இங்கிலாந்து பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திட்டவை எவை? - ஒரு தெளிவுப் பார்வை

By பால. மோகன்தாஸ்

நாட்டு மக்களில் 7-ல் ஒருவர் உணவு இன்றி உறங்கச் செல்கிறார்; 40 சதவீத மக்கள் உணவுக்கான செலவைக் குறைத்திருக்கிறார்கள்; ஏறக்குறைய 50 சதவீத மக்கள் மின் கட்டணத்தை குறைப்பதற்காக வெந்நீரில் குளிப்பதை தவிர்த்திருக்கிறார்கள் - இது எல்லாம் எந்த நாட்டில் தெரியுமா..? உலகின் அனைத்துக் கண்டங்களிலும் பல்வேறு நாடுகளை அடிமைப்படுத்தி, சூரியன் மறையாத நாடு என கடந்த நூற்றாண்டில் எந்த நாடு மார்தட்டிக்கொண்டதோ அந்த இங்கிலாந்தில்தான்.

இங்கிலாந்தின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குச் சென்றதால், அதன் அரசியல் ஆட்டம் கண்டது. பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகினார். அவரை அடுத்து 45 நாட்களுக்கு முன்பாக பிரதமராக பதவியேற்ற லிஸ் ட்ரஸும் தற்போது பதவி விலகியிருக்கிறார். இதையடுத்து, அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எதிர்கொள்ள இருக்கிறது. 3 மாதங்களில் 3 பிரதமர்களை பார்த்த நாடு என்ற பெயரை இங்கிலாந்து பெறப் போகிறது. அரசியல் நிலையின்மை காரணமாக அந்த நாடு பொருளாதார ரீதியாக மேலும் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

பொருளாதார சரிவு காரணமாக அரசியல் நிலையின்மை ஏற்பட்டுள்ளதை அடுத்து, இங்கிலாந்தின் பொருளாதார நிலை, சர்வதேச அளவில் விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. உண்மையில் இங்கிலாந்தின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது? சற்றே விரிவாகப் பார்ப்போம்.

தொழில் துறை உற்பத்தியை சார்ந்த நாடு இங்கிலாந்து. இங்கிலாந்தில் விவசாய உற்பத்தி மிக மிக குறைவு. அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உணவுப் பொருட்களின் பங்கு வெறும் 0.60 சதவீதம் மட்டுமே. இதுவே இந்தியாவில், 20 சதவீதத்திற்கும் மேல். உணவுப் பொருள் உற்பத்தி குறைவால், அந்த நாடு ஏறக்குறைய 50 சதவீத உணவுப் பொருட்களை இறக்குமதி மூலமே ஈடுகட்டுகிறது. விவசாய உற்பத்திக்கு உரிய முக்கியத்துவம் தராமல், தொழில் துறைக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்ததால் பிற நாடுகளை சார்ந்து இருக்க வேண்டிய கட்டகாயம் இங்கிலாந்துக்கு ஏற்பட்டது.

தொழிற் துறைக்கு பின்னடைவு: இங்கிலாந்தின் மக்கள் தொகை 6.80 கோடி மட்டுமே. நாட்டின் தொழில் துறை மூலம் கிடைக்கும் உற்பத்தியோ நாட்டு மக்களின் தேவைக்கும் மிக அதிகமானது. தேவைக்கு அதிகமான உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்றால், இங்கிலாந்தின் உற்பத்திப் பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் போட்டி போடும் அளவுக்கு இல்லை. பணியாளர்களுக்கு அதிக ஊதியம் கொடுப்பதால், அதன் உற்பத்தி செலவு அதிகம். இதனால், அதன் உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகம். ஆனால், சீனாவோ, மிகக் குறைந்த விலைக்கு பொருட்களை விற்கக்கூடிய நாடாக சர்வதேச சந்தையை ஆக்கிரமித்திருக்கிறது. இதன் காரணமாக இங்கிலாந்தின் தொழிற் துறைக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

ஏற்றுமதியை அதிகரிக்க முடியாத அதேநேரத்தில் உணவுப் பொருட்கள், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை அதிக அளவில் இறக்குதி செய்தாக வேண்டிய கட்டாயம் இங்கிலாந்து அரசுக்கு உள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்து வந்த நாடு உக்ரைன். எரிபொருளை ஏற்றுமதி செய்து வந்த நாடு ரஷ்யா. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக இங்கிலாந்துக்கான இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு, அமெரிக்கா ரஷ்யாவை எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதால், இங்கிலாந்தும் ரஷ்யாவை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

காரணங்கள்: உணவுப் பொருள் உற்பத்தி குறைவு, தொழில்துறை மூலம் உற்பத்தியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை, உணவுப் பொருட்களையும், எரிபொருளையும் இறக்குமதி செய்தாக வேண்டிய கட்டாயம், கரோனா ஏற்படுத்திய பாதிப்பு, உக்ரைன் - ரஷ்யா போர் என பல்வேறு அம்சங்கள் சேர்ந்ததால், இங்கிலாந்தின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. தற்போது அந்த நாட்டின் பணவீக்கம் 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத உயர்வு. டாலருக்கு நிகரான பவுண்ட்டின் மதிப்பும் கடும் சரிவை சந்தித்து வருகிறது. முதலீடுகள் குறைந்ததால் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமை பாதிக்கப்பட்டிருப்பதால் மக்களின் பொருளாதார நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வால் செலவு அதிகரித்திருப்பதால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவே, இங்கிலாந்தில் 7-ல் ஒருவர் உணவு இன்றி உறங்கச் செல்கிறார்; 40 சதவீத மக்கள் உணவுக்கான செலவை குறைத்திருக்கிறார்கள்; ஏறக்குறைய 50 சதவீத மக்கள் மின் கட்டணத்தை குறைப்பதற்காக வெந்நீரில் குளிப்பதையும், கடுங்குளிரைப் போக்கி சூட்டை உண்டுபண்ணும் எந்திரத்தைப் பயன்படுத்துவதையும் தவிர்த்திருக்கிறார்கள்.

லிஸ் ட்ரஸ் செய்த தவறுகள்: பொருளாதார நெருக்கடி காரணமாகவே பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். அவரை அடுத்து லிஸ் ட்ரஸ், நாட்டின் புதிய பிரதமரானார். ஆனால், தேர்தல் பிரச்சாரத்தின்போது தன்னை ஆதரிக்காத காரணத்தால், கட்சியில் உள்ள திறமைசாலிகள் பலரை, பதவியில் அமர்த்துவதை தவிர்த்தார். இதன் காரணமாக அவரது அமைச்சரவையில் திறமைசாலிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.

தொழில்துறை வரியை பெருமளவில் குறைப்பதற்கான லிஸ் ட்ரஸ்ஸின் நடவடிக்கை அவரது பொருளாதார செயல்பாட்டை கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியது. அரசின் முடிவுக்கு இங்கிலாந்தின் மத்திய வங்கியான சென்டரல் பேங்க் ஆஃப் இங்கிலாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தது. லிஸ் ட்ரஸ் முட்டாள்தனமாக இயங்கி வருவதாக அவரது கட்சி எம்.பிக்களே விமர்சிக்கத் தொடங்கினார்கள்.

சொந்த கட்சியினரின் எதிர்ப்பை அடுத்து பதவி விலகும் முடிவை அறிவித்தார் லி ட்ரஸ். விரைவில் வேறு ஒருவர் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். ஆனால், யார் பிரதமராக பதவி ஏற்றாலும் எதுவும் ஒரே இரவில் மாறிவிடாது என கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள். குறைந்தபட்சம் ஓராண்டு காலத்திற்கு இங்கிலாந்து கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தே ஆக வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.

அதேநேரத்தில், இங்கிலாந்து எனும் நாட்டை நிர்வகிப்பதில் முக்கிய பங்காற்றும் பல்வேறு அமைப்புகள் சுதந்திரமாகவும் வலிமையாகவும் இருப்பதால், அந்த நாடு விரைவில் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டு எழும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். அதோடு, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவும் அமெரிக்காவின் ஆதரவும் இங்கிலாந்துக்கு இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தொழில் துறை உற்பத்தியில் மட்டுமின்றி, உணவுப் பொருள் உற்பத்தியிலும் ஒரு நாடு தற்சார்புடன் இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை இங்கிலாந்து தற்போது உலகிற்கு உணர்த்திக்கொண்டிருக்கிறது. ஆயுத உற்பத்தியைக் கொண்டு உலகை ஆண்ட ஒரு நாடு, தற்போது உணவிற்காக தவித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் பெரும் சோகம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

5 mins ago

வணிகம்

17 mins ago

இந்தியா

42 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்