பயம், பசி, போராட்டம்... -  ‘ஆடுஜீவிதம்’ நிஜ நாயகன் நஜீப்பின் உலுக்கும் கதை!

By கலிலுல்லா

இந்த வாழ்க்கை பெரும் பேறுடையது. ஒருவேளை நீங்கள் நஜீப்பாக இல்லாமல் இருந்திருந்தால்! - கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் உங்களை கொடுமைப்படுத்தும் ஒருவரைத் தவிர வேறெந்த மனிதர்களையும் பார்க்காமல், மாற்று உடையில்லாமல், உண்ண உணவில்லாமல், குளிக்க நீரில்லாமல் அழுக்கடைந்த உடையில், வாழ்வின் மொத்த விரக்தியையும் சுமந்துகொண்டு திரிந்த நஜீப்பாக இல்லாதது நீங்கள் செய்த பாக்கியம். யார் இந்த நஜீப்? அவருக்கும் ‘ஆடுஜீவிதம்’ படத்துக்கும் என்ன தொடர்பு என்று பார்ப்போம்.

வலிகளின் வேர்களைத் தேடி எழுத்தாக வடித்து கடந்த 2008-ம் ஆண்டு எழுத்தாளர் பென்யமின் (Benyamin) எழுதிய நாவல் ‘ஆடுஜீவிதம்’. 8 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக வாசிக்கப்பட்ட நாவல். உண்மைச் சம்பவத்தை ரத்தமும், சதையுமாக எழுத்தின் வழியே காட்சிப்படுத்தியிருந்த நாவலின் திரையாக்கம்தான் ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம்.

யார் இந்த நஜீப்? - அது 1993 காலக்கட்டம். கேரளாவின் ஆலப்புழாவின் ஹரிபாட் அருகே உள்ள கிராமமான ஆராட்டுப்புழாவைச் சேர்ந்தவர் நஜீப். கல்வியின் உறைவிடமான கேரளாவில் போதிய கல்வியறிவில்லாத நஜீப் தன் சொந்த ஊரைவிட்டு வெளியேறி வெளிநாட்டுக்குச் சென்று வேலை தேடி குடும்பத்தை காப்பாற்ற நினைத்தார். ‘சவுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சேல்ஸ்மேன் வேலை காலியாக உள்ளது’ என்று ஏஜென்ட் ஒருவர் சொன்ன பொய்யை நம்பியது வாழ்வில் அவர் செய்த மிகப்பெரிய பிழை.

விசா பெறுவதற்கு பணம் தேவை. என்ன செய்வதென்று தெரியாதவர். தனக்கென இருந்த 5 சென்ட் நிலத்தை விற்று அதன் மூலம் கிடைத்த ரூ.55 ஆயிரம் பணத்தை கொடுத்திருக்கிறார். கேரளாவிலிருந்து மும்பை சென்று அங்கிருந்து விமானம் மூலமாக சவுதி அரேபியாவை அடைந்த அவர், ரியாத்துக்கு முகவர் ஒருவரால் அழைத்துச் செல்லப்படுகிறார்.

“நான் அங்கு சென்று இறங்கியதும், அரபுநாட்டைச் சேர்ந்த ஒருவர் என்னை வண்டியில் அழைத்துக் கொண்டு சென்றார். சில மணிநேரம் பயணித்து நாங்கள் சென்றபோது மரங்களையோ, கட்டடங்களையோ பார்க்க முடியவில்லை. வெறும் கட்டாந்தரையை மட்டுமே பார்க்க முடிந்தது. எனது அரபு முதலாளி மற்றும் அவரது சகோதரரைத் தவிர வேறு ஒரு மனிதரையும் நான் பார்க்கவில்லை. எனக்கு சம்பளமாக ஒரு ரியால் கூட கொடுக்கப்படவில்லை” என்கிறார் நஜீப்.

பயம், பசி, போராட்டம்: வெயிலூறிக் கிடக்கும் அந்தப் பாலைவனத்தை அடைந்ததும், கொண்டு வந்து விட்டவர் புறப்பட தனியொரு ஆளாக உயிரையும், பயத்தையும் பற்றிக்கொண்டு நின்றிருந்த நஜீப்புக்கு நாள்தோறும் அழுகை மட்டுமே ஆறுதல். 700 ஆடுகளை தனியொரு ஆளாக மேய்க்க வேண்டும். தங்குவதற்கு சிறிய கொட்டகை. அதிலும் முதலாளியே படுத்துக்கொள்வார். உணவுக்கு காய்ந்த ரொட்டி (kuboos). ஆட்டுப் பாலை ரொட்டியில் நனைத்து சாப்பிட்டு உயிர்வாழ்ந்திருக்கிறார்.

“அந்த ஆடுகள் வருடக்கணக்கில் குளிப்பாட்டப்படாமல் இருப்பதால் பாலில் துர்நாற்றம் வீசும். ஆனால், என்னிடம் சாப்பிட வேறு எதுவும் இல்லை. பால் இல்லாமல் சாப்பிட முடியாத அளவுக்கு ரொட்டி வறண்டு இருக்கும். தண்ணீர் இல்லாததால் குளிக்க முடியாது. ஒரேயொரு துணி மட்டுமே உடுத்தியிருந்தேன்.

தலைமுடியும், தாடியும் நீண்டு சுத்தமில்லாமல் தவித்தேன். தொடக்கத்தில் நாற்றம் குமட்டியது. பின்பு பழகிவிட்டது. என் வாழ்க்கை இப்படியே முடிந்துவிடும் என நினைத்தேன். அரபு நாட்டைச் சேர்ந்தவர் என்னிடம் ஆடுகளில் பால் கறக்கச் சொன்னார். நான் கறந்து பார்த்தேன், பால் வரவில்லை. இதனால் அவருக்குக் கோபம் ஏற்பட்டு என்னைத் தாக்கினார்.

பின்னர் எப்படிப் பால் கறப்பது என்று அவர் சொல்லித்தந்தார். ஆடுகளை மார்க்கெட்டுக்குக் கொண்டு போவதற்காக அவர்கள் அவ்வப்போது வருவார்கள். சில ஆடுகளைக் குறிப்பிட்டுப் பிடிக்கச் சொல்வார்கள். நான் அவர்களின் மொழி புரியாமல் கறுப்பு ஆடைப் பிடிக்கச் சொன்னால் வெள்ளை ஆட்டைப் பிடிப்பேன். அதனால் அவர்கள் கோபத்துக்கு ஆளானேன்” என கண்ணீருடன் பேட்டி ஒன்றில் நஜீப் நினைவுகூர்ந்திருந்தார்.

8 மாத கர்ப்பிணி மனைவியை விட்டு சவுதி புறப்பட்ட நஜீப்புக்கு, ஒருபுறம் குடும்பத்தின் நிலையும், குழந்தையின் நினைப்பும் வாட்டி எடுக்க, மறுபுறம் பயமும், வலியும் இணைந்துகொள்ள 2 ஆண்டுகளை போராடி கடந்திருக்கிறார். பாம்புகளின் பாதையில் வழிமறித்து படுத்து இறக்கக் கூட துணிந்திருக்கிறார். ஆனால், வாழ்க்கை அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறது.

போராடி மீள்தல்: 1995-ல் அவரது அரபு முதலாளி திருமணம் ஒன்றுக்காக சென்றிருந்தார். இந்த தருணத்துக்காக காத்திருந்த நஜீப், எதையும் யோசிக்காமல் அங்கிருந்து நிற்காமல் ஓடிக்கொண்டேயிருந்தார். மூச்சிறைக்கும் அந்த ஓட்டத்தில் எதிர்கால நம்பிக்கையும் கலந்திருந்தது. வழியில் அவரைப் போலவே மோசமான நிலையில் ஆடு மேய்க்கும் மற்றொரு மலையாளியைப் பார்த்ததும் கண்களில் கண்ணீர் ததும்பியிருக்கிறது.

“அவர் அருகில் வந்து தப்பிக்க வேண்டும் என்று மலையாளத்தில் கிசுகிசுத்த பிறகுதான் அவர் மலையாளி என்பது புரிந்தது. அவருடைய நிலை என்னுடையது போலவே பரிதாபமாக இருந்தது. அவர் தனது முதலாளியின் கண்காணிப்பில் இருந்ததால், அவரால் தப்பிக்க முடியவில்லை. பின்னாளில் அவரும் தப்பித்திருக்க கூடும். ஒன்றரை நாட்கள் ஓடிய பிறகு ஒரு சாலையைப் பார்த்தேன்.

பல மணி நேரத்துக்குப் பின் ஒரு வாகனம் எனக்கு உதவ முன் வந்தது. அதில் இருந்த நல் உள்ளம் படைத்த அரேபியர் என்னை வண்டியில் ஏற்றிக்கொண்டு ரியாத்தில் இறக்கிவிட்டார். அங்கு இறங்கி ஒரு மலையாளி உணவகத்தை கண்டுபிடித்தேன். அவர்கள் எனக்கு உணவும், புதிய ஆடையும் கொடுத்தார்கள். 2 வருடத்துக்குப் பின் குளித்து, ஷேவ் செய்து முடிவெட்டினேன். புதிதாக பிறந்த உணர்வு” என்கிறார் நஜீப்.

பாஸ்போர்ட், விசா இல்லாமல் போலி முகவர்கள் மூலம் வந்ததால், சட்டத்தின் முன் சரணடைந்தார் நஜீப். அவருக்கு 10 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. “சிறை எனக்கு சொர்க்கமாக தெரிந்தது. காரணம் அங்கே எனக்கு சாப்பாடு கிடைத்தது. சுத்தமாக இருந்தது. தூங்க இடம் இருந்தது” என தன்னுடைய முந்தைய வாழ்க்கையை ஒப்பிடும்போது சிறை வாழ்க்கை மேலானது என்கிறார் நஜீப்.

சட்டப் போராட்டத்துக்குப் பின் இறுதியாக அந்த நாள் வந்ததது. நஜீப் வீடு திரும்பினார். அவர் தனது மகன் சபீர் சந்திக்கும்போது அவனுக்கு 2 வயது. பின்னர் ஓமன் சென்ற நஜீப் அங்கு நல்ல முறையில் பணியாற்றியிருக்கிறார். சொல்லப்போனால் அவரது மகனும் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

விளையாட்டு

53 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

மேலும்