நிஜ சுதந்திரப் போராளிகளைப் பற்றிய கற்பனைக் கதைதான் ஆர்.ஆர்.ஆர்: ராஜமௌலி

By செய்திப்பிரிவு

தனது அடுத்த திரைப்படமான 'ஆர்.ஆர்.ஆர்' நிஜ சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருவரைப் பற்றிய தனது கற்பனைக் கதை என்று கூறியுள்ளார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி.

'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருப்பவர் இயக்குநர் ராஜமௌலி. அடுத்து, ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் என தெலுங்கு சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்களை வைத்து 'ஆர்.ஆர்.ஆர்' என்ற படத்தை அறிவித்தார். படம் பற்றிய தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.

வியாழக்கிழமை, ஹைதராபாத்தில், திரைப்படம் பற்றிய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் டிவிவி தானய்யா, நாயகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், இயக்குநர் ராஜமௌலி ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் பேசிய ராஜமௌலி, "1898-ல் பிறந்தவர் அல்லுரி சீதராம ராஜூ. 1901ல் பிறந்தவர் கோமரம் பீம். இருவருமே ஒரே மாதிரியான சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவர்கள். இளம் வயதில் வீட்டை விட்டு வெளியேறியவர்கள். அவர்கள் இருவருமே வீட்டை விட்டுச் சென்ற காலத்தில் எங்கிருந்தார்கள், என்ன செய்தார்கள் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.

ஆனால், இருவருமே திரும்ப வந்த பிறகு பழங்குடி மக்களுக்கான நலனுக்காக, சுதந்திரத்துக்காகப் போராடினார்கள். கொரில்லா பாணி தாக்குதல், காவல் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்களைக் கைப்பற்றுவது, மக்கள் சக்தியைத் திரட்டுவது என செயல்பட்டார்கள். இதெல்லாம் நமக்குத் தெரிந்த விஷயங்கள். இருவருமே ஆங்கிலேயர்களின் கைகளால் கொல்லப்பட்டனர்.

இவர்களின் சரித்திரத்தைப் படிக்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் பிறந்தது, ஒரே பிராயத்தில் வீட்டை விட்டு வெளியேறியது, எங்கு சென்றார்கள் என்று தெரியாமல் இருப்பது, மீண்டும் வந்து நாட்டுக்காக ஒரே மாதிரியாகப் போராடுவது எல்லாம் என்னை ஆச்சரியப்படுத்தின. இதைச் சுற்றித்தான் இந்தக் கதையை அமைத்திருக்கிறேன்.

சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த மாவீரர்கள், ஒருவரை ஒருவர் சந்திக்காதவர்கள், சம்பந்தம் இல்லாதவர்கள், இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய அந்தச் சமயத்தில், ஒருவருக்கு மற்றொருவர் சுதந்திரப் போராட்டத்துக்கான உந்துதலாய் இருந்திருந்தால், பின்வரும் காலத்தில் அவர்களின் போராட்டத்துக்கான காரணம், இந்த நட்பாய் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற எனது கற்பனையே இந்தப் படம்.

இது அனைவருக்கும் தெரிந்த கதை அல்ல. முழுக்க முழுக்க எனது கற்பனைக் கதை. இரண்டு நிஜ சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய கற்பனைக் கதை. இதை மிகப்பிரம்மாண்டமாக எடுக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட ரூ.350 கோடி முதல் ரூ.400 கோடி வரை படத்தின் பட்ஜெட் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து முக்கிய இந்த மொழிகளிலும் அடுத்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்