு ஃப்ரேம்களையும் அட்டகாசப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் புவன் கௌடா. படத்தின் பெரும்பாலான இருள்சூழ்ந்த காட்சிகளில் நெருப்பை மட்டுமே ஒளியாக்கி விருந்து படைத்திருக்கிறார். அதேபோல, ஸ்ரீநிதி ஷெட்டி கடத்தப்படும் காட்சிகளில் கேமரா ஆங்கிலும், உஜ்வால் குல்கர்னி எடிட் செய்திருக்கும் விதமும் உலகத் தரம்.

ஒலி வடிவமைப்பு, பிண்ணனி இசையில் ரவி பஸ்ரூர் பின்னியிருக்கிறார். 'டூஃபான்' 'தீரா தீரா மின்னல் வால் வீசும் கரிகாலா' ஆகிய பாடல்களின் இசையும், படமாக்கபட்ட விதமும், ஒட்டுமொத்த தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பிலும் 'விஷுவல் ட்ரீட்' ஆக வந்திருக்கிறது படம். அதேபோல விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சின்ன சின்ன ட்விஸ்ட்களுடன் கதை நகரும் போக்கு படத்தை சுவாரஸ்யமாக்குகிறது.

ஆனால், படத்தின் தொடக்கத்தில் வரும் பில்டப் காட்சிகள் தொடக்கத்தில் ரசிக்க வைத்தாலும், இரண்டாம் பாதியைக் கடக்கும்போது திகட்டத் தொடங்கி விடுகிறது. ராக்கி குறித்து மற்றவர்கள் பேசும் வீர தீர வசனங்களும் ஒரு கட்டத்துக்கு மேல் அயற்சியை தருவதை தவிர்க்க முடியவில்லை. நம்ப முடியாததை நம்ப வைப்பதுதான் கேஜிஎஃப் 1-ன் ஹைலைட். ஆனால், இங்கோ நாடாளுமன்ற, பிரதமர் அலுவலக காட்சிகள் என பார்வையாளர்களை டயர்டாக்கும் இடங்களும் ஆங்காங்கே உண்டு.

படத்தின் இறுதியில் நீளம் காரணமாக இரண்டு க்ளைமேக்ஸ்களை பார்த்த உணர்வே எழுகிறது. இதுமட்டுமல்லாமல் 3-ம் பாகத்திற்கான போஸ்ட் கிரேடிட் சீன்களும் உண்டு. சோ, படம் முடிந்ததாக எண்ணி முன்பே கிளம்பிட வேண்டாம்.. சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.

ஒட்டுமொத்தமாக, மொத்தமாக கே.ஜி.எஃப் மாஸான என்டர்டெயின்ட்மென்ட் ஆக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறவில்லை!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

52 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

உலகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்