PK - ஓர் உயிரோட்டமான திரை அனுபவம்

By சினிமா பித்தன்

இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு செல்பவர்கள் உறவினர்கள், நண்பர்கள், காதல், உணவு, ஆலயம் இப்படி எத்தனையோ விஷயங்களை மிஸ் செய்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இப்பட்டியலில் முக்கியமாக இடம் பெற வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் சினிமா.

ஹாலிவுட்டின் தலைவாசலாகிய அமெரிக்காவிலிருந்து சினிமாவை மிஸ் செய்கிறேன் என்று நான்கூறுவதை வேடிக்கையாக உணரலாம். ஒரு திரைப்படத்தை தனி அறையில் அமர்ந்து கொண்டு பார்த்தால், நம் ஊரில் வீட்டில் பார்ப்பதற்கும் இங்கே திரையரங்கில் பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசங்களை உணர முடியாது. திரையரங்கம் இருக்கும், 70mm திரை இருக்கும், கனகனமான ஒலிப்பெருக்கிகள் இருக்கும் இருந்தும் திரையரங்கில் படம் பார்க்கிற உணர்வு பெரிதாக ஏற்படுவதில்லை. நம் ஊரில் கிடைக்கின்ற உயிரோட்டம் மிக்க அனுபவம் வெளிநாட்டில் எங்கு போனாலும் கிடைக்காது என்றே நினைக்கிறேன்.

எப்போது போனாலும் திரையரங்கத்தில் பத்து பேருக்கு மேல் அமர்ந்திருப்பதைக் காணமுடியாத ஒரு நிலை சில நாட்கள் என்னை திரையரங்கத்திடமிருந்து விலக்கி வைத்தது. இங்கே சினிமாவில் பின்னணி இசை பின்னணியில் தான் ஒலிக்கிறது. காட்சிகளை உசத்திக் காட்டும் இரைச்சல் பிறந்திட வழியில்லை, அரங்கத்தை அலங்கரிக்கும் கைதட்டல் இல்லை, விசில் பாய்ச்சல் இல்லை. கண்ணீரோ, புன்னகையோ, ஆர்பரிப்போ, கோபமோ இதுயாவும் தனி மனிதன் தன் மனதுக்குள் உணர்ந்திடும் வகையில் தான் அமைந்துள்ளது.

PK படம் பார்க்க சென்றேன்.

எப்போதும் போல் இல்லாமல் திரையரங்கில் நாற்பது பேர் கூடிஇருந்தார்கள், நெஞ்சார்ந்த உவகையுடன் மக்கள் சிரிக்கின்ற சிரிப்பு சத்தத்தை முதன்முறையாக இங்கே உணர்கிறேன். வெகு நாட்கள் கழித்து ஓர் உயிரோட்டமிக்க திரை அனுபவத்தை PK தான் எனக்கு அளித்தது.

வசூல் வேலை செய்யும் தாதா, உயிர்களின் மகத்துவத்தை அறிந்து அன்பு பயக்கும் Munna Bhai MBBS, அதே தாதா வன்முறையை முழுவதுமாக விட்டுவிட்டு காந்தியின் பாதையை நாடிச் செல்லும் Lage raho Munna Bhai, மதிப்பெண் அறிவல்ல என்று கூறி சமுதாயத்தில் வர்த்தகம் ஈட்டும் நோக்கத்தில் புகட்டப்படுகின்ற கல்வி முறையை எள்ளி நகையாடிய Three Idiots இப்படிப்பட்ட அற்புதமான படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி'.

கிடைப்பதற்கு அரிதான பூனே திரைக் கல்லூரியில் எடிட்டிங் பயின்றவர் இவர். இவர் இயக்கிய படங்கள் எல்லாவற்றிலும் புதுமையான கதைக்களமும், ஹிந்தி படங்களுக்கே உரித்தான முலாம் பூசிய டிராமாக்கள் கலந்திருப்பதை உணரலாம். மொழி என்ற வரையறையும் கடந்து உணர்வுகளால் நம்மை தொடும் தன்மையுடையன இவரின் படைப்புகள்.

வசூல் ராஜாவும், நண்பனும் இவருடைய படங்களின் ரீமேக்களே. இவரது படம் பார்த்த பிறகு நம்முள் சில கேள்வி பிறப்பதையும், நெஞ்சர்ர்ந்த உவகை பிறப்பதையும் தவிர்க்க முடியாது. இப்போது இவர் இயக்கத்தில் அமீர்கான் நடித்து வெளிவந்துள்ள PK-வும் இந்த வட்டத்தில் தான் விழுகிறது.

புதிதாக ஒரு மனிதன் நம் உலகத்திற்கு வந்தால் நம் வாழ்வுமுறையையும், வழிமுறைகளையும் பார்த்து அவனுள் என்னென்ன குழப்பங்கள் பிறக்கும் என்ற கேள்வியின் அடிப்படையிலே PK படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

வேற்று மண்டலத்திலிருந்து நமது பூமி எப்படி இருக்கிறது, இங்குள்ள உயிர்கள் எப்படி இருக்கிறார்கள் என்கிற வியப்புகளோடு ஒரு வேற்றுகிரக விண்வெளி வீரர் நம் கண்டத்திற்கு வருகிறார். அவர் திரும்பி செல்வதற்கான கருவியின் சாவி இறங்கிய முதல் நாளிலே களவாடப்படுகிறது. தான் இழந்தவற்றை நமது ஹீரோ அமீர் கான்' கண்டறிந்தரா இல்லையா என்பது தான் படத்தின் அடித்தளம்.

அமீர்கான் தான் தேடும் பாதையில் மனிதர்களை பற்றியும், கடவுளைப் பற்றியும் அறிந்ததென்ன? அமீர்கானால் அவர் சூழ்ந்துள்ள சமூகம் பெற்றதென்ன? என்பது தான் படத்தின் கரு.

ஒரு குழந்தை எப்படி உலகத்தில் பிறக்கிறதோ அதைப்போல நம் உலகத்திற்கு வருகிறார் அமீர். நம் கண்டத்தில் மனிதர்கள் உடை அணிந்திருப்பதை பார்த்து இவர் வியக்கின்ற விதம், தன் குழப்பங்களைப் பற்றியும் தான் பெற்ற தெளிவுகளை பற்றியும் அமீர் விளக்குகின்ற விதம் நம்மை வியக்க வைக்கிறது. உடைகளில் தொடங்கி மொழிக்குள் புகுந்து இவரின் குழப்பங்கள் கடவுளுக்குள் சரணாகதி அடைகிறது.

நம்மை படைத்த கடவுள் ஒருவன், நாம் படைக்கின்ற கடவுள்கள் ஆயிரம். அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றால் அவரை சென்றடைய தூதர்கள் எதற்கு, கடவுளின் பெயரில் நம்முள் பேதங்கள் எதற்கு? கொலைகள் எதற்கு? மேனேஜர் எதற்கு? என்பன போன்ற எக்கச்சக்கமான சிந்தனைகளை PK' எடுத்து வைக்கிறான்.

மேலும், ஒவ்வொரு மதங்களின் வழிமுறைகளினாலும், கோட்பாடுகளாலும் தன்னுள் எழுகின்ற குழப்பங்களை எடுத்து வைக்கிறான்.

"கடவுளே உன்னை எல்லா மத அடிப்படையிலும் பிரார்த்திக்கிறேன்.. நான்முட்டிபோட வேண்டுமா.. சலாம் போட வேண்டுமா.. நமஸ்காரம் செய்ய வேண்டுமா? எல்லாவற்றையும் செய்கிறேன். மாலையில் விரதம் இருக்கிறேன், காலையில் விரதம் இருக்கிறேன், உடம்பை சாட்டையால் அடித்துக் கொள்கிறேன் இத்தனை செய்தும் ஏன் எனது கோரிக்கையை கேட்க மறுக்கிறாய்? வாழ வழியின்றி தவிக்கிறேன். நண்பர்கள் இல்லை. நான் எந்த வகையில் தொழவேண்டும், யாரைத் தொழவேண்டும் என்று நீ தான் கூற வேண்டும்'" என்று வெள்ளந்தியாக அமீர்கான் கதறும் போதுஅவர் கதாபாத்திரம் மனதோடு ஒன்றிப் போகிறது.

தனி மனித பார்வைகளை கடந்ததும் PK அனைத்து மதத்தவர் மனதிலும் வெறுப்பை ஈட்டிடாத காரணம் அமீர் கானின்'PK' கதாபாத்திரத்தில் அமைந்திருந்த நேர்மையே. உலகத்தை புரிந்து கொள்ள ஒரு குழந்தை கேட்கின்ற கேள்வியை போலத் தான் PK படமும். நிறைய முறை குழந்தைகளின் கேள்விகளிலிருந்து நமக்கு பல தெளிவுகள் பிறக்கிறது அல்லவா! அப்படித் தான் படம் பார்த்த பின் கிடைக்கின்ற அனுபவமும்.

புகுத்தப்படாத பாடல்கள், அப்பழுக்கற்ற நகைச்சுவை, நிறைவான இயக்கம் அனைத்தும் இணைந்து PK-வை ஓர் இதமான அனுபவமாக உணரவைக்கிறது. ஏதோ வசனங்களோ, அபத்தமான காட்சிகளோ இல்லாமல் யதார்த்தமாக மனதுக்குள் இழைந்து காட்சிகள் புன்னகை பிறக்கச் செய்கின்றன.

இந்த இடத்தில் படம் சர்ச்சையாக மாறிடக் கூடுமோ? என்று நாம் நினைக்கும் போது ராஜ்குமார் ஹிரானி தனக்கே உரித்தான மாற்றுப் பாதையில் அழைத்துச்சென்று யார் மனதையும் கடிந்திடாது பார்த்துக் கொண்டிருக்கிறார். இவரது படங்களில் யதார்த்தமாக காணப்படுகின்ற ஒரு நாடகத் தன்மை PK-'விலும் அமைந்திருக்கிறது. இருப்பினும், கதாபாத்திரங்களின் கண்ணியம் அதை திகட்டிடச் செய்யாமல் காத்திருக்கிறது.

உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை வியந்து வியந்து அதை விசித்திரமாக கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் PK அமீர் கானின்' நடிப்பும், அவருடைய முகபாவங்களும் அப்படியே கண்ணுக்குள் நிற்கிறது. அவருக்கு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சர்யம் இல்லை. PK ஒரு நெஞ்சார்ந்த அனுபவம்.

சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம்>https://www.facebook.com/CinemaPithan

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

56 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்